தமிழக பா.ஜ.க. தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் உள்பட தலைவர்கள் பலர் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர்;

பொன். ராதாகிருஷ்ணன்; அனைத்து தீய செயல்களுக்கும் விடை கொடுத்து தமிழன் உரிமைகள் அனைத்தும் காக்கப்பட்டு தமிழ்ப் புத்தாண்டு சித்திரை ஒன்றிலே நிலை நிற்க வழிகாட்டும் என்று நம்பி அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஜெயலலிதா: தமிழ் மக்கள் அனைவருக்கும் என் அகம் கனிந்த தமிழ்ப் புத்தாண்டு நல் வாழ்த்துகள்.சர்வாதிகார குடும்ப ஆட்சியைத் தகர்த்தெறிந்து புதிய வளர்ச்சியையும் மலர்ச்சியையும் விடுதலையையும் தமிழக மக்கள் அனைவருக்கும் வழங்கும் வகையில் மக்களாட்சி மலரும் ஆண்டாக, தடைக்கற்களை படிக்கற்களாக மாற்றும் ஆண்டாக, இருண்ட தமிழகத்தை ஒளிமயமாக மாற்றும் ஆண்டாக மாற்றங்களை மக்களுக்குத் தரக் கூடிய ஆண்டாக இந்தப் புத்தாண்டு விளங்கட்டும்

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ: அனல் வெயிலோடு தொடங்கும் சித்திரை முதல் நாளைக் கொண்டாடும் வழக்கம் தமிழகத்தில் தொடர்ந்து இருந்து வருகிறது. மதுரையில் லட்சக்கணக்கான மக்கள் கூடும் சித்திரைத் திருவிழா நடக்கிறது. சித்திரைத் திங்களில் முழு நிலவு நாளில் காவிரிப்பூம்பட்டினத்து மக்கள் கடற்கரையில் கூடி, இந்திர விழா கொண்டாடியதாக சிலப்பதிகாரம் கூறுகிறது.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வீ.தங்கபாலு: கடந்த சித்திரைத் திங்கள் முதல் இதுகாறும் தமிழகத்தில் நிகழ்ந்த எண்ணற்ற நல்லவை மேன்மேலும் தொடர்ந்து மக்களின் அமைதி, நிம்மதியான வாழ்வு சிறந்திடவும், சாதி, மத பேதமின்றி அனைவரிடையேயும் நல்லிணக்கம் மேம்படவும் நாட்டில் வன்முறை ஒழிந்து ஒற்றுமை, ஒருமைப்பாடு உயர்ந்திடவும் சித்திரைத் திருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Tags:

Leave a Reply