பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் கொல்லப்பட்டதை கண்டித்து இன்று மாநிலம் தழுவிய முழு அடைப்பு போராட்டத்திற்கு பாஜக அழைப்பு விடுத்துள்ளது.

இதன்காரணமாக புதுச்சேரியில் இன்று பெரும்பாலான கடைகள் அடைக்ககப் பட்டுள்ளன. அரசு பேருந்துகள் போலீஸ் பாதுக்காப்புடன் இயக்கப்பட்டுவருகிறது. மேலும் தனியார்பேருந்துகள் மற்றும் ஆட்டோக்கள் மிக குறைந்த எண்ணிக்கையிலேயே இயங்குகின்றன. பெரும்பாலான பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளன.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மொத்தம் 22 இடங்களில் பா.ஜ.வினர் மறியல் போராட்டம் நடத்தினர்.

சென்னை சைதாபேட்டை மார்க்கெட் சந்திப்பு அருகே தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் தலைமையில் திரண்ட தொண்டர்களை போலீசார் கைது செய்தனர். பெரவள்ளூர் சந்திப்பில் தேசிய செயலாளர் தமிழிசை சவுந்திரராஜன், அண்ணாநகர் வளைவு அருகே மாநில துணை தலைவர் சக்கரவர்த்தி, தேனாம்பேட்டை ஆலயம்மன் கோயில் அருகே மாநில செயலாளர் வானதி சீனிவாசன், சென்னை சைதாபேட்டை மார்க்கெட் சந்திப்பு அருகே பாஜக மாநில IT தலைவர் பாலாஜி, சூளைமேடு சிக்னல் அருகில் இளைஞர் அணி மாநில செயலாளர் வினோஜ் பி.செல்வம் தலைமையில் மறியல் போராட்டம் நடந்தது.

இன்று காலை கிருஷ்ணகிரி, கோவைபகுதிகளில் அரசுப்பேருந்துகள் மீது கல்வீச்சு சம்பவம் நடந்துள்ளது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை, உள்ளிட்ட இடங்களில் 90 சதவீத கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. பல்வேறு இடங்களில் காவல்துறை குவிக்கப்பட்டுள்ளனர்.மேலும் தனியார்பேருந்துகள் மற்றும் ஆட்டோக்கள் மிக குறைந்த எண்ணிக்கையிலேயே இயங்குகின்றன. பெரும்பாலான பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளன.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்களில் பாரதிய ஜனதா கட்சியினர் இன்று முழுகடையடைப்பு என கடைகளின் கதவுகளில் நோட்டீஸ் ஒட்டியிருந்தனர். மேலும் கடை உரிமையாளர்களை நேரில் சந்தித்து கடையடைப்பு குறித்து தெரிவித்தனர்.

இதனால் ஈரோடு மாவட்டத்தில் பெரும்பாலான நகரங்களில் இன்று காலை முதல் கடைகள் அடைக்கப்பட்டிருந்தது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பந்த்துக்கு ஆதரவு இருந்தது. கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

தனியார் வாகனங்கள் ஓடவில்லை. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. நேற்றிரவு முதல் மாவட்டத்தில் ஆங்காங்கே அரசு பஸ்கள் மீது கல்வீச்சு சம்பவங்கள் நடந்தன. நாகர்கோவில் நகரில் நேற்று நள்ளிரவில் 3 இடங்களில் அரசு பஸ்கள் கல்வீசி உடைக்கப்பட்டன.

சிவகாசி பகுதியில் ஆர்எஸ்எஸ் மாவட்ட தலைவர் சிவலிங்கம் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் சிவகாசி பேருந்துநிலையம் அருகே கடைகளை அடைக்கச் சொல்லி வற்புறுத்தியதாக கூறி காவல்துறையினர் சிவலிங்கம் உள்ளிட்ட இருவரை கைது செய்துள்ளனர்.

கூடுவாஞ்சேரி:கூடுவாஞ்சேரியில் ஆர்ப்பாட்டம், சாலை மறியல் செய்த பா.ஜ.வினர் 30 பேரை போலீசார் கைது செய்தனர். ஆடிட்டர் ரமேஷ் படுகொலையை கண்டித்து பா.ஜ.வினர் இன்று பந்த் போராட்டம் நடத்தினர். கூடுவாஞ்சேரியில் பா.ஜ.வினர் இன்று காலை ஒவ்வொரு கடையாக சென்று நோட்டீஸ் கொடுத்து கடையை மூடும்படி வற்புறுத்தினர். தகவல் அறிந்த இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமையில் 20&க்கும் மேற்பட்ட போலீசார் சென்று கடைகளை திறக்கும்படி கூறினர்.

இதனால் ஆத்திரம் அடைந்த பா.ஜ.வினர் கூடுவாஞ்சேரி ஜிஎஸ்டி சாலையில் ஆர்ப்பாட்டம் செய்தனர். பின்னர் சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர். அவர்களுக்கும் போலீசாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. மாவட்ட செயலாளர் நீலகண்டன், நிர்வாகிகள் கே.பி.ராகவன், மணி, தனசேகரன், சுகுமார், நாகராஜ் உள்பட 50 பேரை போலீசார் கைது செய்து, குண்டுகட்டாக தூக்கி சென்று வேனில் ஏற்றினர். அனைவரும் அங்குள்ள ஒரு திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளனர். மறியலால் அப்பகுதியில் போக்குவரத்து பாதித்தது.

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகனேரியில் கடையடைப்பு நடைபெற்றது. தெருக்களில் உள்ள ஒன்றிரண்டு கடைகளைத் தவிர பஜாரில் உள்ள பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

பாஜக வினர் ஆறுமுகனேரியில் உள்ள வியாபாரிகள் சங்கத்தினரை அணுகி கடையடைப்பிற்கு ஆதரவு தரக் கேட்டுக்கொண்டனர்.

ஆறுமுகனேரி வியாபாரிகள் ஐக்கிய சங்கம் பாஜக நிர்வாகி படுகொலைக்கு கண்டித்து ஞாயிற்றுக்கிழமை தீர்மானம் நிறைவேற்றியிருந்தனர். இந்நிலையில்  ஆறுமுகனேரி மெயின் பஜாரில் திருச்செந்தூர் ஒன்றிய பாஜக பொதுச்செயலாளர் இ.தங்கபாண்டி, மாவட்ட விவசாய அணி பொதுச்செயலாளர் தினகரபாண்டி, பேரூராட்சி உறுப்பினர் சி.முருகானந்தம், இந்து முன்னணியைச் சேர்ந்த ஜி.ராமசாமி உள்ளிட்டோர் கடைகளில் நேரடியாக சென்று தங்கள் பந்த்துக்கு ஆதரவு தரக் கேட்டுக் கொண்டதின் பேரில் கடைகள் அடைக்கப்பட்டன.

காட்டுமன்னார்கோயிலில் இன்று அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயிலில் பாஜகவினர் ஒன்றியச் செயலாளர் ராஜேந்திரன், நகரச் செயலாளர் மணி ஆகியோர் வர்த்தகர் சங்கத்தினரிடம் கடைஅடைகளை வலியுறுத்தி மனு அளித்தனர். பாஜகவினர் வேண்டுகோளை ஏற்று திங்கள்கிழமை காட்டுமன்னார்கோயில் பஸ்நிலையம், கடைத்தெரு உள்ளிட்ட பகுதிகளில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.

பண்ருட்டி மற்றும் புதுப்பேட்டையில் ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணியாகச் சென்ற பாஜகவினர் கைது செய்யப்பட்டனர்.

புதுப்பேட்டையில் பாஜக மாவட்ட தலைவர் சுகுமாறன் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாகச் சென்று கடைகளை மூட வலியுறுத்தினர். இவர்களை புதுப்பேட்டை காவல்துறையினர் கைது செய்தனர்.

இதேப்போல, பண்ருட்டியில் மாவட்ட அமைப்புச் செயலர் செல்வம் தலைமையில் 45 பேர் ஊர்வலமாகச் சென்று கடைகளை மூட வலியுறுத்தியதை அடுத்து, அவர்களை பண்ருட்டி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்

Leave a Reply