கோடைக்காலம் என்றாலே 'ஜில்'லென இருக்கக்கூடிய உணவுப் பொருட்களின் மீது நம்முடைய ஆர்வம் திரும்பி விடுகிறது. அதுமட்டுமல்ல, எல்லாக் காலங்களிலும் எளிதில் கெட்டுவிடக்கூடிய உணவுப் பொருட்களை குளிர்சாதனப் பெட்டியில் தான் வைத்துப் பாதுகாக்கிறோம். உலகின் எந்த மூலையில் உள்ள ஓர் இடத்துக்கும் கெடாமல் பொருட்களை எடுத்துச்செல்ல இந்த முறைதான் உதவுகிறது. இதற்கு

அடித்தளமிட்டவர், மேரி ஏஞ்சல் பென்னிங்டன்.

அமெரிக்காவில் உள்ள நாஷ்வெயில் கிராமத்தில், 1872-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 8-ந் தேதி பிறந்தார், மேரி. தந்தை ஹென்றி பென்னிங்டன் – தாய் சாரா மொலோனி. ஹென்றிக்கு தோட்டப் பராமரிப்பில் அதிக ஆர்வம் இருந்தது. எனவே, அவருடன் இணைந்து மேரியும் தோட்டத்துச் செடிகளோடு பொழுதைக் கழித்தார். ஏராளமான காய்கறிகள், பழங்கள் அவர்களுடைய தோட்டத்தில் விளைந்தன. ஆனால், சில நாட்களிலேயே அவை அழுகி விட்டன. இருந்தாலும், குளிர்காலத்தில் மட்டும் அவை நீண்ட நாட்களுக்கு அழுகாமல் இருந்தன. அதற்கான காரணம் சிறுமியாக இருந்த மேரிக்குப் புரியவில்லை.

1890-ம் ஆண்டு பள்ளிப்படிப்பை முடித்த மேரி, பென்சில்வேனிய பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட டவுன் சயின்டிபிக் கல்வியகத்தில் இளம் அறிவியல் பட்ட வகுப்புகளுக்குச் சென்றார். அந்த நாட்களில், பெண்கள் பள்ளிக்கல்விக்கு மேல் படிக்கக்கூடாது என்று அமெரிக்காவில் சட்டமே இருந்தது. வேண்டுமானால் பட்டப்படிப்பை படிக்கலாம். ஆனால், பட்டம் தர மாட்டார்கள். ஆண்களுக்கு மட்டுமே பட்டம் வழங்கப்படும். எனவே, உயிரியலில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றதற்கான ஆதாரச் சான்றிதழ் மட்டுமே 1892-ம் ஆண்டு மேரிக்கு வழங்கப்பட்டது. 1890-ல் பள்ளிப்படிப்பை முடித்தவர், 1892-ம் ஆண்டே பட்டப்படிப்பை எப்படி முடித்தார்? அதுவும் அந்த நாட்களில் பட்டப்படிப்பு என்பது 4 வருடங்கள். அதை ஒன்றரை வருடங்களில் முடித்த பெருமை மேரியையே சேரும்.

நேஷனல் இன்வென்டர்ஸ் ஹால் ஆப் பேம்' என்ற அமெரிக்கக் கண்டுபிடிப்பாளர்கள் பற்றிய நூலில், மேரியைப் பற்றிய சுவையான தகவல் ஒன்று உள்ளது. அவருக்கு இளம் அறிவியல் பட்டம் வழங்க முடியாத பென்சில்வேனிய பல்கலைக்கழகம், முனைவர் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது. தவிர்க்க இயலாத சமயங்களில் பெண்களுக்கு முனைவர் பட்டம் தரலாம் என்ற சட்டத்தில் உள்ள சலுகையைப் பயன்படுத்தி, இந்தப் பட்டம் அவருக்கு வழங்கப்பட்டது என்பது தான் அந்தத் தகவல்.

1904-ம் ஆண்டு பிலடெல்பிய சுகாதாரத்துறை, தனது துறை ஆய்வக மேற்பார்வையாளராக மேரியை நியமித்தது. தூய உணவு மற்றும் மருந்து சட்ட அமலாக்கப் பிரிவிற்கு 1906-ம் ஆண்டு அவர் விண்ணப்பித்தபோது, உணவுப்பொருட்களை பாக்டீரியாவின் தாக்குதலில் இருந்து காப்பாற்ற குறைந்த வெப்பநிலையே சிறந்தது என்பதைக் கண்டுபிடித்து, ஆய்வுக்கட்டுரையாகச் சமர்ப்பித்திருந்தார். அதுவரை உயர்வெப்பமே உணவைப் பாக்டீரியாக்கள் தாக்காமல் இருக்க சிறந்தது என கருதப்பட்டது.

தூய உணவு மற்றும் மருந்து சட்ட அமலாக்கப் பிரிவிற்கு தலைவராகப் பதவியேற்ற பின்னர், பெரும் புரட்சியையே உண்டாக்கினார், மேரி. எப்போதும் குளிராக இருக்கும்படி அம்மோனியா வாயுவைக் கொண்டு இரட்டைச்சுவர் முறையில் ஒரு ரெயில்பெட்டியை உருவாக்கினார். அதில் வைக்கப்பட்ட உணவுப் பொருட்கள் நீண்ட நாட்கள் வரை கெடாமல் இருந்தன. அதுதான் 'உலகின் முதல் குளிர்சாதனப்பெட்டி' என அப்போது யாருக்கும் தெரியவில்லை.

மேலும், பால் பதனிடுவதைக் கண்டுபிடித்தவரும் இவர் தான். அமெரிக்க குளிர்சாதனப் பொறியாளர் கூட்டமைப்பின் தலைவராக பல ஆண்டுகள் பணியாற்றிய இவர், 1952-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 27-ந் தேதி இறந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *