ஆடிட்டர் ரமேசுக்கு இரங்கல்தெரிவிக்கும் பொதுக்கூட்டம் சேலத்தில் கொலைசெய்யப்பட்ட பாஜக மாநில பொதுச்செயலாளர் ஆடிட்டர் ரமேசுக்கு இரங்கல்தெரிவிக்கும் பொதுக்கூட்டம் ஜவஹர்மில் திடலில் இன்று மாலை நடைபெறுகிறது. இதில் பங்கேற்க பா.ஜ.க.,வின் மூத்த தலைவரும் முன்னாள் துணை பிரதமருமான எல்கே.அத்வானி வருகிறார். இதையொட்டி சேலம் மாநகர் மற்றும் ஜவஹர் மில் திடலில் உச்ச கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பா.ஜ.க மாநில பொதுச்செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் கடந்த 19 மரவனேரியில் உள்ள அவரது அலுவலக வாசலில் மர்மநபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.

தமிழக பா.ஜ.க., சார்பில் இரங்கல்கூட்டம் இன்று மாலை 4 மணியளவில் சேலம் 3ரோடு ஜவஹர் மில்திடலில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க பா.ஜ.க மூத்த தலைவர் எல்கே.அத்வானி இன்று மதியம் டெல்லியிலிருந்து தனிவிமானம் மூலம் சேலம் காமலாபுரம் விமானநிலையத்தில் வந்து இறங்குகிறார்.பின்னர் அங்கிருந்து குண்டுதுளைக்காத கார் மூலம் சேலம் மரவனேரியில் உள்ள ஆடிட்டர் ரமேஷ் கொலைசெய்யப்பட்ட அலுவலகத்தை பார்வையிடுகிறார்.பின்னர் அவரது இல்லத்திற்கு சென்று அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல்கூறுகிறார்.பின்னர் அங்கிருந்து கார்மூலம் இரங்கல் கூட்டம் நடைபெறும் ஜவஹர்மில் திடலுக்கு செல்கிறார். கூட்டம் முடிந்ததும் இரவு சேலம் இரும்பாலையில் உள்ள விருந்தினர் மாளிகையில் தங்குகிறார்.பின்னர் மறுநாள்காலை கார் மூலம் காமலாபுரம் சென்று அங்கிருந்து தனிவிமானம் மூலம் டெல்லி புறப்பட்டுசெல்கிறார்.

இரங்கல் கூட்டத்திற்கான ஏற்பாடுகளை பா.ஜ.க நிர்வாகிகள் ஏற்பாடு செய்துவருகின்றனர். அத்வானி வருகையையொட்டி சேலத்தில் உச்சக்கட்ட பலத்த போலீஸ்பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.சேலம் காமலாபுரம் தொடங்கி அத்வானி வந்துசெல்லும் பாதை முதல் அவர் தங்கும் இடம்வரை மாநகரின் முக்கிய வீதிகளில் பலத்த போலீஸ்பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதேபோல் கூட்டம் நடைபெறும் ஜவஹர் மில் திடலிலும் உச்சக்கட்ட ஆயுதம் தாங்கிய போலீஸ்பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மேலும் சேலம்மாநகரில் பொதுமக்கள் அதிகம் கூடும் ஜங்சன்,பழைய பஸ்நிலையம்,புதிய பஸ்நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல் சேலம் மாநகருக்குள் நுழையும் அத்தனை சாலைகளிலும் செக்போஸ்ட் அமைக்கப்பட்டு வரும்வாகனங்கள் கண்காணிக்கப்பட்டு போலீசார் வாகனங்களின் எண்களை குறித்தும், வாகன ஓட்டிகளின் செல்போன்களையும் வாங்கி வைத்துக்கொள்கின்றனர்.

ஆடிட்டர் ரமேஷ் அலுவலகம் மற்றும் வீடு உள்ள மரவனேரி பகுதியில் உள்ள வீடுகளில் தங்கியிருப்போர் விபரம் மற்றும் செல்போன் எண்களையும் போலீசார் குறித்துவைத்துள்ளனர். மேலும் அந்தபகுதிகளில் புதிய நபர்கள் யாரும் அத்வானி வந்துசெல்லும் வரை தங்க தடையும் விதித்துள்ளனர்.

நேற்று காலை தமிழக ஏ.டி.ஜி.பி ராஜேந்திரன் சேலம்வந்தார்.அவரும் உயர்போலீஸ் அதிகாரிகளும் அத்வானி வந்துசெல்லும் பாதைகளில் ஆய்வுசெய்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் பார்வையிட்டனர்.பின்னர் அதிகாரிகளுடன் அத்வானிக்கு பாதுகாப்பு தருவதுகுறித்தும் இரங்கல் கூட்டத்திற்கு பாதுகாப்பு அளிப்பது குறித்தும் விவாதித்தனர்.இதில் ஐஜி.க்கள் கண்ணப்பன்,டேவிட்சன் ஆசிர்வாதம்,சேலம்போலீஸ் கமிஷனர் கே.சி.மஹாலி,டி.ஐ.ஜி.க்கள் சஞ்சய்குமார்,செந்தாமரைக் கண்ணன்,பெரிய்யா,போலீஸ் சூப்பிரண்டுகள் சக்திவேல்,பொன்னி,அஸ்ராக்கார்க் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:

Leave a Reply