வெடிக்க கூடிய பலூன் அல்ல! மேலும்  மேலும் உயரே பறக்ககூடிய பலூன்!! மத சாயம் பூசிக்கொண்டு மக்களை ஏமாற்றி திரிந்த வேடதாரிகளின் சாயம் எல்லாம் தேர்தல் எனும் மழையில் வெளுக்கபோகிறது சிறுபான்மை ஓட்டுக்காக மதச்சாயம் பூசிக்கொண்டு புதிய தோற்றம் தர முயன்ற நிதிஷ் குமாரின் முகமோ இடைத்தேர்தல் எனும் மழையிலேயே வெளுத்து விட்டது. வளர்ச்சி என்ற உண்மை முகத்தை மட்டுமே காட்டி வந்த நரேந்திர மோடியின் முகமோ இடைத்தேர்தல் எனும் மழையிலேயே ஜொலிக்க தொடங்கிவிட்டது .

குஜராத்தின் போர் பந்தர், பானஸ் காந்த ஆகிய இரண்டு மக்களவை தொகுதிகளுக்கும், லிம்ப்டி, தோராஜி, ஜெட்பூர் மற்றும் மோர்வா ஹடாப் ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கும் கடந்த 2ஆம் தேதி இடைதேர்தல் நடைபெற்றது.

இந்த இடைத்தேர்தலில் பாஜக தான் போட்டியிட்ட அனைத்து இடங்களையும் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் காங்கிரசிடம் இருந்து அள்ளியுள்ளது. போர் பந்தர் தொகுதியில் 1.28 லட்சம் வாக்குகள் வித்தியாசத்திலும், பானஸ் காந்த தொகுதியில் 71,000 வாக்குகள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றுள்ளது. மேலும் ஜெட்பூர், லிம்ப்டி, தோராஜி மற்றும் மோர்வா ஹடாப் உள்ளிட்ட சட்டசபை தொகுதிகளில் முறையே 52,910., 24,787., 11,497., மற்றும் 17,716 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது .

போலி மதசார்பு வாதிகள்தான் நரேந்திர மோடியின் முகத்தில் மத சாயத்தை பூசி அவரை மதவாதியாக காண்கிறார்களே தவிர. மக்களுக்கு என்னவோ நரேந்திர மோடியின் முகத்தில் தெரிவது வளர்ச்சி மட்டுமே . அனைத்து தரப்பையும் அவர் அரவணைத்து செல்வதால்தான் மக்கள் தங்கள் வாக்குகளை அள்ளித்தருகிறார்கள் . குஜராத்தில் உள்ள இஸ்லாமியர்களில் 30 சதவிதத்தினர் மோடியை ஆதரிக்கிறார்கள் என்பதை எத்தனை பேர் அறிவர். இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக உள்ள எட்டு சட்டசபை தொகுதிகளில் ஆறு தொகுதி பாஜக.,வின் வசம் என்பதை எத்தனை எத்தனை நபர்கள் அறிவர்.

மோடியை மதவாதியாகவும், தன்னை மத சார்பற்றவராகவும் காட்டிக்கொள்ள முயலும் நிதிஷ் குமார்கள் தான் தோல்வி என்ற மண்ணை கவ்வியுள்ளனர். பீகாரின் மகாராஜ் கஞ்ச் தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் நிதிஷ் குமாரின் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் . 1 லட்சத்து 37 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் படுதோல்வியைச் சந்தித்துள்ளது. இத்தனைக்கும் சிறுபான்மையினரின் வாக்குகளை அள்ள மோடியை வசைபாடினார் . பீகாருக்குள் தேர்தல் பிரச்சாரம் செய்ய அவரை வரக்கூடாது என்றார். ஆனால் குஜராத்தில் நரேந்திர மோடி பெற்ற சிறுபான்மையினரின் வாக்குகளை கூட நிதிஷ் குமார் பெறவில்லை என்பதே நிதர்சனம். இதைத்தான் தேர்தல் முடிவுகளும் காட்டுகிறது .

மேலும் தன் சொந்த மாநில விவசாயிகளின் தற்கொலைகளை கூட தடுத்து நிறுத்த வக்கில்லாத மத்திய விவசாய துறை அமைச்சர் சரத்பவார். நரேந்திர மோடியை அளவுக்கு அதிகமாக ஊதப்பட்ட பலூன் , இது வெடிக்க போகிறது என்கிறார். நரேந்திர மோடி அளவுக்கு அதிகமாக ஊதப்பட்ட பலூன் அல்ல , அளவு அறிந்து ஊதப்படுகிற பலூன் . இது வெடிக்க கூடிய பலூன் அல்ல. மேலும் மேலும் உயரே பறக்ககூடிய பலூன் பாரதத்தின் புகழை உலகளவில் தூக்கி உயர்த்த கூடிய பலூன் என்பதையே இந்த தொடர் வெற்றிகள் காண்பிக்கின்றன.

தமிழ்தாமரை V.M.,வெங்கடேஷ்

Leave a Reply