தமிழக மீனவர்களை அச்சுறுத்தும்வகையில் கச்சத்தீவு பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள இலங்கை போர்கப்பல்களை அப்புறப்படுத்தவேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு தமிழக பாஜக. மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து, பாஜக. மாநிலதலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

மீன்பிடி தடைகாலமான 45 நாட்கள் நேற்றுடன் முடிவடைந்ததை தொடர்ந்து கடலில் அதிகமீன்கள் கிடைக்கும் எனும் எதிர்பார்ப்பில் தங்களுடைய வாழ்வாதாரத்தைதேடி வங்கக் கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களுக்கு அச்சத்தையும், தங்கள் வருங்காலம்குறித்த கேள்வியையும் எழச்செய்துள்ளது இலங்கை அரசின் அடாவடி நடவடிக்கை.

ஏற்கனவே இலங்கைஅரசால் தமிழக மீனவர்கள் படும்துயரங்களை அளவிட முடியாதநிலையில் தற்போது கச்சத்தீவுபகுதியில் 10–க்கும் மேற்பட்ட போர்க் கப்பல்களை நிறுத்திவைத்துள்ளதாக செய்திவெளியாகியுள்ளது. கச்சத்தீவுபகுதிக்கு அருகே இந்திய கடற்படைக்கு சொந்தமான ஒருகப்பல்கூட தமிழக மீனவர்களின் பாதுகாப்பிற்காக இல்லாதநிலையில் இலங்கையின் 10க்கும் மேற்பட்ட போர்க்கப்பல்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது தமிழக மீனவர்களை மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியநாட்டையே ஆச்சரியங்கொள்ள செய்யும் செயலாகவே எண்ணவேண்டியுள்ளது.

மேலும், எல்லை தாண்டிச்செல்லும் மீனவர்களுக்கு இந்திய அரசாங்கமே அபராதம்வசூலிக்க உள்ளதாக வரும்செய்தி எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதை போன்று உள்ளது. இதுகுறித்து மத்திய அரசு தெளிவானவிளக்கம் அளிக்கவேண்டும். தமிழக மீனவர்கள் அச்சமின்றி கடலுக்குச்சென்று வர மத்திய, மாநில அரசுகள் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை இந்த நேரத்தில் எடுக்கவேண்டும். இந்திய தமிழ் மீனவர்களை அச்சுறுத்தும்வகையில் நிறுத்தப்பட்டுள்ள இலங்கை போர்க் கப்பல்களை அப்புறப்படுத்த வைப்பதோடு இந்திய கடற்படைபாதுகாப்பை இந்திய தமிழ் மீனவர்களுக்கு வழங்கவேண்டும். என்று அவர் கூறியுள்ளார்.

Leave a Reply