மொழி என்பது ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் இன்றியமையாத ஓர் அம்சம் உயர் கல்வித்துறையில் புதுமைக்கும் ஆராய்ச்சிக்கும் முக்கியத்துவம் தரவேண்டும். மொழி என்பது நம்முடைய ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் இன்றியமையாத ஓர்அம்சமாகத் திகழ்கிறது என குடியரசு தலைவர் பிரணாப்முகர்ஜி தெரிவித்தார்.

மத்தியப் பிரதேச மாநில தலைநகர் போபாலில் அடல்பிஹரி வாஜ்பாய் ஹிந்தி பல்கலைக் கழகத்துக்கு வியாழக்கிழமை அடிக்கல் நாட்டிய பிரணாப்முகர்ஜி பேசியதாவது:

இந்த ஹிந்தி பல்கலைக்கழகத்துக்கு அடிக்கல் நாட்டுவதை பெருமையாக கருதுகிறேன். மொழி என்பது நம்முடைய ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் இன்றியமை ஓர் அம்சமாகத் திகழ்கிறது. அரசுக்கும் மக்களுக்கும் பாலமாக திகழ்வது மொழிதான். மக்கள் நலத்திட்டங்களையும் வளர்ச்சிப் பணிகளையும் அனைவருக்கும் கொண்டு சேர்ப்பது மொழிதான்.

தேசிய நாட்டின் சமூக, கலாசாரத்தின் அடையாளமாகவும் விளங்குகிறது. ஹிந்தியை மட்டுமல்லாமல் ஒவ்வொரு வட்டாரமொழியின் வளர்ச்சியையும் நாம் ஊக்குவிக்க வேண்டும்.

அதற்கு கல்விநிறுவனங்கள் பெரும்பங்காற்ற வேண்டியது அவசியம். கல்வித் துறையில் நாடு முன்னேற்ற மடைந்து வந்தாலும் உயர் கல்வித் துறையின் நிலை இன்னும் கவலையளிப்பதாகவே உள்ளது. உலகில் உள்ள தலைசிறந்த 200 பல்கலைக் கழகங்களின் பட்டியலில் இந்திய பல்கலைக்கழகம் ஒன்றுகூட இடம்பெறவில்லை என்பது வருத்தமளிக்கிறது.

சுமார் 650 பாடப்பிரிவுகளில் பட்டம் வழங்கும் தகுதியுடைய கல்வி நிறுவனங்களும் பல்கலைக் கழகங்களும் நாட்டில் உள்ளன. ஆனால் அவற்றின் கல்வித்தரம் திருப்தியளிப்பதாக இல்லை என்பதையே அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

எனவே உயர் கல்வித் துறையில் புதுமைக்கும் ஆராய்ச்சிக்கும் உரியமுக்கியத்துவம் தரவேண்டும். ஆசிரியர்கள் வெறுமனே பாடங்களைமட்டும் கற்பிக்காமல் நம்நாட்டின் கலாசாரம், பண்பாடு, வரலாறு போன்றவற்றை மாணவர்களின் மனதில் பதியவைக்க வேண்டும்.

தொடர்ச்சியான கருத்தரங்குகள், பயிற்சிப்பட்டறைகள் மூலம் தாய் நாட்டுப்பற்று, தேச ஒற்றுமையின் அவசியம், மதநல்லிணக்கம், மனிதர்களை மதிக்கும்பாங்கு, ஒழுக்கம் போன்ற அத்தியாவசியான குண நலன்களை மாணவர்கள் மனதில் இளம்வயதிலேயே விதைக்கவேண்டும். இவற்றின் மூலம்தான் ஏற்றத்தாழ்வில்லாத சமதர்ம சமுதாயத்தை உருவாக்கமுடியும் என்றார் பிரணாப் முகர்ஜி.

Leave a Reply