சேதமிக்க ஹிந்துஸ்தானம் - அரசுப் பொறுப்பின்மையின் உச்சம் ஹைதராபாத் நகரில் தில்சுக்நகர் பகுதியில் 2 குண்டு வெடிப்புகள் நேற்று நடந்தன. மக்கள் அதிகம் வசித்தும் புழங்கியும் வரும் இடங்களில் இரு மோட்டார் சைக்கிள்களில் குண்டுகள் வைக்கப்பட்டு வெடிக்கப்பட்டதாக பூர்வாங்க விசாரணைகள் தெரிவிக்கின்றன. இதுவரை 16 பேர் பலியாகியிருக்கின்றனர். 120 பேருக்குக் காயம்.

அரசு எந்திரம் வழக்கம் போல இது தீவிரவாதச் செயல்தான் என்று கண்டுபிடித்துச் சொல்லியிருகிறது. ஆந்திர முதல்வர் இறந்தவர் குடும்பங்களுக்கும் காயம் பட்டவர்களுக்கும் எவ்வளாவு காசு கொடுப்பது என்று அறிவித்திருக்கிறார், சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் புகார் கொடுத்த பிறகு சரூர் நகர் காவல்துறை வழக்குப் போட்டிருக்கிறது. இன்னின்ன சட்டப்பிரிவுகளின் கீழ் இந்தக் குற்றம் நிகழ்ந்துள்ளது. அதற்கு நேரில் பார்த்த சாட்சிகள் இருக்கிறார்கள். வழக்குப் போட்டு என்ன பயன்?

விசாரணை அதிகாரிகள் புலம்புகிறார்கள். அந்த இடமே கொலைக்களம் போல இருக்கிறது. மக்கள் தற்காப்புக்காகவும் பிறரைக் காப்பாற்றவும் குறுக்கும் நெடுக்குமாக ஓடி பல தடயங்களை அழித்துவிட்டார்கள். முதல்வர் உள்ளிட்ட தலைவர்கள் வந்து போனதில் பந்தோபஸ்து என்று சொல்லிச் சில குளறுபடிகள் நடந்து சில தடயங்கள் போய்விட்டன என்கிறார்கள். எஞ்சிய தடயங்களைக் கொண்டே விசாரிக்க வேண்டிய நிலை.

அருகிலுள்ள ராஜீவ் சவுக் பேருந்து நிலையத்தில் இருக்கும் கேமராவில் பதிவான படங்களில் இருந்து ஏதாவது தடயம் கிடைக்குமா என்று பார்க்கிறார்களாம். ஆனால் பரிதாபத்துகுரிய விஷயம் இந்தக் காமிரா வேலை செய்யவில்லை என்று அரசுக்கு எழுதிப் போட்டு வெகுநாட்களாயிற்றாம். கூடிய விரைவில் மாற்றுவார்கள் என்று எதிர்பார்க்கலாம். ஆனால் இந்த விஷயத்தில் ஏன் தாமதம் என்பதை விசாரித்தால் விசாரணைக்குப் பயன் தரக்கூடிய சில கேள்விகளோ பதில்களோ கிடைக்கலாம்.

 "பெரிய அளாவிலான குண்டு வெடிப்பு இது. ஆனால் பயன்படுத்தப்பட்ட வெடிபொருட்களின் அளவு குறைவே" என்கிறது காவல்துறை. இங்கே பலியானவர்களின் உடல்களைப் பரிசோதித்ததில் இரும்புத் துகள்கள், ஆணிகள், மறைகள் மற்றும் கண்ணாடித்துண்டுகள் ஆகியவற்றால் உடல்கள் கிழிக்கப்பட்டுள்ளது தெரிகிறது. 2007ல் நடைபெற்ற குண்டு வெடிப்புகளில் பலியானோர் இதே விதத்தில்தான் பாதிக்கப்பட்டனர் என்று புலனாய்வு அதிகாரிகள்  கூறுகின்றனர்.

ஹைதராபாத் குண்டு வெடிப்புக்கு அம்மோனியம் நைட்ரேட் என்ற வேதிப் பொருள் பயனபடுத்தப்பட்டுள்ளது. சுரங்கங்கள், பாறைகளுக்கு வெடி வைத்துத் தகர்க்கப் பயன்படுத்தப்படும் இந்த வேதிப்பொருள் கடந்த ஆண்டு நம் நாட்டில் 35000 டன்கள். இறக்குமதி செய்யப்பட்டது. அதில் சிந்திச் சிதறிய இழப்பு மட்டும் 3500 டன்கள் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. அம்மோனியம் நைட்ரேட் 1970களில் துவங்கி இங்கிலாந்தில் ஐரிஷ் குடியரசுப் படையினரால் பயன்படுத்தப்பட்டது.

 தற்காலத்தில் அல் காயிதா உள்ளிட்ட ஜிஹாதி அமைப்புகளுக்கு இது மிகவும் வசதியான ஒரு பொருள். அதி நவீன தொழில்நுட்பம், பொருட்செலவு இன்றி மிக அதிக சேதம் விளைவிக்க ஏதுவான பொருள் இந்த அம்மோனியம் நைட்ரேட். இத்தகைய குண்டுகளில் சிக்கி இறப்போரின் சாவு பரிதாபகரமானது. உடல் கிழிந்து கோரமான முறையில் மரணம் சம்பவிக்கும். காயப்பட்டோரும் மிகவும் துயரமான நிலையில் தான் இருக்கவேண்டிவரும். மொத்தத்தில் உடலாலும் மனதாலும் மக்களைத் துன்புறுத்தி அச்சத்திலேயே வைத்திருக்கும் யுக்தி இது.

மூன்றரை லட்சம் டன்கள் இறக்குமதியாகும் போது மூவாயிரத்து ஐந்நூறு டன்கள் இழப்பு பெரிய விஷயமா என்று ஒரு வாதம் வைக்கப்படுகிறது. 1% இழப்புக்கு ஏன் இவ்வளவு கூச்சல் போடுகிறீர்கள் என்று தொழில்துறையினர் கேட்கின்றனர். ஆனால் அவர்கள் கவனத்தில் கொள்ள மறக்கும் ஒரு விஷயம் புனேயில் நடந்த  குண்டு வெடிப்பில் பயன்படுத்தப்பட்டது 6 கிலோ அம்மோனியம் நைட்ரேட் மட்டுமே. புனே சேதத்தின் அளவு கொண்டு சிந்திச் சிதறும் அம்மோனியம் நைட்ரேட் விளைவிக்கும் சேதத்தில் அளவை முடிந்தால் கற்பனை செய்து பார்க்கலாம்.

நம் தொழில்துறையின் தேவைக்கு ஆண்டுக்கு 7 லட்சம் டன்கள் அம்மோனியம் நைட்ரேட் தேவையாம். ஆனால் 3.5 லட்சம் தான் இறக்குமதியாகிறது என்பதைவிட 3500 டன்கள் சிதறிப் போகிறது என்பதே கவலைக்குரிய விஷயம். சில இடங்களில் குவாரி உரிமையாளர்களை மிரட்டி நக்ஸலைட்டுகள் அம்மோனியம் நைட்ரேட்டை கொள்ளையடிக்கிறார்கள். ஆனால் யாரும் புகார் கொடுப்பதே இல்லை எப்படி நடவடிக்கை எடுப்பது என்கிறது காவல்துறை. இதில் 5 கிலோ வரை வாங்குவோருக்கு உரிமம் தேவையில்லை என்ற சட்டபூர்வ சலுகை வேறு.

முந்தைய புனே குண்டு வெடிப்புக்காகக் கைது செய்யப்பட்ட இந்திய முஜாகிதீன் ஜிகாதிகள் இருவர் அப்போதே திசுக் நகர் பகுதியையும் வேவு பார்த்தோம் என்று வாக்குமூலம்  கொடுத்தார்களாம். ஆனாலும் ஐதராபாத்தில் குண்டு வெடிக்கும் என்று குறிப்பிட்டுச் சொல்லி எந்த உளவுத்தகவலும் இல்லை என்று நமது உள்துறை அமைச்சர் சுஹிச்ல் குமார் ஷிண்டே கூறியிருப்பது எந்த அடிப்படையில் என்று புரியவில்லை.

உளவுத்துறை தந்த குறிப்பில் பொதுவாக ஐதராபாத், பெங்களூர், ஹுப்ளி, கோவை, மஹாராஷ்டிரா, குஜராத் ஆகிய பகுதிகளில் குண்டு வெடிக்கும் என்று தான் இருந்தது. குறிப்பிட்டு எந்தத் தகவலும் இல்லை என்று பெயர் சொல்ல விரும்பாத காவல்துறை அதிகாரி சொன்னார் என்று இந்தியன் எக்ஸ்ப்ரஸ் தகவல தருகிறது. இப்படிச் சொல்வது முட்டாள்தனமானது. உளவறிந்து சொல்வோர் முழுத் தகவலும் தர முடியாது. ஆனால் தரும் தகவலை வைத்து நாம் தான் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.

இதில் உளவுத்துறையின் தவறென்று ஏதும் சொல்ல வாய்ப்பில்லை, கிடைத்த தகவல்களை நாம் தான் பயன்படுத்திக் கொள்ளவில்லை. அஃப்சல் குரு தூக்கிலிடப்பட்டதும் இதற்கு எதிர்ப்பு இருக்கும் அதுவும் வன்முறையாக இருக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். உளவுத்துறையினர் இது குறித்து ஏதும் சொல்லவில்லை என்பது ஒன்று முட்டாள்தனமான பேச்சு இல்லை மிகவும் கவலைதரும் விஷயம். உளவுத்துறை தகவல் தந்து அரசு மெத்தனமாக இருந்திருந்தால் அது ஓட்டுபோடும் எந்திரத்தின் தலைவிதி. ஆனால் உளவுத்துறையின் அறிவுக்கு இது குறித்த தகவல்கள் எட்டவில்லை என்றால் அது திறமையின்மையா என்ற கேள்வியும் இதனால் தேசத்தின் எதிர்காலம் என்னவாகும் என்ற கவலையும் ஆட்கொள்கிறது.

ஓய்வு பெற்ற இராணுவ உளவுத்துறையின் கர்னல் ஹரிஹரன் தமது வலைத்தளத்தில் 10நாட்களுக்கு முன்னர் தெளிவாகவே சொன்னார் "அஃசல் குரு தூக்கில் போடப்பட்டதற்கு எதிரொலி இருக்கும். அரசு கவனமாக இருக்க வேண்டும் என்று. ஜமாத் உத் தாவா, லஷ்கர் ஏ தய்யபா, ஜெய்ஷ் ஏ மொகமது ஆகிய அமைப்புகள் அஃசல் குருவின் சாவுக்குப் பழிதீர்க்க சபதம் எடுத்தன. விரைவில் தாக்குதல்களை எதிர்பார்க்கலாம். தயாராக இருக்கிறோமா என்பது முக்கியம்" என்றார் அவர். "குண்டு வெடிப்புகள் முதல் கார்கில் போன்ற ஒரு போர் வரை பாகிஸ்தான் செய்யக்கூடும். பாரதத்தை அவமதிப்பதும் சிறுமைப்படுத்துவதுமே லட்சியமாகக் கொண்ட பாகிஸ்தான் இதைச் செய்யத் தயங்க வாய்பே இல்லை." என்றார் கர்னல் ஹரிஹரன்.

ஆனால் நம் அரசோ இந்த மோட்டார் பைக்கில் தான் குண்டு இருக்கிறது என்று உளவு சொல்ல ஆளில்லை என்று சப்பைக்கட்டுக் கட்டுகிறது. சுஷில்குமார் ஷிண்டே தன் ஹிந்துத் தீவிரவாதப் பேச்சுக்கு எந்த ஆதாரமும் இல்லை என்று வருத்தம் தெரிவித்துள்ளார். (பொதுவாகப் பேசப்படுவது போல மன்னிப்பெல்லாம் கேட்கவில்லை.) ஆனால் ஆதாரம் இருந்தும் கோட்டை விட்ட இந்தச் சம்பவத்துக்கு யார் பொறுப்பேற்க்கப் போகிறார்கள்? பிரதமர் மன்மோகன் சிங் "குற்றவாளிகள் தண்டிக்கப்படாமல் போய்விடக்கூடாது" என்று சொல்லியிருக்கிறார். ஆனால் நடவடிக்கை என்று பார்த்தால் வலைகளை விரித்து வைத்துக் கொண்டு குண்டு வைத்தவன் வந்து விழுவான் என்று காவல்துறை வழக்கம் போலக் காத்திருக்கும் என்றே தோன்றுகிறது.

நன்றி ; அருண் பிரபு

Leave a Reply