பூதான ரிஷிமூலம் பப்பாளிப் பழம் பூதான இயக்கத்தின் முன்னோடி விநோபா பாவே. அவர் சிறுவனாக இருந்தபோது அவரது வீட்டுத் தோட்டத்தில் ஒரு பப்பாளி மரம் நன்கு காய்த்திருந்தது. அது கனிந்தவுடன் அதைத் தான் உண்ண தனது தாயிடம் அனுமதி கேட்டார்.

அவரது தாயார், அவரிடம் அந்தப் பழத்தைக் கழுவி, அதன் தொலை நீக்கிவிட்டுத் துண்டுகளாக்கித் தருமாறு சொன்னார். விநோபாஜியும் அதைச் செய்த பின், " அம்மா, இப்போது பழத்தை உண்ணலாமா?" என்று கேட்டார்.

தாயார் அவரிடம், "மகனே! நமது கிராமத்தில் எத்தனை பேர் வீட்டில் பப்பாளி மரம் இருக்கிறது? " என்று கேட்டார்.

"நம் வீட்டில் மட்டும்தான்" என்றார் விநோபாஜி.

"அப்படியானால் பழத்தை நீமட்டும் உண்பது நியாயமா ? நம் வீட்டில் மரம் இருந்தாலும் அதில் காய்ப்பது நமது ஊரிலுள்ள எல்லோருக்கும் சொந்தமல்லவா ? அதனால் இப்பழத்துண்டுகளை உன் நண்பர்களுடன் பகிர்ந்துதானே உண்ண வேண்டும் ? "என்று கேட்டார் தாயார்.

விநோபாஜியின் மனதில் இந்த அறிவுரை பசுமரத்தாணிபோல் பதிந்தது. பழத்தை பலருடனும் பகிர்ந்து கொண்டார்.

இந்நிகழ்ச்சியே பின்னாட்களில் அவர் பூதான இயக்கத்தைத் தொடங்கவும் காரணமாயிற்றோ!

Leave a Reply