இந்தியமுஸ்லிம்கள் அனைவரும், சவுதியினர் நடை முறையான வகாபி பிரிவை நிராகரிக்கவேண்டும். மதரசாக்களுக்கு சவுதி அரேபியாவிலிருந்து வரும் நிதியுதவிகளை கண்காணிக்கவும், தணிக்கைசெய்யவும் மத்திய அரசு, ஒருவாரியத்தை அமைக்கவேண்டும்’ என்று அகில இந்திய உலாமா மற்றும் மஷைக் வாரிய பொதுச்செயலர் கேட்டுக் கொண்டுள்ளார்.

உபி.,யின் மொராதாபாத்தில், இஸ்லாத்தின் சூபி பிரிவைச்சேர்ந்த அகில இந்திய உலாமா மற்றும் மஷைக் வாரியத்தின் (ஏ.ஐ.யு.எம்.பி.,) முஸ்லிம் மகாபஞ்சாயத்து என்ற ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் லட்சக் கணக்கானோர் கலந்துகொண்டனர்.
இதில் பேசிய ஏ.ஐ.யு.எம்.பி.,யின் பொதுச் செயலர் மவுலானா சையது முகமதுஅஷ்ரப் கிச்சவுச்வி கூறியதாவது:

இந்தியாவில் இருக்கும் முஸ்லிம்கள், வகாபி பிரிவு கருத்துக்களை நிராகரித்து ஒதுக்கவேண்டும். அதன் மூலம்தான், இஸ்லாம் தனது இயல்பான சகிப்புத்தன்மையை உள்ளடக்கிய சூபி பிரிவுக்கு திரும்பஇயலும்.

நாட்டில் உள்ள மதரசாக்கள், தர்காக்கள், வக்புவாரிய சொத்துக்கள் ஆகியவை வகாபி மற்றும் தியோபந்த் பிரிவினர் கைகளில்தான் உள்ளன. எங்களுக்கு சொந்தமான மசூதிகள், மதரசாக்களைக்கூட மத்திய அரசு அவர்களிடம் ஒப்படைத்துவிடுகிறது. மதரசாக்களுக்கு வரும் நிதியுதவி தணிக்கைசெய்யப்படும் வகையிலும், அவற்றுக்கு சவுதி அரேபியாவில் இருந்துவரும் நிதியுதவிகளை கண்காணிக்கும் வகையிலும் மத்திய மதரசாவாரியம் ஒன்றை அமைப்பதற்கு மத்திய அரசு உடனடியாக ஒரு மசோதாவை தாக்கல்செய்ய வேண்டும்.

ஒருபயங்கரவாதி உங்கள் ஆதரவை நாடுவார் என்றால், அல்லது யாராவது ஒருவர் உங்களை பயங்கரவாதியாக்க முயல்கிறார் எனில் , உடனடியாக அவரை அருகில் இருக்கும் காவல் நிலையத்தில் பிடித்துக்கொடுங்கள்.

இப்போது நமது உரிமைகளைக் கோரவேண்டிய நேரம் வந்துவிட்டது. இனி வகாபி பிரிவை ஆதரிக்கமாட்டோம் என நாம் உறுதி பூணவேண்டும். நம் தாய்நாட்டின் ஒற்றுமைக்காக பணியாற்றவேண்டும் என உறுதி மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு மவுலானா கிச்சவுச்வி தெரிவித்தார்.

மகாபஞ்சாயத்தில் பேசிய வாரிய உறுப்பினர்கள், வகாபி பிரிவு கருத்துக்களை புறக்கணிக்க வலியுறுத்தினர். அதோடு, அந்தப்பிரிவைச் சேர்ந்த சிலரால் ஒட்டுமொத்த இஸ்லாத்திற்கும் களங்கம் ஏற்படுவதாகவும் வருத்தம்தெரிவித்தனர். பின்னர் பத்திரிகையாளர்களிடம் பேசிய மவுலானா கிச்சவுச்வி,” இன்று நாட்டின் மதரசாக்கள், சவுதிபணத்தில் இயங்கக்கூடிய வகாபி அமைப்புகளின் பிடியில் சிக்கியுள்ளன. அவர்கள் அதிக கட்டுப்பாடுகொண்ட வகாபி பிரிவுநெறிகளை மட்டுமே போதிக்கின்றனர்’ என்றார்.

Leave a Reply