நக்சல்களின் தாக்குதல்கள் அதிகாரத்தை கைப்பற்றவே தவிர, வளர்ச்சிக்காக அல்ல  சத்தீஸ்கரில் காங்கிரஸ் தலைவர்களின் மீதான மாவோயிஸ்ட்டுகளின் தாக்குதல் கடும் கண்டனத்துக் குரியது. நக்சல்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை தேவை என பாஜக கருத்து தெரிவித்துள்ளது.

சத்தீஸ்கர் தாக்குதல்குறித்து மக்களவை எதிர்க் கட்சி தலைவர் சுஷ்மாஸ்வராஜ் கூறுகையில், “இத்தாக்குதல் அதிர்ச்சியை தருகிறது . மாவோயிஸ்ட்டுகளின் இந்த வெறிச் செயலை பா.ஜ.க., கடுமையாக கண்டிக்கிறது’ என்றார்.

பாஜக செய்தித்தொடர்பாளர் பிரகாஷ் ஜவடேகர் கூறியதாவது , “மக்களால் தேர்வுசெய்யப்பட்ட உறுப்பினர்கள், அரசியல் தலைவர்களின் மீது மாவோயிஸ்ட்டுகள் தொடர் தாக்குதல் நடத்திவருகின்றனர்.

மாவோயிஸ்ட்டுகளின் இந்த செயல் , இந்திய அரசியல் சாசனத்துக்கும், நாட்டின் சட்ட ஒழுங்குக்கும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடியது. நக்சலைட்டு அச்சுறுத்தலுக்கு எதிராக உறுதியான நடவடிக்கை தேவை ‘ என்றார்.

இது குறித்து பா.ஜ.க., மூத்த தலைவர் ஜவடேகர் கூறுகையில், மாவோயிஸ்ட்டுகளின் அச்சுறுத்தல்கள் ஒரு குறிப்பிட்ட மாநிலத்தில் மட்டும் இல்லை.

பலமாநிலங்களில் அவர்கள் பல்வேறு தாக்குதல்களை நடத்திவருகின்றனர். சனிக்கிழமை நடந்த தாக்குதல் ஆந்திரம், மகாராஷ்டிரம், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களின் எல்லைப்பகுதியான சுக்மா பகுதியில் நிகழ்ந்துள்ளது.

எனவே, இவ்விஷயத்தை காங்கிரஸ் அரசியலாக்கக்கூடாது என்றார்.

நக்சல்களின் தாக்குதல்கள் அதிகாரத்தை கைப்பற்றவே தவிர, வளர்ச்சிக்காக அல்ல என்றும் அவர் கூறினார்.

Leave a Reply