பாகிஸ்தானிய அணுகுண்டும் வஹாபிய ஜிஹாத்தும் வளைக்கப்படும் பாரதமும் 1998ல் போகரண் அணுஆயுத சோதனை நடத்தப்பட்ட போது "ஏழை நாட்டுக்கு இது தேவையா?" என்று பாரதத்திடம் $115 மில்லியன் டாலர்கள் நிதியுதவி பெற்ற ஐரோப்பிய
பணக்கார நாடுகள் கூவின. அணு ஆயுதங்களைத் தவறான கைகளுக்குப் போய்விடாமல் பாதுகாக்க இந்தியாவிலும்

பாகிஸ்தானிலும் அமைப்புகள் வலுவாக இல்லை என்று
விசனப்பட்டனர் அந்த அறிவுசீவிகள். ஆனால் செங்கொடி ஏறிய சொர்க்க பூமி என்று இடதுசாரிகள் போற்றிப் புகழ்ந்து வந்த சோவியத் கூட்டமைப்பு சிதறியதும்
அக்கூட்டமைப்பின் குட்டிக்குட்டி நாடுகள் கைக்குக் கிடைத்த அணு உள்ளிட்ட ஆயுதங்களும் ஏவுகணைகளும் பிஎம்டபியூ காரின் விலைக்கு விற்கப்பட்டன. ஜிகாதி
தீவிரவாதிகள் இவற்றை வாங்கித் தங்களை பலப்படுத்திக் கொண்டனர். அமெரிக்கப் போர்க் கப்பல்கள், அமெரிக்க கட்டிடங்கள் என்று தாக்கினர். பாரதத்தின் மீதான
தாக்குதல்கள் இந்த மலிவு விலை ஆயுதங்களைக் கொண்டு தீவிரப்படுத்தப்பட்டன.

கென்னடி – குருஷ்சேவ் காலத்தில் கியூபா அணுகுண்டு சிக்கல் வந்தது போல இந்தியா பாகிஸ்தானுக்கு இடையே பெரிய அளவிலான சிக்கல்கள் ஏதும் வரவில்லை.
இவ்வளவுக்கும் பாரதம் கார்கில் உள்ளிட்ட பல சிக்கல்களின் பின்னும், 2008 மும்பைத் தாக்குதலுக்குப் பின்னும் கூட அணுஆயுதப் போரில் இறங்கவில்லை. ஆனால் நமக்குச் சிக்கல் தரும் மற்றொரு செய்தி கவனிக்கப்படாமல் போய்விட்டது. 2004ல் தனது போஷகரான சவூதி அரேபியாவுக்கு அணு ஆயுத தொழில்நுட்பத்தை தாரை வார்த்தது பாகிஸ்தான். இது அப்போதைய அமெரிக்க உளவுத்துறை அலுவலர் லாரி வெர்லைன் என்பவரது குறிப்புகளில் காணப்படுகிறது. 2004ல் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ இயக்குநர் தம்மிடம் தெரிவித்த தகவல்களை அவர் பதிந்து வைத்துள்ளார். பாகிஸ்தானின் அணு ஆயுதங்களை ஐஎஸ்ஐ கையாள்வது நடைமுறைக்கு மாறான விஷயம் என்ற போதும், பாகிஸ்தானுக்குச் சீனாவின் அணு ஆயுத உதவி குறித்தும் தம்மிடம் தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எடை குறைந்ததும் அதிக அழிவுசக்தி கொண்டதுமான புளுடோனியம் கொண்டு தயாரிக்கப்படும் அணுகுண்டுகள் சீனத்தயாரிப்பில் வருபவை என்றும் இவை அமெரிக்க
மற்றும் பிரிட்டானிய அணுசக்தித்துறைகளிடம் இருந்து திருடப்பட்டவை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த வகை அணு குண்டுகளைத் தயாரிக்க பாகிஸ்தானுக்கு சவூதி அரேபியா நிதி உதவி அளித்தது எனவும் பாகிஸ்தானில் தாலிபானிய தாக்குதல் அதிகமாகி வரும் நிலையில் தன் நிதியில் தயாரான அணுகுண்டுகளை தன் பாதுகாப்பில் வைக்க சவூதி அரேபிய திட்டமிட்டுள்ளதாக ஐஎஸ்ஐ தெரிவித்ததாக அவர் கூறுகிறார். அடிக்கடி பாகிஸ்தானுக்குள்ளேயே இடமாற்றுவது அணு ஆயுதங்களுக்குப் பாதுகாப்பில்லை என்றும் அதனால் இந்த முடிவுக்கு வந்ததாகவும் பாகிஸ்தானின் முன்னாள் இராணுவ உயர் அதிகாரிகளான ஐஎஸ்ஐ இயக்குநர்கள் தெரிவித்ததாகவும் லாரி வெர்லைன்
தெரிவிக்கிறார். Joseph Farah's G2 Bulletin என்ற பத்திரிகையில் அவர் தெரிவித்த தகவல்கள் அலசப்பட்டுள்ளன.

சவூதி அரேபியாவுக்கு ஈரானிய அணுஆயுதத்தையும் ஈரானிய ஷியா போராட்டங்களையும் சமாளிக்க பாகிஸ்தானின் அணு ஆயுதம் முக்கியமாகிறது. ஈரானிய இராணுவம் சவூதி இராணுவத்துடன் ஒப்பிடுகையில் சுண்டக்காய். ஆனால் ஈரானின் முறைசாரா போர் உத்திகளான ஷியா அமைப்புகளின் ஆயுதப் போராட்டம், மற்றும் சுன்னி முஸ்லிம் அரசுகளுக்கு எதிரான கிளர்ச்சிகள் என்ற காய் நகர்த்தல்களைச் சமாளிக்க முடியாமல் சவூதி அரேபியா திணறுகிறது. இதனாலேயே உலகெங்கிலும் வஹாபி இசுலாம் மூலம் தன் நிலையை பலப்படுத்திக் கொள்ள சவூதி விழைகிறது. அந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாகத்தான் சுன்னி முஸ்லிம்கள் நிரம்பிய அவர்களே ஆளும் பாகிஸ்தான் அணுஆயுதத்துக்கு பணம் தரப்பட்டுள்ளது. ஈரானை வலுவிழக்கச் செய்ய அதைச் சுற்றியுள்ள நாடுகளைத் தன் கட்டுப்பாட்டில் வைக்க விரும்புகிறது சவூதி அரேபியா. தன் கட்டுப்பாட்டில் வராத நாடுகளில் ஜிஹாதிகள் மூலமும் மதமாற்ற வழிமுறைகள் மூலமும் இஸ்லாமியப் பெரும்பான்மை பெறவைக்க விழைகிறது.

2001ல் இருந்து பாகிஸ்தான் இராணுவம் மூன்று வழிகளில் திணறி வருகிறது. தனக்குப் படியாத இந்தியா, தன் வசமில்லாத ஆஃப்கனிஸ்தான், தன் கட்டுப்பாட்டில் இல்லாத பாகிஸ்தானிய தாலிபான். இவற்றில் 2013ல் ஆஃபகனிஸ்தானை விட்டு அமெரிக்கா வெளியேறியதும் அந்த நாட்டைத் தன் கட்டுப்பாட்டில் வைக்க பாகிஸ்தான் விழைகிறது.

அஸாதுதீன் ஒவைசி போன்றோர் வெளிப்படையாகவே தாலிபான்களை ஆதரித்து இஸ்லாமியக் குடியரசு என்று பாரதத்தை ஆக்கப் பார்க்கிறார்கள் என்பது சவூதி
அரேபியாவுக்கு வசதியான விஷயம். அமெரிக்கா ஆஃப்கனிஸ்தானை விட்டு வெளியேறியதும் பாகிஸ்தானுக்கு அளிக்கும் நிதியுதவியைக் குறைக்கும். அப்போது பாகிஸ்தானுக்கு ஒரு காசுக்கடைக்காரர் போல சவூதி அரேபியா செயல்பட பாகிஸ்தானிய அணுஆயுதம் சவூதி பாதுகாப்புக்கு என்ற நிலைப்பாடு உதவும். பாகிஸ்தான் வேறு வகைகளில் பணம் திரட்ட முடியாது. ஏனெனில் பாகிஸ்தானில் 2% மக்கள் மட்டுமே வருமானவரி உள்ளிட்ட வரிகள் செலுத்துகிறார்கள். சொத்து மிகுந்தவர்கள் வரி ஏய்ப்பதில் நிபுணர்களாக
அரசியல் செல்வாக்குடன் வலம் வருகின்றனர். ஆகவே சவூதி அரேபியா போன்ற ஒரு நாடு பண உதவி செய்தால் மட்டுமே பாகிஸ்தான் தாக்குப்பிடிக்க முடியும்.

இசுலாமிய ஒத்துழைப்புக் கூட்டமைப்பு (OIC) எனும் அமைப்பு கஷ்மீரம் இந்தியாவால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதி என்று அறிவித்தது. வழக்கம் போல நம் அரசு கண்டனம்
தெரிவித்து விஷயத்தை விட்டுவிட்டது. இந்த அமைப்பு 1969ல் துவக்கப்பட்ட போது பாரதம் வலியச் சென்று தன்னை இணைத்துக் கொள்ள விழைந்தது. ஆனால் பாகிஸ்தான் கடுமையாக எதிர்த்ததால் பாரதத்துக்கு உறுப்பு நாடு என்ற அந்தஸ்து கிட்டவில்லை. பார்வையாளராகக்கூட பாரதம் இருக்கக்கூடாது என்று பாகிஸ்தான் சொன்னதை அந்த நாடுகள் ஏற்றன. பாரதத்துக்கு இசுலாமியக் கூட்டமைப்பில் இடம் எதற்கு என்ற கேள்வி நமக்கு எழும். ஆனால் வலியச் சென்று சேர்ந்து கொள்கிறேன் என்று வரிசையில் நின்றது
இந்திராகாந்தி அரசு தான். ஆனாலும் பாரதம் அரபு தேசங்களை தாஜா செய்ய பாலஸ்தீன வன்முறைகளை ஆதரித்தது. இஸ்ரேலிய விளையாட்டு வீரர்கள் கொல்லப்பட்ட போது இந்தியத் தூதர் தோள்களைக் குலுக்கிவிட்டுப் போனார். ஆனால் அதற்கு இஸ்ரேல் பதிலடி கொடுத்த போது பிறநாடுகளின் இறையாண்மை குறித்து இந்திய அரசு கண்டனம் தெரிவித்தது. அந்த அளவுக்கு காங்கிரஸ் அரசு இஸ்லாமிய அடிவருடியாக இருந்துவந்துள்ளது. காரணம் கொத்துக் கொத்தாக விழும் இஸ்லாமிய ஓட்டுகள்.

சவூதி அரேபியா 1954ல் செண்டோ (CENTO) அமைப்புக்காக பாகிஸ்தானால் அணுகப்பட்ட போது அப்போதைய சவூதி அரசர் "சவுத் பின் அப்துல் அஜீஸ் அல் சவுத்"அமெரிக்கா
நம்பத்தக்க தேசமல்ல, ஆனால் பாகிஸ்தான் வலுப்பெற்றால் தமக்கு மகிழ்ச்சியே என்றும் இஸ்ரேல் மக்கா மற்றும் மதீனாவைத் தாக்கினால் அவற்றின் பாதுகாப்புக்கு பாகிஸ்தான் உதவ வேண்டும்" என்றும் அவர் தெரிவித்துள்ளார். கடவுளற்ற கம்யூனிஸ்ட் சீனாவை நம்பக்கூடாது என்பது இசுலாமிய தேசங்களின் கொள்கை. ஆகவே முன்பு இஸ்ரேலுக்கு எதிராக சோவியத்தைப் பயன்படுத்திக் கொண்டது போலவே இப்போது தம்மை வலுப்படுத்திக் கொள்ள சீனாவைப் பயன்படுத்திக் கொள்ள விழைகிறார்கள். உய்குர் பகுதியில் இஸ்லாமியர் பிரச்சினை என்றால் இந்த நாடுகள் சீன இறையாண்மை குறித்து எள்முனையளவும் கவலைப்பட மாட்டா. இவற்றுக்கு இஸ்லாமிய இறையாண்மையே முக்கியம்.

பாகிஸ்தானிய விமானப்படை 1967 அரபு – இஸ்ரேலிய போரில் அரபு  நாடுகளுக்கு ஆதரவாகப் பங்கெடுத்தது. இஸ்ரேலிய விமானங்களை வீழ்த்தினர் என்று பாகிஸ்தானிய விமானிகளுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டன. 1969ல் தென் ஏமனில் சோவியத்துக்கு எதிரான போரில் பாகிஸ்தானிய விமானப்படை பங்கெடுத்தது. அதற்கு பதில் உதவியாக 1971ல் பாரதத்துக்கு எதிரான போரில் அரபு நாடுகள் பாகிஸ்தானுக்கு விமானங்களை வழங்கின. பாகிஸ்தான் அரபு நாடுகளுக்கு இராணுவப் பயிற்சி அளிப்பதிலும் கணிசமாகப் பங்கெடுத்துள்ளது. சவூதி அரேபியாவின் வடமேற்குப் பகுதிகளில் இஸ்ரேல்-ஜோர்டான் எல்லையை ஒட்டிய தபுக் என்ற இடத்தில் பாகிஸ்தான் இராணுவத்தின் 20000 துருப்புகள் நிறுத்தப்பட்டன. பாகிஸ்தான் இதை மறுத்து சுமார் 3000 முதல் 5000 வரை மட்டுமே துருப்புகள் அனுப்பப்பட்டதாகக் கூறியது. ஆனால் சவூதி அரேபியாவில் பணி செய்யவே பாகிஸ்தான் சுமார் 40000 துருப்புகளைத் தயார் நிலையில் வைத்து சுழற்சி முறையில் இரு பிரிவுகளாக அனுப்பியது. சவூதி அரேபியா இதற்கு பதில் உதவியாக பாகிஸ்தானுக்கு ஆண்டுக்கு 80 கோடி முதல் 100 கோடி அமெரிக்க டாலர்கள் வரையில் நிதி உதவி அளித்தது. பாகிஸ்தானிய இராணுவம் அந்நாட்டில் பலம் பொருந்தியதாகத் திகழ்வதற்கு பாகிஸ்தானிய அரசு சாரா இத்தகைய நிதிகளும் முக்கியக் காரணம்.
Steve Weissman and Herbert Krosney, The Islamic Bomb: The Nuclear Threat to Israel and the Middle East (Times Books, 1981), p. 52
A History of the Pakistan Army, p. 289; Nawaz, Crossed Swords, p. 386

2003 – 04ல் சவூதி அரேபியா பாகிஸ்தானுக்கு தினமும் 50000 பேரல்கள் எண்ணெய் வழங்கி அதற்குப் பணம் செலுத்துவதற்குப் பதிலாக பாகிஸ்தானிய அணுஆயுதங்களை சவூதியின் பாதுகாப்புக்குத் தர நிபந்தனை போட்டது. நவாஃப் ஒபைத் என்கிற சவூதி அரசு அதிகாரி "அவர்கள் கேட்ட பணத்தினை வேண்டிய விதத்தில் கொடுத்தோம். இதற்கு ஆவணங்கள் ஏதுமில்லை. ஆனால் பாகிஸ்தானின் அணு ஆயுதங்களும் இராணுவமும் சவூதி அரேபியாவுக்கு ஒரு பிரச்சினை என்றால் துணை நிற்கும் என்ற ஒரு அந்தரங்க உடன்பாடு இருந்தது." என்று தெரிவித்துள்ளார். பாகிஸ்தானிய அணு உலைக்கும் அணு ஆராய்ச்சி மையங்களுக்கும் சவூதியின் இளவரசர் அடிக்கடி சென்று வந்துள்ளார். ஆனால் சும்மா சுற்றிப்பார்க்க வந்ததாக அவர் தெரிவித்தது சிரிப்பலைகளைக் கிளப்பியது.
http://www.brookings.edu/~/media/research/files/articles/2011/12/09%20saudi%20arabia%20pakistan%20riedel/1209_saudi_arabia_pakistan_riedel.pdf

ஆசிய கண்டத்தில் சீனாவை முறியடிக்க இவர்கள் திட்டம் தீட்டுகிறார்கள். சீனா முன்காலத்தில் சோவியத் யூனியன் செய்த அதே வகையான தவறுகளைச் செய்கிறது.

இசுலாமியர்களை ஆதரித்து தன் நிலையை பலவீனப்படுத்திக் கொள்கிறது. சீனாவின் சின்ஜியாங் போன்ற எண்ணெய் வளமிக்க மாகாணங்களில் உய்குர் இனவாதப் பிரச்சினை மீண்டும் தலைதூக்குவதும் வணிகம் என்ற போர்வையில் சவூதி ஷேக்குகள் பலர் சீனத்துக்கு வந்து போவதும் கவலைக்குரிய விஷயங்கள் எனினும், சீனா தன் வலுவான கம்யூனிசக் கட்டுப்பாட்டை நம்புகிறது. இதைவிட வலுவான கட்டுப்பாடுகளைக் கொண்ட சோவியத் சிதறி அதன் ஆயுதங்கள் ஜிகாதிகளிடம் சிக்கிய வரலாறு நம்மைக் கவலையில் ஆழ்த்துகிறது. பாகிஸ்தானை ஆதரிப்பதன் மூலம் பாரதத்துக்கு முட்டுக்கட்டை போட சீனா விழைகிறது. பாகிஸ்தானின் கில்கிட் பலிஸ்தான் பகுதிகளில் சீனத்தின் போக்குவரத்துப் பணிகள் வலுப்பெற்றுள்ள போதும் நம்பத்தகாதவர்களை நம்புவதன் மூலம் சீனம் சீரழிவைத் தேடிக் கொள்கிறது என்றே கருத வேண்டியுள்ளது.

பாஜக ஆட்சியில் பாரதம் அமெரிக்கா இஸ்ரேல் ஆகியவற்றின் பக்கம் நெருங்கியது. இது சவூதி அரேபியா உள்ளிட்ட இசுலாமிய நாடுகளுக்கு அதிருப்தி தந்தது. இஸ்ரேலை நெருங்காமல் ஒவைசி போன்றோர் மூலம் பார்த்துக் கொள்ள வழிகோலப்பட்டது. அப்படியே முடிந்தவரை வஹாபிசம் மூலமாக பாரதத்தில் இசுலாமியர் பெரும்பான்மை ஆகிவிட்டால் ஷரியா சட்டங்களின் மூலம் பிற மதங்கள் ஒடுக்கப்பட்டு சவூதி அரேபியாவுக்கு அடிவருடியாக பாரதம் ஆகிவிடும் என்ற நோக்கத்தில் ஜிஹாதி அமைப்புகளுக்கு உதவிகள் குவிகின்றன. 2004ல் காங்கிரஸ் மீண்டும் வந்தது இவர்களுக்கு நல்ல வாய்ப்பானது. காறித்துப்பினாலும் துடைத்துக் கொண்டு இசுலாமிய தேசங்களின் நட்புக்காக இளித்துக் கொண்டிருக்கும் தன்மை காங்கிரசு அரசுகளுக்கே உண்டு. அதன் மூலம் உள்ளூர் இசுலாமியர் ஓட்டு மொத்தமாக விழும் என்ற கணக்கு.

இலங்கை, நேபாளம், சீனா ஆகிய நாடுகள் இசுலாமியக் கூட்டமைப்பில் பார்வையாளர் அந்தஸ்துக் கோரியுள்ளன. இதன் மூலமும் சவூதி அரேபியா தலைமையிலான
இசுலாமியச் செல்வாக்கு பாரதத்தைச் சுற்றி வளைக்கத் திட்டமிடுகிறது.

ஆனால் சில தெளிந்த சிந்தனையாளர்கள் இந்தியாவின் நட்பை அரபுநாடுகள் இழந்தது தவறு. பாகிஸ்தான் – இஸ்லாம் என்ற குறுகிய வட்டத்தில் உழன்று கொண்டு இந்தியாவை இஸ்ரேலின் பக்கம் போகவிட்டது தவறு என்று கூறுகின்றனர். நாம் சுயமரியாதை மிக்க நாடாக யாரிடமும் பல்லிளிக்காமல் இருந்தால் நம்மை யாரும் மதிப்பார்கள் என்பது இதன் மூலம் கண்கூடாகத் தெரிகிறது. (http://weekly.ahram.org.eg/2005/730/in1.htm)

பாரதத்தின் இராணுவ இரகசியங்கள் அரபு நாடுகளுக்கு விற்கப்பட இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுத் தடுக்கப்பட்டுள்ளது. துபாயைச் சேர்ந்த ஒரு அமைப்பிடம் விற்பதற்கு சில முக்கிய ஆவணஙகளும் இராணுவ செயல்பாடுகள் குறித்த குறிப்புகளும் கேரளாவைச் சேர்ந்த ஒரு இராணுவ உளவுத்துறைப் பணியாளரால் களவாடப்பட்டிருப்பதும் அது தடுக்கப்பட்டதும் சமீபத்திய கவலைதரும் செய்திகள். ஒரு கோடி ரூபாய்க்கு இந்த ஆவணங்களைக் கைமாற்ற அந்த ஊழியர் ஒப்புக் கொண்டாராம். இந்த ஆவணங்களைப் பிரதி எடுத்ததும் வெளியே கொண்டு சென்றதும் பாதுகாப்புக் குறைபாடுகள் காரணாமாக என்ற கோணத்தில் விசாரணை நடக்கிறது. (http://www.indianexpress.com/news/mi-staffer-sought-rs-1-cr-to-trade-secrets/957274/0)

மேலும் ஒரு கவலைதரும் செய்தி ஹைதராபாத் குண்டு வெடிப்பு குறித்த விசாரணைத் தகவல்களை தேசிய பாதுகாப்புப் படை (கறுப்புப் பூனைப் படை) அதிகாரி ஒருவர் பாகிஸ்தானிய உளவுப் பிரிவு அதிகாரிகளுடன் பகிர்ந்து கொண்டது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் அப்படி ஒன்றும் முக்கியத் தகவல்களைப் பகிர்ந்து கொள்ளவில்லை. இதனால் பாதிப்பு ஏதுமில்லை என்று அரசு பூசி மெழுகுகிறது. (http://www.indianexpress.com/news/nsg-horrified-as-own-man-talks-to-pakistan-spy-about-hyderabad-blasts/1082946/)

ஊடுருவல்கள் பெருகிய போதும் கண்காணிப்பு பலமாக இருப்பது நம் அரசாங்க அமைப்பு முழுவதுமாக ஊடுருவப்படவில்லை என்று சான்றுரைக்கிறது. இப்போதும் நாம் தற்காத்துக் கொள்ள வாய்ப்புகள் அதிகமிருக்கிறது.

பாரதம் இப்போது என்ன செய்யவேண்டும் என்பது குறித்த சில யோசனைகள்:

1. இஸ்ரேலுடனான உறவுகளை வலுப்படுத்திக் கொள்வது முக்கியம். ஏனெனில் இஸ்ரேலும் இப்போது பாரதம் இருப்பது போலவே சுற்றிச்சூழ அந்நாட்டை அழிக்க விழையும் சக்திகளால் சூழப்பட்டுள்ளது.

2. சீனத்தின் எல்லைப்பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்த இராணுவத்தின் (Armoured Division) பலம் வாய்ந்த பிரிவுகளில் ஒன்றை வடகிழக்குப் பகுதிக்கு மாற்ற வேண்டும். தற்போதுள்ள 3 Armoured Divisionகளுமே மேற்குப் பகுதியை ஒட்டி இருக்கின்றன.

3. இலங்கை நம்மிடம் வாலாட்டுவதை நிறுத்த கடுமையான பொருளாதார இராணுவ நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

4. அரபு நாடுகளுடன் சுமுக உறவு இருந்தாலும் தேசநலனுக்கு எதிரான நிலை எடுத்து அரபு நாடுகளைத் திருப்திப்படுத்தும் போக்கைக் கைவிடவேண்டும்.

5. ஜிஹாதி தீவிரவாதத்தின் மீது கருணையற்ற கடும் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.

6. மதமாற்றத்தைத் தடுக்க நம் பாரம்பரிய கலாச்சார வாழ்க்கை நெறிமுறைகளை ஊக்குவிக்க வேண்டும்.

7. தேசத்தைக் குறித்துப் பெருமைகொள்ளும் திட்டங்களையும் என்.சி.சி போன்ற இராணுவக்கட்டுப்பாடு மிக்க அமைப்புகளையும் வலுப்படுத்தி மாணவர்களைச் சேர்க்க வேண்டும்,

இவற்றைச் செயல்படுத்த வலுவான மத்திய அரசு வேண்டும், அதற்கு தேச நலனில் அக்கறை கொண்ட அமைப்புகள் ஆட்சிக்கு வர வேண்டும். அது குறித்து குறிக்கோள் கொண்டு பணியாற்ற சங்கபரிவார அமைப்புகளுடன் கைகோர்த்து பாரதீய ஜனதா கட்சி தன்னை வலுப்படுத்திக் கொள்ளவேண்டும்.

நன்றி ; அருண் பிரபு

Leave a Reply