புதுக்கோட்டையில் பாகிஸ்தானில் அச்சடித்த இந்திய ரூபாய் நோட்டுகள் புதுக்கோட்டையில் பாகிஸ்தானில் அச்சடித்த இந்திய ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் உள்ளதாக வெளியாகி உள்ள தகவலை மத்திய, மாநில அரசுகள் தீவிரமான ஆய்வு செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் பாரதிய ஜனதாக் கட்சியின் மாநிலத்தலைவர் பொன். ராதாகிருஷ்ணன்.

புதுக்கோட்டையில் இன்று நடைபெற்ற சிவகங்கை, ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதி பாஜக நிர்வாகிகளுடனான கருத்துக் கேட்புக்கூட்டத்தில் பங்கேற்க வந்த அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்:

ஐபிஎல் கிரிக்கெட் விளையாட்டில் மேட்ச் பிக்ஸிங், ஸ்பாட் பிக்ஸ்சிங் மோசடி நடந்ததைத் தொடர்ந்து வீரர்கள், தரகர்கள் உள்பட பலர் கைதாகி வருகின்றனர். இதில், வெளிநாட்டில் பதுங்கியுள்ள நிழல் உலக தாதாக்கள் தாவூத் இப்ராகிம், சோட்டாஷகீல் போன்றவர்கள் அங்கிருந்தபடியே இந்திய விளையாட்டு வீரர்களை ஆட்டுவிக்கும் நிலை வந்துள்ளதை பார்க்கும் போது அதிர்ச்சியளிக்கிறது. அயல் நாடுகளிலிருந்து விளையாட்டு வீரர்களை மட்டும்தான் ஆட்டுவித்தார்களா அல்லது அரசியல்வாதிகளையும் ஆட்டிப்படைக்கிறார்களா என்று தெரியவில்லை. மத்திய அரசு இதற்கு விளக்கமளிக்க வேண்டும். மத்தியில் ஆளும் அரசு அதிகாரமற்ற அரசாகவும், பயங்கரவாதிகள் ஆட்டுவிக்கும் அரசாக உள்ளது.

நாட்டில் மீண்டும் தீவிரவாதம் தலைதூக்கியுள்ளதை சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்த குண்டு வெடிப்பு உணர்த்தியுள்ளது. அங்கு நடந்த கொடூரத்தின் பின்னணியில் காங்கிரஸ் கட்சியினரே இருப்பதாக வெளியாகி வரும் செய்திகள் காங்கிரஸ் கட்சியின் பாரம்பரியத்தை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. பயங்கரவாதத்தை ஒழிக்க வேண்டுமென காங்கிரஸ் விரும்பவில்லை என்பதையும் உணரலாம்.

தமிழகத்தில் காஷ்மீர் பிரிவினைவாதி யாசின்மாலிக் போன்றவர்கள் வந்து பேசுவது தமிழகத்தில் மீண்டும் தீவிரவாதம் தலைதூக்க முயற்சிப்பதைக் காணமுடிகிறது. இப்பிரச்னையில் தமிழக அரசு விழித்துக்கொள்ள வேண்டும். கடந்த 1970 -ல் தமிழகத்தில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, அரியலூர், தேனி, பெரியகுளம் பகுதிகளில் நக்சல்கள் தலை தூக்கியபோது காவல்துறையினருக்கு முழு சுதந்திரம் அளித்து எம்ஜிஆர் துணிச்சலாக நடவடிக்கை எடுத்தார். அதே போல முதல்வர் ஜெயலலிதாவும் செய்ய வேண்டும். இலங்கை தமிழர்கள் இந்தியாவில் உள்ள பிரிவினை வாதிகளை ஏற்றுக்கொண்டதில்லை என்பதே கடந்த 30 ஆண்டுகால வரலாறு. இந்நிலையில், பிரிவினை வாதிகளை இலங்கை தமிழர்களுக்கு ஆதரவான கூட்டங்களில் பங்கேற்கச்செய்வது இலங்கை தமிழர் பிரச்னையை கொச்சைப் படுத்தும் செயலாகும்..

கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 9 லட்சம் விவசாயிகள் விவசாயத்தொழிலை விட்டு வெளியேறியுள்ளனர். 7 கோடி தமிழகமக்களுக்கு உணவளிக்கும் விவசாயததை செய்வதற்கான சூழ்நிலை தமிழகத்தில் இல்லை. இழப்பைத் தரும் தொழிலாக கருதும் நிலை ஏற்பட்டுள்ளது. ஜூன்.12 -ம் தேதி குறுவை சாகுபடி தொடங்கக்கூடிய நிலையில், காவிரியில் இருந்து தண்ணீர் கிடைக்குமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது. தற்போது பருவமழை தொடங்கி காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் நல்லமழை பெய்து வரும் நிலையில், கர்நாடக அரசு படிப்படியாக தண்ணீரைத்திறந்து விட வேண்டும். ஆனால், அங்குள்ள அணைகள் நிரம்பியபின் உபரி நீர் வெளியேறும் வடிகாலாக தமிழகத்தின் காவிரி ஆற்றை நினைப்பதைக் கைவிட வேண்டும். காவிரியில் நாம் பிச்சை கேட்கவில்லை, தமிழகத்தின் உரிமையைக் கேட்கிறோம். இதற்கு மத்திய அரசு உரிய நீதி வழங்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டிருந்தால் தமிழகத்துக்கு பலன் கிடைத்திருக்கும். குழுவை அமைத்து அதைக்கூட்டியதால் எவ்வித பலனும் கிடைக்காது.

எனவே மத்திய அரசு காவிரி நீரில் தமிழகத்துக்கான பங்கைப் பெற்றுத்தர வேண்டும். இல்லையெனில் தமிழகம் உணவுக்காக கையேந்த வேண்டிய நிலை ஏற்படும். சாதாரண அமைச்சர்கள் , எம்.பி -க்கள் செய்யும் காரியங்களைக் கூட சிவகங்கைத் தொகுதியில் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் செய்யவில்லை. அவரது தொகுதிக்கு உட்பட்ட மாவட்டங்களில் ரயில்வே திட்டப்பணிகளில் எந்தவித முன்னேற்றமும் இல்லை. ரயில்வே அறிவித்த திட்டங்களை அமலாக்க அமைச்சர் சிதம்பரம் முனைப்பு காட்டவில்லை என்பது அவரது இயலாமையைக் காட்டுகிறது.புதுக்கோட்டை மாவட்டத்தில் பாகிஸ்தானில் அச்சடிக்கப்பட இந்திய ரூபாய் நோட்டுகள் அதிக அளவில் புழக்கத்தில் உள்ளன என்ற தகவலை மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக ஆய்வு செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தனது சொந்த மக்களை மதமாற்றம் செய்து வதைத்த திப்பு சுல்தானுக்கு திண்டுக்கல்லில் மணிமண்டபம் அமைப்பதை தமிழக முதல் மறுபரிசீலனை செய்ய வேண்டும். கடந்த ஆண்டில் நடந்த கசப்பான அனுபவத்தைத் தொடர்ந்து தற்போது புதுதில்லியில் நடைபெறும் முதல்வர்கள் மாநாட்டில் பங்கேற்பதில்லை என்ற தமிழக முதல்வரின் முடிவு வரவேற்கத்தக்கது. ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் ஊராட்சித்தலைவர் முதல் பிரதமர் பதவி வரை வர உரிமை இருக்கிறது. தமிழக அரசு தொடுத்த பல வழக்குகள் மூலம் முக்கிய பிரச்சனைகளுக்கு தீர்வு பெற்றது போன்ற நன்மையும், கூடங்குளம் அணுமின் திட்டத்தில் தாமதம் போன்ற தீமைகளும் நடந்துள்ளன. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்றார்.

Tags:

Leave a Reply