சேவை இல்லாத வெறும் பக்தி உபயோகமில்லாதது விபீஷணனை அனுமன் சந்திக்கிறான். அவனது இல்லத்தில் மஹா விஷ்ணுவின் பிரதிமையை வைத்து அனுதினமும் தவறாமல் பூஜை செய்துவருவதைக் காண்கிறான். 'ஆஹா! இவனல்லவோ சிறந்த விஷ்ணு பக்தன்!' எனப் புளகாங்கிதம் அடைகிறான். அவனுடன் நட்பு கொண்டு, அவனது பக்தியை மெச்சுகிறான்.

ஆனால் விபீஷணன் முகத்திலோ வருத்தமே நிறைந்திருப்பதைக் கண்டு என்ன விஷயம் என அனுமன் வினவுகிறான். அதற்கு விபீஷணன், 'நான் என்ன பக்தி செய்து என்ன பிரயோஜனம்? உன்னைப் போல் ராமனுடன் கூடவே இருக்கவும், அவருடன் அளவளாவவும், அவரை ஸ்பரிஸிக்கவும் பாக்யம் இல்லாமல் போனதே! நான் என்ன பெரிய பக்தன்? இதன் காரணம் என்னவென எனக்குச் சொல்வாயா? என பதிலுக்கு வினவுகிறான்.

சிரித்தபடியே, சற்றுக் கோபத்துடனும், அனுமன் பதில் உரைக்கிறான்…

'பெரிய பக்தன் எனச் சொல்லிக் கொள்கிறாய் நீ! விடாமல் அவர் நாமாவைச் சொல்லிக் கொண்டும்தான் இருக்கிறாய்!ஆனால், சற்று உன் நெஞ்சைத் தொட்டு நீயே சொல்! அன்னை ஸீதா எத்தனை நாட்களாக இங்கு இருக்கிறார்? தன் பதியைப் பிரிந்து எவ்வளவு வாடிக் கொண்டிருக்கிறார்? அவரை ஒரு முறையாவது நீ சென்று பார்த்து, அவருக்கு ஆறுதல் கூறினாயா? அவரை விடுவிக்க உன்னால் ஆன எந்தச் செயலாவது செய்திருக்கிறாயா? தர்மம் அல்ல ராவணன் செய்தது எனத் தெரிந்தும், பகவானைப் பழிக்கும் இடத்தில் ஒரு வினாடி நேரமாவது நீ தங்கியிருந்திருக்கலாமோ? ஸ்ரீராமன் பெயரைச் சொல்வதுடன் உன் பக்தி நின்று விட்டதே! அவரது சேவையில் உன்னை ஈடுபடுத்திக் கொள்ளவே இல்லையே! எப்படி உனக்கு இறை தரிசனம் கிட்டுமென நீ நினைக்கலாயிற்று? சேவை இல்லாத வெறும் பக்தி உபயோகமில்லாதது என நீ உணரவில்லையே! இதுதான் காரணமென நான் நினைக்கிறேன்' எனப் பணிவுடன் சொல்லிக் கிளம்பினான்.

நன்றி : Dr . சங்கர் குமார் வட கரோலினா USA

Leave a Reply