ஆடிட்டர் ரமேஷ் கொலைவழக்கில் போலீஸ் பக்ருதீன்க்கு முக்கிய பங்கு ஆடிட்டர் ரமேஷ் கொலைவழக்கில் சந்தேகத்தின் பேரில் தேடப்பட்டுவரும் போலீஸ் பக்ருதீன் மற்றும் அவரது நண்பர்களுக்கு முக்கிய பங்குள்ளதை சிறப்பு தனிப்படைப் போலீஸார் உறுதிசெய்துள்ளனர்.

சேலத்தில் கடந்த ஜூலை 19-ஆம் தேதி பாஜக மாநில பொதுச்செயலாளர் ரமேஷும், ஜூலை முதல் தேதி வேலூரில் இந்து முன்னணி மாநிலச்செயலாளர் வெள்ளையப்பனும் கொலை செய்யப்பட்டனர்.

இந்தக்கொலைகள் குறித்து விசாரிக்க முதல்வர் உத்தரவுப்படி, சிபிசிஐடி. சிறப்பு புலனாய்வுக்குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டுவருகிறது.

சி.பி.சி.ஐ.டி. சிறப்பு புலனாய்வுக் குழுவினருக்கு உதவியாக ஒவ்வொருமாவட்ட, மாநகர காவல்துறையில் பணிபுரியும் சிறந்த துப்பறியும் திறன்கொண்ட ஆய்வாளர்கள் கொண்ட தனிப்படையும் அமைக்கப்பட்டு விசாரிக்கப்படுகிறது.

இதுதொடர்பாக, அத்வானி வருகையின் போது மதுரையில் தரைப் பாலத்தில் பைப்வெடிகுண்டு வைத்த வழக்கு மற்றும் மேலும் சில வழக்குகளில் தேடப்பட்டுவரும் மதுரை, நெல்பேட்டையைச் சேர்ந்த போலீஸ் பக்ருதீன், பிலால்மாலிக், திருநெல்வேலி மாவட்டம், மேலப்பாளையத்தை சேர்ந்த பன்னா இஸ்மாயில், நாகூரைச்சேர்ந்த அபுபக்கர் சித்திக் ஆகியோருக்குத் தொடர்பிருக்கலாம் என்று சிறப்பு புலனாய்வுக் குழுவினர் சந்தேகித்தனர்.

இந்நிலையில், அவர்களுக்கு இந்தக்கொலையில் முக்கியப்பங்கு உள்ளதை விசாரணை அதிகாரிகள் உறுதிசெய்துள்ளனர்.

இதுகுறித்து சிறப்பு புலனாய்வுக் குழுவில் இடம்பெற்றுள்ள அதிகாரி ஒருவர் கூறுகையில், போலீஸ்பக்ருதீன் உள்ளிட்ட தேடப்படும் நால்வருக்கு இதில் முக்கியப்பங்குள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதற்கான ஆதாரங்கள் திரட்டப்பட்டுள்ளன. அவர்கள் பற்றிய அனைத்து தகவல்களும் சேகரிக்கப்பட்டுள்ளன. இன்னும் சிலதினங்களில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றார்.

Leave a Reply