விநாயகப் பெருமானுக்கு மூஞ்சுரு வாகனமான கதை 'வி' என்றால் 'இதற்குமேல் எதுவும் இல்லை' என்பது பொருள். 'நாயகர்' என்றால் 'தலைவர்' என பொருள். அப்படி எனில் , விநாயகருக்கு மேலான சிறந்த கடவுள் யாரும் இல்லை_என்பதே 'விநாயகர்' என்பதன் முழுபொருள்!

இப்படிப்பட்ட விநாயகர், மூஞ்சுருவை வாகனமாக கொண்டிருக்க காரணம், அவர் நிகழ்த்திய ஒரு திருவிளையாடல் தான்!

என்ன திருவிளையாடல் அது?

அவன் பெயர் கிரவுஞ்சன். கந்தர்வர்களின் மன்னன். விநாயகரின் தீவிர பக்தன். ஒருநாள், இமயமலைச்சாரல் வழியாக ஆகாய மார்க்கத்தில் சென்று கொண்டிருந்தான் கிரவுஞ்சன்.

திடீரென்று பூமியில் ஓரிடத்தில் ஏதோ ஒன்று அவனது கண்களை வசீகரிக்க… அப்படியே நின்றான். அங்கே ஆழமாக நோக்கினான். 'ஆஹா… என்னவொரு அழகு!' என்று தன்னை அறியாமலேயே புகழ்ந்தான்.

அவன் புகழ்ந்தது ஒரு ரிஷிபத்தினியை..! அவள் பெயர் மனோரமை. சவுபரி என்ற முனிவரின் மனைவி. மிகவும் பேரழகி! முனிவருக்கேற்ற பத்தினியாக, தெய்வ பக்தி நிறைந்தவளாக, எளிமை யான வாழ்க்கை வாழ்ந்து வந்தாள் அவள்.

தனது குடிலில் அமர்ந்து, பூக்களை மாலையாகத் தொடுத்துக் கொண்டிருந்தபோதுதான், கிரவுஞ்சனின் பார்வையில் சிக்கினாள் அவள். அவளது அழகில் மயங்கிய கிரவுஞ்சன், அவளது குடிலுக்கு வந்தான். அவனைப் பார்த்த மாத்திரத்தில் சட்டென்று எழுந்துவிட்டாள் மனோரமை. வருவது யார் என்பது தெரியாததால், அவன் மீது குழப்பமான பார்வையை வீசினாள். ஆனால் அவனோ, அவளது அழகை ரசித்தபடியே நெருங்கினான்.

ரிஷி பத்தினிக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. 'தாங்கள் யார்? என் கணவர் இப்போது இங்கே இல்லை. தங்களுக்கு என்ன வேண்டும்? இங்கே யாரைப் பார்க்க வந்தீர்கள்?' என்று கேட்டாள் மனோரமை.

ஆனால், அவள் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்வதற்கு பதிலாக, வேகமாக நெருங்கி அவளது கையைப் பற்றினான் கிரவுஞ்சன். இதைச் சிறிதும் எதிர்பார்க்காத மனோரமை அவன் பிடியில் இருந்து விடுபடத் திமிறினாள். 'உதவி… உதவி…' என்று கத்தினாள்.

குடிலை நெருங்கிக் கொண்டிருந்த சவுபரி முனிவர், தனது மனைவியின் அலறல் கேட்டு, அங்கே வேகமாக ஓடி வந்தார்.

தனது மனைவியை ஒரு கந்தர்வன் கவர முயன்று கொண்டிருப் பதைக் கண்ட அவர், கோபத்தில் பொங்கியெழுந்தார்.

'அடே கந்தர்வா…' என்ற அவரது கொந்தளிப்பான குரல் கேட்டுத் திடுக்கிட்டுப் போனான் கிரவுஞ்சன். அப்போதுதான் அவனுக்குத் தான் செய்த தவறு உறைத்தது. மனோரமையைத் தனது பிடியில் இருந்து விட்டுவிட்டு முனிவர் பக்கம் திரும்பினான்.

கண்கள் கோபத்தில் சிவக்க, அவனுக்குச் சாபமிட்டார் முனிவர். 'உத்தமமான என் தர்ம பத்தினியின் கையைப் பிடித்து இழுத்து, அவளை அடைய முயன்ற உன்னை மன்னிக்கவே முடியாது. இப்போதே நீ, மண்ணைத் தோண்டி வளையில் ஒளியும் மூஞ்சுருவாக மாறக் கடவாய்!' என்று சபித்தார்.

அதிர்ச்சியுற்றான் கிரவுஞ்சன். செய்த தவற்றுக்காக மன்னிப்பு வேண்டினான்: 'மோகம் என் கண்களை மறைத்து, அறிவை மழுங்கச் செய்துவிட்டது. என்னை மன்னித்து, எனக்கு சாப விமோசனம் அருளுங்கள்' என்று வேண்டியவாறு, முனிவரின் கால்களில் விழுந்து கதறினான்.

'தவறு செய்தவன் தண்டனையை அனுபவித்துதான் ஆக வேண்டும். ஆனாலும், உன் மேல் எனக்கு இரக்கம் சுரக்கிறது. முழுமுதற் கடவுளான விநாயகப் பெருமான் உன்னைக் காப்பாற்றுவார்!' என்றார் சவுபரி முனிவர்.

அக்கணமே, ராட்சச மூஞ்சுருவாக மாறிய கிரவுஞ்சன், காட்டுக்குள் ஓடி மறைந்தான்.

நாட்கள் வேகமாக நகர்ந்தன.

அதே பகுதியில், புத்திர பாக்கியம் வேண்டித் தவம் இருந்த ஒரு மகா ராணிக்கு மகனாக அவதரித்தார் விநாயகர். ஒருநாள், பெருத்த அட்டகாசத்தில் ஈடுபட்ட அந்தக் கிரவுஞ்ச மூஞ்சுரு மீது தனது பாசக்கயிற்றை வீசினார். அதில் சிக்கிக்கொண்ட மூஞ்சுருவால் தப்பிக்க முடியவில்லை. அப்போதுதான் அதற்கு, தன் மீது பாசக்கயிற்றை வீசியது விநாயகரே என்பது புரிந்தது. தனது செயலுக்காக அவரிடம் மன்னிப்பு கேட்டது.

கருணையே வடிவான விநாயகர் கிரவுஞ்ச மூஞ்சுருவை மன்னித்தார். பிறகு, அதைத் தனது வாகனமாக ஏற்று அருள்புரிந்தார்.

விநாயகப் பெருமானுக்கு மூஞ்சுரு வாகனமான கதை இதுதான்!

நன்றி ; – விவேகநந்தா

Leave a Reply