எல்லையில் சுட்டுக்கொல்லப்பட்ட இந்திய வீரர்களின் உடல்களை பெறுவதற்கு விமான நிலையத்துக்கு ஆளும் ஐக்கிய ஜனதாதள அமைச்சர்கள் வராததற்கு பாஜக கடும்கண்டனம் தெரிவித்துள்ளது.

இருதினங்களுக்கு முன் எல்லையில் சுட்டுக்கொல்லப்பட்ட 5 வீரர்களில் 4 பேர் பிகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களது உடல்கள் விமானப்படையின் சிறப்புவிமானம் மூலம் பாட்னாவுக்கு புதன்கிழமை இரவு கொண்டுவரப்பட்டது.

பாட்னா விமான நிலையத்தில், இறந்தவீரர்களின் உடல்களுக்கு புதன்கிழமை இரவு அஞ்சலிசெலுத்திய பாஜக தேசிய துணைத் தலைவர் சிபி.தாக்கூர், இறந்த ராணுவ வீரர் விஜய்ராய் என்பவரின் இறுதிச்சடங்கில் வியாழக்கிழமை காலை பங்கேற்றார்.

இது குறித்து அவர் பாட்னாவில் செய்தியாளர்களிடம் கூறியது: பாட்னாவில் இருந்த போதும், எந்த அமைச்சரும் வேண்டுமென்றே விமானநிலையத்துக்கு வரவில்லை. கொல்லப்பட்ட வீரர்களின் குடும்பங்களுக்கு உணர்வு பூர்வமாக உறுதுணையாக இருக்கிறோம் என்பதைக் காட்டவேண்டிய தருணமிது.

ஆனால், அமைச்சர்கள் பங்கேற்காதது, துயருற்ற குடும்பங்களின்மீது, மாநில அரசு அக்கறையற்ற தன்மையுடன் இருப்பதையேகாட்டுகிறது. இது குறித்து முதல்வர் நிதீஷ்குமார் வெளிப்படையாக விளக்கம் அளிக்கவேண்டும் என்றார் அவர்.

பிகார் மாநிலத்தைச் சேர்ந்த மூத்த பா.ஜ.க தலைவர்களுள் ஒருவரான கிரிராஜ்சிங்கும் ஐக்கிய ஜனதா தளத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

Leave a Reply