பாஜக பொதுச்செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் அண்மையில் படுகொலைசெய்யப்பட்டார். குற்றவாளிகளை போலீசார் விலைவீசு தேடிவரும் நிலையில், மற்றொரு வன்முறைக்கு குற்றவாளிகளால் சதித் திட்டம் திட்டப்பட்டுள்ளது தெரியவந்தது. இதனையடுத்து சென்னை

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் போலீசார் விடிய விடிய தீவிரசோதனை நடத்தினார்கள். பாஜ., கட்சியின் பொதுச்செயலாளர் ஆடிட்டர் ரமேஷ், இந்து முன்னணி செயலாளர் வெள்ளையப்பன் ஆகியோர் அடுத்தடுத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இக்கொலை வழக்குகளில் பரபரப்பு திருப்பமாக தேடப்படும் குற்றவாளிகளான போலீஸ் பக்ருதீன், பன்னா இஸ் மாயில், பிலால் மாலிக், அபுபக்கர் சித்திக் ஆகிய 4 தீவிரவாதிகளை தேடுவதாகவும், அவர்கள் பற்றி துப்பு கொடுத்தால் ரூ.20 லட்சம் சன்மானம் அளிக்கப் படும் என்றும் போலீசார் அறிவித்துள்ளனர். இவர்களில் போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக் ஆகியோர் மதுரை நெல்பேட்டையை சேர்ந்தவர்கள். பன்னா இஸ்மாயில் நெல்லை மேலப்பாளையத்தை சேர்ந்தவன். அபுபக்கர் சித்திக்கின் சொந்த ஊர் நாகூர்.

4 பேரும் அதிபயங்கர தீவிரவாதிகள் என்று போலீசார் தெரிவித்தனர். கோவை குண்டு வெடிப்பு வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இவர்கள் மீது உள்ளன. கோவை குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெறுவதற்கு 3 ஆண்டுகளுக்கு முன்னரே இந்து முன்னணி பிரமுகர் மனைவியை கொன்ற வழக்கு அபுபக்கர் சித்திக் மீது உள்ளது. வெடிகுண்டுகளை வீசி அல்-உம்மா தீவிரவாதிகளை தப்பிக்க வைத்தது மற்றும் தென்காசியில் இந்து முன்னணி பிரமுகர் குமார் பாண்டியனை கொலை செய்த வழக்கு உள்ளிட்ட பல வழக்குகள் போலீஸ் பக்ருதீன் மீது உள்ளன.

தமிழகத்தில் ஒரே ஆண்டில் இந்து இயக்க நிர்வாகிகள் 6 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவங்களில் இந்த 4 தீவிரவாதிகளுக்கும் தொடர்பு இருப்பதாக உறுதியான தகவல்கள் கிடைத்துள்ளன. இதையடுத்து அவர்களை கைது செய்ய தமிழகம் முழுவதும் தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து பாரதிய ஜனதா தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதற்கு மேல் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெற்று விடக்கூடாது என்பதில் போலீசார் கண்ணும் கருத்துமாக செயல்பட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் நேற்று இரவு 8 மணி அளவில் சென்னை மாநகர போலீசுக்கு அதிர்ச்சி தகவல் ஒன்று கிடைத்தது. கொலை செய்யும் சதி திட்டத்துடன் 4 பேர் சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் ஊடுருவி உள்ளனர். பெங்களூரில் இருந்து சென்னைக்கு ரெயிலில் வரும் முக்கிய பிரமுகர் ஒருவரை தீர்த்துக்கட்ட அவர்கள் திட்டமிட்டுள்ளனர் என்பதுதான் அது. இதனால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

போலீஸ் கூடுதல் கமிஷனர் தாமரைக் கண்ணன், இணை கமிஷனர் சங்கர், துணை கமிஷனர் பவானீஸ்வரி, ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டு கயல்விழி, டி.எஸ்.பி. தில்லை நடராஜன் ஆகியோர் உடனடியாக சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு விரைந்து சென்றனர். சென்ட்ரல் ரெயில் நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் உஷார் படுத்தப்பட்டன.

பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் ரெயிலை எதிர்பார்த்து இரவு 8.30 மணியில் இருந்து அனைத்து போலீஸ் அதிகாரிகளும் காத்திருந்தனர். இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையில் சுமார் 300 போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் ரெயில் நிலையத்தின் ஒவ்வொரு பகுதியையும் அங்குலம் அங்குலமாக சோதனையிட்டனர். சரியாக 9 மணி அளவில் பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் ரெயில் சென்ட்ரல் ரெயில் நிலையத்தை வந்தடைந்தது. இதனால் உச்சக்கட்ட பரபரப்பு ஏற்பட்டது.

எந்த விதமான அசம்பாவித சம்பவங்களும் நடைபெற்று விடக்கூடாது என்பதற்காக ரெயில் நிலையம் முழுவதுமே போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருந்தது.

ரெயிலில் இருந்து இறங்கியவர்களில் சந்தேகத்துக் கிடமானவர்களை போலீசார் பிடித்து விசாரித்தனர். ரெயில் நிலையத்துக்குள் வருபவர்களையும் தீவிரமாக சோதனை செய்தனர். இரவு 10.30 மணி வரை இச்சோதனை நடத்தப்பட்டது. ஆனால் எந்தவிதமான அசம்பாவிதங்களும் நடைபெறவில்லை.

இதன் பிறகே போலீசார் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இருப்பினும் சென்ட்ரல் ரெயில் நிலைய சோதனையால் சென்னை போலீசாரிடையே நேற்று இரவு பெரும் பரபரப்பும், பீதியும் காணப்பட்டது.

Tags:

Leave a Reply