காஸ் டேங்கர்லாரி வேலைநிறுத்த போராட்டம், தொடர்ந்து 2வது நாளாக நீடிப்பதால், நாள்தோறும் காஸ் டேங்கர் லாரிகளில் நிரப்பும் பணி முடங்கியுள்ளது.

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் ஆகிய மூன்று எண்ணெய் சுத்திகரிப்பு

நிலையங்களில், சமையல் காஸ் உற்பத்தி செய்யப்படுகிறது. அவ்வாறு உற்பத்தி செய்யப்படும் சமையல் காஸ், டேங்கர் லாரிகளில் நிரப்பி, தமிழகம் உட்பட ஐந்து மாநிலங்களில் உள்ள, 45 பாட்டலிங் மையங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. காஸ் கொண்டு செல்லும் லாரிகளை, ஆயில் நிறுவனத்தினர் ஒப்பந்த அடிப்படையில் இயக்கி வருகின்றனர். அதற்கான ஒப்பந்த காலம் மூன்றாண்டுக்கு ஒரு முறை புதுப்பிக்கப்படும். அதன்படி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 31ம் தேதியுடன், காஸ் டேங்கர் லாரிகளின் ஒப்பந்த காலம் முடிவடைந்தது. “புதிய ஒப்பந்தத்தில் வாடகையை உயர்த்தி வழங்க வேண்டும். கூடுதலாக, 600 டேங்கர் லாரிகளை ஒப்பந்தம் செய்து, வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்’ என, தென்மண்டல காஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர், ஆயில் நிறுவனங்களுக்கு கோரிக்கை விடுத்தனர். அதை ஆயில் நிறுவனத்தினர் ஏற்கவில்லை.

அதையடுத்து தென்மண்டல காஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தால் சங்கத்தில் உள்ள, 3,600 லாரிகளும் காஸ் கொண்டு செல்லும் பணியில் ஈடுபடாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இரண்டாவது நாளாக நீடிக்கும் காஸ் டேங்கர் லாரி உரிமையாளர்களின் போராட்டத்தால், ஆயில் நிறுவனங்களுக்கு சொந்தமான எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில், காஸ் நிரப்பும் பணியும் முடங்கியுள்ளது, இதனால் ஏற்க்கனவே மின்சார பற்றாகுறையால் தவிக்கும் தமிழனின் தலையில் இப்போது காஸ் பற்றாக்குறையும் விழுந்துள்ளது

Leave a Reply