மூட நம்பிக்கைகள் தோன்றுவதை நிறுத்த வழி இல்லையா? இறை நம்பிக்கை அவசியமென்றாலும் ,அதைச் சுற்றி ஏராளமான மூட நம்பிக்கைகள் தோன்றுவதை நிறுத்த வழி இல்லையா? -" என்ன இல்லை இந்து மதத்தில் " நூலிலிருந்து.

முதலில் மூட நம்பிக்கை என்றால் என்னவென்று பார்க்கலாம் .பிறர் செய்யும் செயல்கள் நமக்கு ஏற்புடையதுதாக இல்லாமல் போய்விட்டால் ,அவைகளுக்கு மூட நம்பிக்கைகள் என முத்திரை குத்தி விடுகிறோம் .மூட நம்பிக்கைகளை இரண்டு வகையாகப் பிரிக்கலாம் .ஒன்று அறியாமையால் தோன்றுவது பிரிதொன்று அறியாததால் தோன்றுவது ,இரண்டாவது வகைதான் நாத்திக வாதம் .அதாவது தெய்வத்தைப் பற்றி அறியாத நிலை .

தெய்வங்களுக்கு நர பலி கொடுப்பது ,தெய்வத்தின் பெயரால் கொடுமைகள் இழைப்பது தெய்வ நம்பிக்கையால் வெறுமனே இருப்பது போன்றவைகள் ,அறியாமையால் விளையும் மூட நம்பிக்கைகள்.

தெய்வீக காரியங்கள் இன்னவென்றே புரியாமல் ,தெய்வீக செயல்பாடுகளின் பின்னணிகளை ஆராய்ந்தறியாமல் வெறுமனே விமர்சனம் செய்து அலட்சியப்படுத்தும் மனப்பாங்குதான் ,அறியாததால் விளையும் மூட நம்பிக்கைகளாகும்.

கடவுள் நம்பிக்கை ,பல மூட நம்பிக்கைகளை உரம் போட்டு வளர்த்திருப்பதை மறுக்கவோ ,மறைக்கவோ முடியாது .கடவுள் நம்பிக்கையைப் பயன்படுத்தி அப்பாவி மக்களை ஏமாற்றும் செயல்கள் இன்றல்ல, காலம் தோறும் நடந்தேறும் செயல்கள் ஆகும். படிப்பறிவும், விழிப்புணர்ச்சியும் மேலோங்கிய இந்த நவீன விஞான உலகத்திலும் இவைகள் குறையவில்லை என்பதுதான் வியக்க வைக்கும் செய்தியாகும் .

இதை மத ரீதியிலான வணிகமாகப் பின்பற்றி ,அதையே பிழைப்புத் தொழிலாகவும் செய்து வருவதுதான் ஏற்புடையச் செயலாக இல்லை .எனினும் ,மனித பலவீனங்களை மற்றவர்கள் பயன்படுத்தி காசாக்கி வருவது உலகம் முழுவதும் நடைபெறுகின்ற காரியமாகி விட்டது.மெய்யான தெய்வ பக்தியை பரப்புவதன் வழியாகத் தான் இந்த மூட நம்பிக்கையை அறவே ஒழித்து விடலாம் என நம் முன்னோர்கள் முனைப்பு காட்டாமலா இருந்திருப்பார்கள் ?எனினும் அவை குறைந்த பாடில்லை .

வெறும் சடங்குகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் ,அதன் தத்துவங்களின் அடிப்படை உண்மைகளை சரியாக தெரிவு செய்தால் ,மூட நம்பிக்கை பெரும் அளவில் மறையலாம் .சட்டங்களால் மட்டுமே அவற்றை சீபடுத்த முடியாது. கலப்படமற்ற , உண்மையான ஆன்மிகம் மக்களிடையே நம்பிக்கையை தோற்றுவிக்கும் வகையில் பிரசாரத்தின் மூலம் கிட்ட வாய்ப்பு உண்டு.

Leave a Reply