ஆடிட்டர் ரமேஷ்  படுகொலை   காட்டு மிராண்டித்தனமான செயல் சேலத்தில் பாஜக மாநில பொதுச்செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் கொடியோர் சிலரால் கோரமாக படுகொலைசெய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியையும் கலக்கத்தையும் தருகிறது. இது காட்டு மிராண்டித்தனமான செயல் என ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ கருத்து தெரிவித்துள்ளார். .

இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் … ஆடிட்டர் ரமேஷ் அவர்களை நன்கு அறிவேன். கட்சி எல்லைகளை கடந்து அனைவரிடத்திலும் அன்புபாராட்டி, இனிமையாக பேசி அவர்களின் நேசத்தைப்பெற்ற நல்ல மனிதர் . அவரோடு பலமுறை பேசிப்பழகி உள்ளேன். சேலத்தில் எனது தலைமையில் நடைபெற்ற உண்ணா விரதப் போராட்டத்தில் வாழ்த்தியதோடு, நீண்டநேரம் உடன் இருந்தார். 6 ஆண்டுகளுக்கு முன்பே அவரை கொலைசெய்யும் நோக்கத்தோடு, அவர் மீது வெடிகுண்டு தாக்குதல் நடந்தது .

இரண்டு வருடங்களுக்கு முன்பு அவர் வீட்டுவாசலில், அவர் கார் தீயிட்டு கொளுத்தப்பட்டது. கடந்த ஒன்றாம் தேதி வேலூரில் படு கொலை செய்யப்பட்ட இந்து முன்னணி செயலாளர் வெள்ளையப்பனுக்கு, ஆடிட்டர் ரமேஷ் நெருங்கியநண்பர் ஆவார். வெள்ளையப்பன் படுகொலைக்கு பின்னர் ரமேசுக்கு தக்கபாதுகாப்பை காவல் துறை கொடுக்கத் தவறிவிட்டது.

தன் மனைவி, புதல்வியுடன் உணவுவிடுதியில் உணவு அருந்திவிட்டு, அவர்களை வீட்டுக்கு அனுப்பிவிட்டு, அலுவலகம்சென்ற சிறிது நேரத்திலேயே ரமேஷ் படுகொலை செய்யப்பட்டதை எண்ணும் போதே தாங்கமுடியாத வேதனை செய்தியைப்படிக்கின்ற நமக்கே ஏற்படுகிறது என்றால், அவர்கள் குடும்பத்தினருக்கு ஏற்பட்டுள்ள கொடுந் துயரை கற்பனை கூட செய்யமுடியவில்லை.

ஈவு இரக்கம் இன்றி மனிதாபிமானத்தை குழிதோண்டி புதைத்து விட்டு, ஆடிட்டர் ரமேசை படுகொலைசெய்த கொடியவர்களை காவல் துறை தீவிர நடவடிக்கைகள் மூலம் கைதுசெய்து, குற்றக் கூண்டில் நிறுத்தி, தக்கதண்டனை கிடைக்க, உரிய நடவடிக்கையை விரைவு படுத்த வேண்டும். ஈ, எறும்புக்குக்கூட தீங்கு செய்யநினைக்காத, எவரிடத்திலும் கடிந்து கூடப் பேசாத பண்பாளரான நல்லமனிதர் ரமேசை கொலைசெய்த தீயவர்களுக்கு மனசாட்சியும் கிடையாது.

தான் ஏற்றுக்கொண்டிருக்கக்கூடிய பாரதிய ஜனதா கட்சியினுடைய கொள்கைக்காக பாடுபடுவதை சகித்துக் கொள்ள முடியாத அராஜக ரத்தவெறிதான் இந்த கொடூரமான படுகொலைக்கு காரணம் ஆகும். கடந்த ஓராண்டில்மட்டும் தமிழ்நாட்டில் பாஜக, இந்து இயக்கங்களை சேர்ந்த ஆறு பேர் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர். முக்கியத் தலைவர்கள் பயங்கர ஆயுதங்களால் தாக்கப்பட்டு உயிர்பிழைத்துள்ளனர்.

இந்தக் கொடூரச்சம்பவங்கள் தொடர்வது மிகவும் அச்சத்தை தருகிறது. இத்தகைய கொலை வெறி அராஜகத்தை வளர விடாமல் தடுக்கவும், காலம்காலமாக தமிழகத்தில் நிலவிவரும் சமூக நல்லிணக்கத்தை காக்கவும் அனைவரும் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும். ஜனநாயகத்தில் சமயம் உள்ளிட்ட அனைத்து பிரச்சினைகளிலும், கொள்கைகளிலும் கருத்துச்சுதந்திரம் அடிப்படை உரிமை . கருத்தை, கருத்தால் எதிர்கொள்ளவேண்டுமே தவிர, கொலைவெறி கத்தியால் அல்ல. வேலூரிலும், சேலத்திலும் நடைபெற்ற சம்பவங்கள் மிகுந்த அச்சத்தையும், கவலையையும் தருகிறது ,

ஆடிட்டர் ரமேஷ் அவர்களை கோரமரணத்தில் பறிகொடுத்து, துயரத்தில் துடிதுடிக்கும் அவரது குடும்பத்தினருக்கும், பாஜக.,வினருக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின்சார்பில் என் கண்ணீர் அஞ்சலியை தெரிவித்து கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.

Leave a Reply