உத்தர கான்ட் பேரழிவு... சொந்தக்காசில் சூன்யம் உத்தரகான்ட் மாநிலத்தில் வரலாறுகாணாத வெள்ளம்… நிலச்சரிவில் சாலைகள் எல்லாம் துண்டிப்பு… பல்லாயிரக் கணக்கில் சுற்றுலாபயணிகள் சிக்கித்தவிப்பு… 90-க்கும் மேற்பட்ட தங்கும்விடுதிகள் நீரில் அடித்து செல்லப்பட்டன… ஆயிரக் கணக்கானோர் பலி…

கேட்கக்கேட்க வேதனையாகத்தான் இருக்கிறது. ஆனால், ''இவை அனைத்தும் 'சொந்தக் காசில் நாமே வைத்துக்கொண்ட சூன்யம்' என்பதை சொல்லாமல் இருக்கமுடியவில்லை'' என்று வேதனைப்படுகிறார்கள்… சுற்றுச் சூழல் ஆர்வலர்களும் நிபுணர்களும்.

இயற்கை எழில்சார்ந்த இடங்களை, அவற்றின் இயல்புமாறாமல் பராமரிக்க வேண்டியது மனிதர்களின் கடமை. ஆனால், சுற்றுலா என்கிறபெயரில் அத்தகைய இடங்களை தாறுமாறாக ஆக்கிரமித்து சீரழிப்பதுதான் தொடர்கிறது. நம் ஊர் ஊட்டி, கொடைக்கானல் போன்ற இடங்களை இதற்கு உதாரணமாகச் சொல்லமுடியும். அங்கிருந்த காடுகளை எல்லாம் அழித்து கான்கிரீட்காடுகளாக மாற்றிக்கொண்டே இருக்கிறார்கள்.

அந்தவகையில் மிகமிக சென்ஸிடிவ் பகுதியான இமயமலைச்சாரலில் இருக்கும் உத்தரகான்ட் பகுதியில் சுற்றுலா மற்றும் புனிதயாத்திரை என்கிற பெயர்களில் ஏகப்பட்ட சீரழிவுகள் நடந்துள்ளன… நடந்துகொண்டிருக்கின்றன. கிட்டத்தட்ட அந்த மலைப் பிரதேசத்தை நகர்ப்புறமாகவே மாற்றி வைத்துள்ளனர். இயற்கைக்கு எதிரான இந்த தாறுமாறான ஆக்கிரமிப்பு… தற்போதையபேரழிவுக்கு முக்கியமானதொரு காரணமாகியிருக்கிறது.

சுற்றுலா செல்லாதீர்கள் என்று தடை போடுவது கடினம். ஆனால், சுற்றுலா என்கிறபெயரில் இயற்கை எழில்சார்ந்த இடங்களை ஆக்கிரமித்து, அவற்றையெல்லாம் உங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நினைக்காதீர்கள் என்றாவது சொல்லலாம் தானே! ஆனால், இங்கே அரசாங்கமே 'சுற்றுலாவளர்ச்சி' என்கிற பெயரில் இயற்கை எழில்சார்ந்த இடங்களையெல்லாம் வியாபார தலங்களாக மாற்றி வைத்திருக்கும் போது… யாரை நோவது?!

Leave a Reply