கோவையில் பதற்றம்: பாஜக நிர்வாகி வீடு மீது பெட்ரோல் குண்டு வீச்சு கோயம்புத்தூரில் பா.ஜ.க. நிர்வாகி வீட்டில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுவீசிய சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை, சிறுவாணி மெயின் ரோடு காளம்பாளையம் மாரியம்மன் கோவில் அருகே வசித்து வருபவர் வந்தே மாதரம் தியாகு என்கின்ற தியாகராஜன்.

இவர் கோவை தொண்டாமுத்தூர் ஒன்றிய பா.ஜ.க. தலைவராக இருந்து வருகிறார். இந்த நிலையில், இன்று அதிகாலை யாரோ மர்ம மனிதர்கள் தியாகராஜன் வீட்டின் மீது பெட்ரோல் குண்டை வீசிவிட்டு தப்பிச் சென்று விட்டனர். மர்ம மனிதர்கள் வீசிய பெட்ரோல் குண்டு தியாகு வீட்டின் முன்பகுதியில் விழுந்து வெடித்து சிதறியது. அப்போது, சத்தம் கேட்டு வீட்டில் இருந்த தியாகராஜன் மற்றும் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர்.

பெட்ரோல் குண்டு வீட்டின் முன்பு விழுந்து வெடித்ததால் சேதம் தவிர்க்கப்பட்டது. பெட்ரோல் குண்டு வீச்சு குறித்து பேரூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர், துணை சூப்பிரண்டு தங்கதுரை மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.

அங்கு கிடந்த பெட்ரோல் குண்டின் சிதறல்களை சேகரித்தனர். தியாகராஜன் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதற்கு முன் விரோதம் காரணமா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்பது தெரியவில்லை. பெட்ரோல் குண்டை வீசிச்சென்ற மர்ம மனிதர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தை தொடர்ந்து தியாகு வீட்டின் முன்பு பாதுகாப்புக்காக போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.

Leave a Reply