இலங்கைத் தமிழர்களுக்கு சமஉரிமை வழங்கப்பட வேண்டும் என்று பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் தெரிவித்தார்.
ராமநாதபுரத்தில் அவர் இன்று அளித்த பேட்டி:
இலங்கைக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் தலைமையில் இந்தியக் குழு செல்கிறது. இந்த குழு இலங்கையில் என்ன செய்ய வேண்டும் என்பதை பாஜக தெரிவித்துள்ளது.
இலங்கை அரசு ஒரு இனத்தையே அழித்து விட்டது. இந்த நிலையில் இலங்கையில் மீதமிருக்கும் தமிழர்கள் அச்சமில்லாமலும், நிம்மதியாகவும் வாழ வழிசெய்யப்பட வேண்டும். மேலும் அவர்களுக்கு சம உரிமை வழங்கப்பட வேண்டும்.
காங்கிரஸ் அரசு ஆளும் மாநிலங்களில் கூட தேர்தல்களில் கடும் தோல்வியை சந்தித்து வருகிறது.
அதிகாரத்தை பயன்படுத்தி மாநில அரசுகளை காங்கிரஸ் அரசு அதன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பார்க்கிறது.
காங்கிரஸ் அரசு நிறைவேற்றும் சட்ட மசோதாக்கள் கூட்டாட்சி முறைக்கு உலைவைக்கும் வகையில் உள்ளன.
வன்முறை தடுப்பு மசோதா, பயங்கரவாத தடுப்பு சட்டம், எல்லை பாதுகாப்பு மற்றும் ரயில்வே பாதுகாப்பு இவற்றின் செயல்பாடுகளில் கூட மாநில சுயாட்சியை பாதிக்கும் வகையில் காங்கிரஸ் அரசு செயல்படுத்தப் பார்க்கிறது.
தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு நிலைமை கவலை அளிப்பதாக உள்ளது. நகைக்கடை அதிபர் கொலை,
நிலக்கோட்டை கொலைச்சம்பவங்கள், கொள்ளைச் சம்பவங்கள் ஆகியன தமிழகத்தில் நடந்து வருவது கவலை அளிப்பதாக உள்ளது.
வங்கதேசத்தைச் சேர்ந்த பெரும்பாலோனர் இதைச் செய்து வருகிறார்களோ என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது.
இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் அவர்களை எந்தவித தயவுதாட்சண்யம் இன்றி வெளியேற்ற வேண்டும்.
சோலை சுந்தரப்பெருமாள் எழுதிய திருநாவுக்கரசரை இழுவுபடுத்திய தாண்டவபுரம் என்ற நூலை தடை செய்ய வேண்டும்.
தமிழர்களும், மடாதிபதிகளும் இந்த நூலைக் கண்டித்துள்ளனர்.
ராமர் பாலம் உலகிலேயே மிகவும் தொன்மையான பாலம். இதை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்க வேண்டும்.
பாரதிய கட்சி கூறியவாறு 4-வது வழித்தடத்தில் நிறைவேற்றியிருந்தால் சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றியிருக்கலாம்.
பாஜக சார்பில் 2 லட்சம் பேர் பங்கேற்க கூடிய மாநாடு மதுரையில் நடைபெற உள்ளது. பாஜகவின் வளர்ச்சியைக் காட்டும் வகையில் இந்த மாநாடு நடைபெறும்.
தமிழ், தமிழ்நாட்டில் திராவிட மாயை ஒழியவும் மதுரையில் மாநாடு நடத்தப்படுகிறது.
குடியரசுத் தலைவர் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு பலம் இல்லை. ஆனால் சொன்னதைக் கேட்கும் ஒருவர் குடியரசுத் தலைவராக வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி தவறான அணுகுமுறையை கையாண்டு வருகிறது. அப்துல் கலாம் போன்ற நல்லவர்கள் குடியரசுத் தலைவர்களாக்கப்பட வேண்டும்.
இந்திய மீனவர்களை இலங்கை கடற்படை தாக்குவதில் மத்திய அரசு மெளனமாக உள்ளது.
அரசு இதன்போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும் அல்லது அரசை மக்கள் மாற்ற வேண்டும்.
பாகிஸ்தான், சீனாவில் இலங்கை பயங்கரவாத பயிற்சி எடுத்து வருகிறது. இதில் இந்திய அரசு கவனத்துடன் செயல்பட வேண்டும்.
இவ்வாறு இல.கணேசன் தனது பேட்டியில் தெரிவித்தார்.