உயர்ந்த தவ வாழ்க்கை வாழ்ந்து வரும் ஒரு மகான் ஒரு ஊருக்கு வந்தார். அவரது முகத்தில் தெய்வீக ஒளி வீசியது. தூய்மையான தவ சீலரான அவர் நடப்பதை, நடக்கப் போவதை துல்லியமாகக் கணிக்கக் கூடியவர். அவரது புகழைப் பற்றிக் கேள்விப்பட்ட மக்கள், கூட்டம் கூட்டமாக வந்து அவரைத் தரிசித்து ஆசி வாங்கிச் சென்றனர்.

இதைப் பொறுத்துக் கொள்ள முடியாத இளைஞன் ஒருவன், அவரைக் கலாட்டா செய்ய முடிவெடுத்தான். அவரை நேரில் சந்திக்க வந்தான்.

ஒரு பட்டாம் பூச்சியைத் தனது உள்ளங்கையில் வைத்து, கையை மூடி, தான் அணிந்திருந்த உடையில் உள்ள பாக்கெட்டில் வைத்து மறைத்துக் கொண்டான்.

அந்த மகானைப் பார்த்து, "நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கிறேன். அதற்கு நீங்கள் பதில சொல்ல முடியுமா?" என்று கேட்டான்.

"சரி…. தம்பி உனது கேள்வி தான் என்ன? கேள்" என்றார் அந்த மகான்.
"ஐயா, எனது கையில் ஒரு பூச்சி உள்ளது… அது உயிருடன் உள்ளதா அல்லது செத்து விட்டதா என்று உங்கள் ஞான திருஷ்டியால் சொல்ல முடியுமா?" என்று கேட்டான்.

உயிருடன் இருக்கிறது என்று சொன்னால் கையில் உள்ள பூச்சியை நசுக்கிக் கொன்று விடுவது….. அல்லது செத்து விட்டது என்று சொன்னால் உயிருடன் காட்டுவது என்று நினைத்தான்.

எப்படியாவது அவரை மட்டம் தட்டி விட வேண்டும் என்று விரும்பினான். மகானோ, "அது உயிருடன் இருப்பதும், இல்லாததும் உன் கையில் இருக்கிறது" என்றார்.

நம் வாழ்க்கை கூட அந்த வண்ணத்துப் பூச்சி நிலையில் தான் உள்ளது.
நமது வாழ்க்கையில்

வெற்றியா…… தோல்வியா…..
உயர்வா……. தாழ்வா……..
இன்பமா …….. துன்பமா …….
ஏற்றமா ……. இறக்கமா …….
புகழா……. அவமானமா …....

இவையெல்லாம் நம் கையில் தான் இருக்கிறது
பகவத் கீதை "நமக்கு நாமே நண்பன், நமக்கு நாமே எதிரி" என்று சொல்கிறது.

மது வெற்றிக்கோ, தோல்விக்கோ வேறு எவரும் காரணமாக இருக்க முடியாது.

நாமே தான் காரணமாக இருக்க முடியும்.
"தீதும், நன்றும் பிறர் தர வாரா" என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *