தலைப்பிற்குள் செல்வதற்கு முன், சூழலியலில் ( Ecology ) உணவு எவ்வாறு உற்பத்தி செய்யப்படுகின்றது மற்றும் பயன்படுத்தப்படுகின்றது என காணலாம்.

உணவின் ஆறு முக்கிய ஊட்டச்சத்துக்கள் எவையென நாம் முன்பே பார்த்தோம்.அவை 1.சர்க்கரைகள் ( Carbohydrates ) 2.புரதங்கள் ( Proteins ) 3.கொழுப்புகள் ( Fats ) 4.உயிர்ச்சத்துக்கள் ( Vitamins ) 5.தாதுக்கள் ( Minerals ) 6.நீர் என்பவாகும்.

இவற்றில் சர்க்கரை என்பதனை தாவரங்கள் ஒளிச்சேர்க்கையின் ( Photosynthesis ) மூலம் பெறுகின்றன.இதில் தாவரங்களின் இலைகள், சூரிய ஒளி மற்றும் காற்றிலுள்ள கார்பன் டை ஆக்ஸைடு மற்றும் வேரின் மூலம் உறிஞ்சப்பட்ட நீர் ஆகியவற்றைக் கொண்டு இதனை நிகழ்த்துகின்றன.இதில் ஆக்ஸிஜன் கழிவாக வெளியேற்றப்படுகின்றது.மேலும் இந்நிகழ்வில் வளிமண்டலத்திலுள்ள கார்பன் டை ஆக்ஸைடு, இயற்கை வடிவிலான ( Organic ) கார்பனாக மாற்றப்படுகின்றது.இது முதல்நிலை உற்பத்தி ( Primary Production ) எனப்படுகின்றது.

அடுத்ததாக தாவரங்கள் வேர்களின் மூலம் மண்ணிலிருந்து நைட்ரஜன்,பாஸ்பரஸ்,பொட்டாசியம் மற்றும் பிற தாதுக்களை உறுஞ்சுகின்றன.

பிறகு தாவர செல்களில் நடைபெறும் பல்வேறு வேதிவினைகள் மூலமாக உணவின் பிற ஊட்டச்சத்துக்களான புரதங்களும்,கொழுப்புகளும்,உயிர்ச்சத்துக்களும் பெறப்படுகின்றன.

இவ்வாறான வழிகள் மூலம்,மேற்சொன்ன ஆறு ஊட்டச்சத்துக்களும் தாவரங்களில் காணப்படுகின்றன. இவ்வாறாக தாவரங்கள் உணவை தாமே உற்பத்தி ( Autotroph ) செய்பவராக அமைகின்றன.

இதனால் தாவரங்கள், உணவு சங்கிலியில் முதல்நிலை உற்பத்தியாளர்கள் ( Primary Producers ) என்ற முதல் நிலையில் அமைகின்றன.

இனி இந்த அடிப்படையில், நம் முன்னோர்களான தொல் தமிழர்கள், இயற்கை சார்ந்த வேளாண்மையை எவ்வாறு மேற்கொண்டனர் என பார்க்கலாம்.

அறுவடை முடிந்ததும் ஒரு பகுதி தானியங்கள், விதையாக சேமிக்கப்படுகின்றன.பின்னர் மழை பெய்த ஒரு நாளில் நிலம், ஏர் மற்றும் மாடு கொண்டு உழப்படுகின்றது.இதனால் நிலம் பொல பொலவென மென்மையாகின்றது. இது பயிர்கள், மண்ணில் நன்கு வேர் பிடித்து வளர்வதற்கு வழி செய்கின்றது.

பின் உரிய நேரம் பார்த்து விதைகள் நிலத்தில் விதைக்கப்படுகின்றன.மண் என்பது பாக்டீரியாக்கள், பூஞ்சைகள் ( Fungi ), பாசிகள் (Algae ) போன்ற பல்வேறு நுண்ணுயிர்கள் வாழும் வீடாகும்.

இந்த உண்மையினை நன்கு அறிந்த நம் முன்னோர்கள் விலங்குகள் மற்றும் தாவர கழிவுகளை மண்ணில் ஈடுகின்றனர்.இவ்வாறு மாட்டு சாணம் முதலான விலங்கு கழிவுகளை மண்ணில் இடும்பொழுது மண்ணில் நுண்ணுயிர்கள் பல்கி பெருகுகின்றன.அடுத்து தாவர கழிவுகளை இடும்பொழுது, இந்த நுண்ணுயிர்கள் அவற்றை உணவாக கொள்கின்றன.

இந்த நுண்ணுயிரிகளின் பெரும்பயன் என்னவென்றால், பயிர்களின் வளர்ச்சிக்கு தேவையான நைட்ரஜன்,பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் ஆகிய தாதுக்களை மண்ணில் சேர்க்கின்றன.இதற்கு கழிவுகளையும்,காற்றையும் இந்த நுண்ணுயிர்கள் பயன்படுத்தி கொள்கின்றன.இவையே இயற்கை உரங்களாக அமைகின்றன.இவ்வாறாக மண்ணில் சேரும் தாதுக்கள், வேர்கள் மூலம் உறிஞ்சப்பட்டு பயிர்கள் நன்கு வளர்கின்றன.

தேவையான பொழுது நீர், வாய்க்கால்கள் மூலம் பாய்ச்சப்படுகிறது.இதற்கு ஆறு,ஏரி,கண்மாய்,குளம்,கிணறு ஆகியன உதவுகின்றன.இந்த அவசியம் கருதியே தொன்மை காலத்திலிருந்து பல்வேறு ஏரிகளும்,குளங்களும்,கண்மாய்களும்,கிணறுகளும் வெட்டப்பட்டு வந்துள்ளன.மேலும் அவை உரிய கால இடைவேளிகளில் செப்பனிடப்பட்டு வந்துள்ளன.இதன் மூலம் பெரும்பங்கு மழை நீர் சேகரிக்கப்பட்டு வந்தது.

இது தவிர பல்வேறு உயிரினங்கள் விவசாயத்திற்கு உதவி செய்கின்றன.இதனை நன்கு அறிந்திருந்த நம் முன்னோர்கள், இவற்றின் உதவியை சிறப்பாக பயன்படுத்திக் கொண்டனர்.

அவற்றில் முதலாவது மண்புழு ஆகும்.இது ஆண்டு முழுவதும் நிலத்தில் துளைகளை இட்டு கொண்டே இருக்கின்றது.மேலும் இவற்றின் கழிவுகளும் நல்ல உரமாக அமைகின்றன.இவை தாவர வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகின்றன.இதனால் மண்புழு விவசாயிகளின் நண்பன் எனப்படுகின்றது.

மேலும் பல்வேறு பூச்சியினங்கள் பயிர்களுடன் தொடர்புடையன.இவற்றால் பயிர்களுக்கு நன்மை,தீமை இரண்டும் உண்டு.

வயல்களில் நடக்கும் பயிர் வேளாண்மையில்,தேனீ,குளவி,வெட்டுக்கிளி மற்றும் வண்ணத்துப்பூச்சி ஆகியன அயல் மகரந்த சேர்க்கை ( Cross pollination ) நடைபெற உதவுகின்றன. இதனால் நோய் மற்றும் வறட்சியை தாங்கி வளரும் வீரியமான விதைகள் கிடைக்கின்றன.

மேலும் மரங்கள் நிறைந்த தோட்ட வேளாண்மையில், பறவைகள், அணில் மற்றும் பூச்சியினங்கள் அயல் மகரந்த சேர்க்கை நடைபெற உதவுகின்றன.

உரிய பருவகாலங்களில் சரியான பயிர்களை தேர்ந்தெடுப்பதன் மூலம் நன்மை செய்யும் பூச்சிகளை முழுமையாக பயன்படுத்தினர். தீமை செய்யும் பூச்சிகளின் எண்ணிக்கை பல்வேறு இயற்கை பூச்சி விரட்டிகளின் மூலம் குறைக்கப்பட்டது.

இவ்வாறாக தொன்மைக்கால வேளாண்மை பல்வேறு பறவைகளையும்,விலங்குகளையும்,பூச்சிகளையும் சார்ந்து இருந்ததால் இவற்றுக்கு இருப்பிடம் அளிக்கும் வகையில் அன்றைய கிராமங்கள் வடிவமைக்கப்பட்டன.அதாவது வயலை ஒட்டி மரங்கள் நிறைந்த சோலைகள் அமைக்கப்பட்டன.அதனைத் தாண்டி, கால்நடைகள் மேய்வதற்கு மேய்ச்சல் நிலங்கள் ( Grazing land ) அமைந்திருந்தன.இதற்கு அடுத்து காடுகள் அமைந்திருந்தன.இதற்கிடையில் ஆங்காங்கே நீர்நிலைகள் இருந்தன.

இத்தகைய அமைப்பின் மூலம் மழை வளம் அதிகரித்து அது முறையாகவும் சேமிக்கப்பட்டு வந்தது.

பெரும்பாலும் வேளாண் பணிகளுக்கு மனித உழைப்பு மிகுந்திருந்தது.மாடுகளின் உழைப்பும் பயன்படுத்தப்பட்டது.

இந்த வேளாண் அமைப்பில் விவசாயிகளுக்கு பெரிதாக எந்த செலவும் இருப்பதில்லை.இதனால் பொருளாதார சிக்கல் எதுவும் ஏற்படவில்லை.மேலும் பறவைகள்,தாவரங்கள்,விலங்குகள் சிறப்பாக வாழும்படி சுற்றுச்சூழல் பேணி காக்கப்பட்டது.இந்த வகையில் விவசாயம் என்பது முற்றிலும் இயற்கையை சார்ந்தே அமைந்திருந்தது.

இவ்வாறாக விவசாயம் தொல்தமிழர்கள் வாழ்வில் முதன்மை தொழிலாக விளங்கியது.இதனை சார்ந்தே பிற தொழில்கள் அமைந்திருந்தன.இதனாலேயே திருக்குறள் " உழவே தலை ", " உழுவார் உலகத்தார்க்கு ஆணி " என்றெல்லாம் கூறுகின்றது.

மேலும் சூரிய ஓளியின் பங்கு வேளாண்மையில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது.ஆதலால் பூமியின் வட அரைக்கோளத்தில் நடு உச்சியில் ( Directly Over Head )சூரியன் தோன்றும், முதல் நாள் தைத்திருநாளாக பொங்கல் வைத்து கொண்டாடப்படுகின்றது.இதுவே தமிழர்களின் தலையாய விழாவாக அமைகின்றது.

இவ்வாறாக உழவை முதன்மையாக கொண்ட அன்றைய தமிழ் சமூகம் நோய்கள்,மன அழுத்தம் இன்றி மகிழ்ச்சியுடன் இருந்தது. மக்கள் நீண்ட உடல் மற்றும் மன நலத்துடன் வாழ்ந்தனர்.

இந்த நடைமுறை தமிழகத்தில் பிற்காலங்களில் பல்வேறு படையெடுப்புகளையும்,ஆட்சி மாற்றங்களையும் தாண்டி, அடிப்படை மாறாமல் தொடர்ந்து பின்பற்றப்பட்டு வந்தது.

பிறகு 15 ஆம் நூற்றாண்டின் இறுதியில் இந்தியாவிற்கான கடல் வழி கண்டுபிடிக்கப்படுகின்றது.இதனை தொடர்ந்து ஐரோப்பியர்களின் இந்திய வருகை அதிகரிக்கின்றது.

18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஐரோப்பாவில் ஏற்பட்ட தொழிற்புரட்சியின் காரணமாக பின்வரும் ஆண்டுகளில்,இந்தியாவில் தொழில் வாய்ப்புகள் பெருகுகின்றன.

இதன் காரணமாக தமிழ்நாட்டின் உள்நிலப்பகுதிகளில் காடுகள் அழிக்கப்பட்டு சிறிது சிறிதாக வயல்களாக மாற்றப்படுகின்றன.இதில் பருத்தி,கரும்பு போன்ற பணப்பயிர்கள் அதிகம் பயிரிடப்படுகின்றன.மலைப்பிரதேசங்களில் காடுகள் அழிக்கப்பட்டு தேயிலை,காப்பி தோட்டங்களாக மாற்றம் பெறுகின்றன.

20 ஆம் நூற்றாண்டின் மத்தியில் இரண்டாம் உலகப்போருக்கு பிறகு, வெடிமருந்து தயாரிக்க பயன்படும் நைட்ரஜன் வேதிப்பொருட்கள், விவசாயத்தில் உரங்களாக புகுத்தப்படுகின்றன.இதன் மூலம் குறுகிய காலத்தில் அதிக விளைச்சல் பெறலாம் என கூறப்பட்டது.

பிறகு பூச்சி கொல்லிகள் பயன்பாடும் அதிகரிக்கின்றது.நவீன விவசாயம் என்ற பெயரில் எந்திரங்கள் புகுத்தப்படுகின்றன.

இவ்வாறு தமிழர்களின் வேளாண்மைத் தொழில் பல வேண்டாத மாற்றங்களை சந்தித்து வந்துள்ளது.அதன் உச்சகட்டமாக இன்று மரபணு மாற்றப்பட்ட விதைகள் வரை வந்து நிற்கின்றது.

சரி, இத்தகைய இயற்கை சாராத வேளாண்மையால் ஏற்படும் விளைவுகள் என்ன ?

இயற்கை சார்ந்த விவசாய முறையில் நுண்ணுயிர்கள் பயிர்களுக்கு தேவையான ஊட்டசத்துக்களை அளிக்கும்.எந்தவித இரசாயனங்களும் பயன்படுத்தபடுவதில்லை.

ஆனால் இயற்கைக்கு எதிரான விவசாயத்தில் உரங்கள்,பூச்சிகொல்லிகள் என பல்வேறு இரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன.இதனால் மண்ணில் வாழும் பல நுண்ணுயிர்கள் சிறிது சிறிதாக அழிந்துவிடும்.பிறகு விளைச்சல் குறைந்து விடும்.பிறகு மண் மலட்டுத் தன்மையுடையதாக மாறிவிடும்.எந்த செடியுமே அதில் முளைக்காது.மேலும் இவை பல்வேறு சுற்றுச்சூழல் கேடுகளையும் உண்டாக்குகின்றன.

இவ்வாறு இரசாயனங்கள் பயன்படுத்தி விளைவிக்கப்படும் உணவை உண்பதால் ஏற்படும் விளைவுகள் என்ன ?.

நம் உடலில் தினமும் கோடிக்கணக்கான மெட்டபாலிச வேதி வினைகள் நடக்கின்றன.இந்த வினைகளை இத்தகைய உணவுகள் நேரடியாக பாதிக்கின்றன.இதனால் நாம் பல்வேறு கொடிய நோய்களுக்கு அடுத்தடுத்து ஆளாகி வருகின்றோம்.மேலும் நம் உடலின் மெட்டபாலிச விகிதமும் குறைந்து கொண்டே வருகின்றது.

மெட்டபாலிச விகிதத்தின் முக்கியத்துவம் என்னவென்று பார்ப்போம்.உங்கள் உடலின் மெட்டபாலிச விகிதம் அதிகமென்றால், நீங்கள் உண்ணும் உணவு நன்கு செரித்து முழுவதும் ஆற்றலாக மாறிவிடும்.

ஆனால் உங்கள் உடலின் மெட்டபாலிச விகிதம் குறைவு என்றால், நீங்கள் உண்ணும் உணவு நன்கு செரிக்காது;செரித்த பகுதியும் முழுவதும் ஆற்றலாக மாற்றமடைவதில்லை.இதனால் நீங்கள் சிறிதளவே உண்டு வந்தாலும், உடல் பருமன் அதிகரிக்கும்.

இன்றைய விவசாயம் எதிர்நோக்கியுள்ள பிரச்சனைகள் :
இரசாயன உரம் பயன்படுத்தும் விவசாயத்தில் செலவு அதிகரித்து கொண்டே செல்கின்றது.இதனால் விவசாயிகள் தற்கொலை அதிகரிக்கின்றது.2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டில் கடந்த பத்தாண்டுகளில்,எட்டே முக்கால் லட்சம் விவசாயிகள் தங்கள் நிலங்களை விற்று வேறு தொழிலுக்கு சென்றுள்ளனர்.இந்த நிலைமை இன்னும் அதிகரித்த வண்ணம் உள்ளது.

மேலும் மின் பற்றாக்குறை , நிலத்தடி நீர் மட்டம் தொடர்ந்து குறைவது, பருவ மழை தவறுதல்,நீர் நிலைகள் அழிக்கப்படுவது,அண்டை மாநிலங்களுடன் தண்ணீர் பிரச்சனை என நாம் எதிர்கொள்ளும் சிக்கல்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன.அதுவும் தமிழ்நாடு நீராதாரம் மிகவும் குறைவாக உள்ள மாநிலம் என்பது குறிப்படத்தக்கது.

இதனை எல்லாம் இணைத்து பார்க்கும்போது,இன்னும் சில ஆண்டுகளில் தமிழ்நாட்டில், மிகப்பெரிய உணவுப்பஞ்சம் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.

சரி இதற்கு என்னதான் தீர்வு ?

நாம் இனி இயற்கை சார்ந்த முறையில் விளைவிக்கப்பட்ட உணவுகளையே சிறிது சிறிதாக உண்ண ஆரம்பிக்க வேண்டும்.ஆனால் நகர்மயமாக்கல் பெருகி வரும் இந்த நாளில், இத்தகைய உணவுப்பொருட்கள் எல்லோருக்கும் கிடைப்பது மிகக்கடினம்.

எனவே பெரும்பாலான மக்கள் சிறிது சிறிதாக கிராமங்களுக்கு திரும்பி, இயற்கை சார்ந்த விவசாயத்தை மேற்கொள்ள வேண்டும்.இதன் மூலம் அனைவரும் இயற்கை சார்ந்த உணவுகளை உண்ண வாய்ப்பு ஏற்படும்.

ஆனால் இதல்லாம் நடைமுறைப்படுத்துவது மிகவும் கடினம் என்கிறீர்களா ?.பிரச்சனைகள் நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே இருக்கும்போது, அதற்கான தீர்வுகளும் கடினமாகவே இருக்கும்.வேறு வழியில்லை.குறைந்த பட்சம் இதை பற்றி சிந்தித்தாவது பார்க்கலாமே.

இயற்கை சார்ந்த விவசாயம் பற்றிய விழிப்புணர்வு தமிழ்நாட்டில்,இந்தியாவில் எந்த அளவு ஏற்பட்டுள்ளது ?

இயற்கை சார்ந்த வாழ்வியல் அறிஞர் நம்மாழ்வார் அவர்களின் முயற்சியால், தமிழ்நாட்டில் இதைப்பற்றிய விழிப்புணர்வு பரவலாக ஏற்பட்டுள்ளது.இவரின் வழிகாட்டுதலால் தமிழ்நாட்டில் பல ஆயிரம் பேர் இன்று இயற்கை சார்ந்த விவசாயம் செய்து வருகின்றனர்.திரு.நம்மாழ்வார் அவர்கள் இத்துறையில் அரை நூற்றாண்டு ஆராய்ச்சி அனுபவமுடையவர்.கால் நூற்றாண்டுக்கு மேலாக இதனை பற்றி விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டு வருபவர்.இவரை தமிழ்நாட்டு மக்கள் நன்கு பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

வட இந்தியாவில் வந்தனா சிவா போன்றவர்கள் இதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றார்கள்.இவர் தலைமையிலான குழுவே, வெளிநாட்டு நிறுவனம் ஒன்றின் வேப்ப மரத்திற்கான காப்புரிமை முயற்சியை தடுத்து நிறுத்தியது.இன்று இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் இயற்கை சார்ந்த விவசாயத்தை பற்றிய விழிப்புணர்வு அதிகரித்து வருகின்றது.

கிராமம் சார்ந்த வாழ்வியலின் நன்மைகள் :

கிராமத்தில் வாழும்போதுதான் இயற்கை சார்ந்த தூக்க முறை,குளியல் முறைகள்,உணவு முறைகள் ஆகியவற்றை கடைபிடிக்க முடியும்.சுவாசிக்க சுத்தமான காற்று,குடிநீர்,நஞ்சில்லாத உணவு ஆகியன கிடைக்கும்.சாலை விபத்துக்கள்,மன அழுத்தம்,கொலை,கொள்ளை குறைந்த சூழ்நிலை அமையும்.

குழந்தைகள் விளையாட தாராளமான, பாதுகாப்பான இடம் கிடைக்கும்.முதியவர்களுக்கும் அமைதியான சூழல் அமையும்.மகிழ்ச்சி நிறைந்த கிராம விழாக்களில் பங்கு கொள்ள முடியும்.நமது சிறு வயது நண்பர்கள், பிடித்த உறவினர்களுடன் அடிக்கடி பழக முடியும்.

இதன் மூலம் இன்று குணப்படுத்த முடியாதவை என்று கூறப்படும் பல்வேறு கொடிய நோய்கள்,கிராமத்து இயற்கை சூழ்நிலையில் குணம் பெறுவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

மேலும் கிராம வாழ்வியல் மூலமே நம் பாரம்பரிய விளையாட்டுகளை,கலைகளை மீட்டெடுக்க முடியும்.நாம் முன்பு கண்டு ரசித்த வண்ணத்து பூச்சி,தட்டான்,பொன்வண்டு,குழி வண்டு,பச்சைக்கிளி,சிட்டுக்குருவி ஆகியவற்றை நம் அடுத்த தலைமுறையும் கண்டு ரசிக்க வழி ஏற்படும்.சிந்திப்போமா ?.

உங்கள் கிராமம், உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

இதனை அனைவருக்கும் Share செய்யவும்.

நன்றி.

தமிழ் இயற்கை சார்ந்த வாழ்வியல் பக்கம்.

Leave a Reply