மோடியை படேலுடன் ஒப்பிட்டால் மட்டும்  பொத்துக் கொண்டு வருகிறதோ...!, நரேந்திரமோடியை, மதவெறிபிடித்த ரத்தக்காட்டேரி போல சித்திரிக்க முயன்று, ஒவ்வொருமுறையும், மூக்குடைபட்டு, மண்ணை கவ்வுகிறது காங்கிரஸ். எத்தனைமுறை மூக்குடைபட்டாலும், தன்முயற்சியில், மனம்தளராத விக்ரமாதித்தன் மாதிரி, விடாமுயற்சியோடு, தொடர்ந்து, அதே காரியத்தைச் செய்துவருகிறது.

நரேந்திர மோடி, பா.ஜ.க,வின் தேர்தல் பிரசாரக்குழு தலைவராக நியமிக்கப்பட்டதை விரும்பாதசிலர், மோடிக்கு எதிராக, அறிக்கைவிடுவதோடு, ம.பி., முதல்வர் சிவராஜ்சிங் சவுகானை, மோடியோடு ஒப்பிட்டுப்பேசி, சவுகானுக்கு கொம்புசீவத் துவங்கியுள்ளனர்.

ஆனால், சவுகானோ, "மோடியின் மகத்தானபணிகளை, நம் நாட்டின் இரும்புமனிதர் என, அழைக்கப்படும் சர்தார் வல்லபாய்படேலின் செயல்பாடுகளுடன் மட்டுமே ஒப்பிடமுடியும்; படேலைபோன்றவர் மோடி' என்று , பாராட்டி, "பேஸ்புக்'கில், குறிப்பிட்டுள்ளார்.

சாதாரணமாகவே குதிக்கும் காங்கிரஸ்காரர்களுக்கு, சவுகான், மோடியை, படேலுடன் ஒப்பிட்டதும், பொங்கி எழுந்துவிட்டனர். அக்கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான ரஷீத்ஆல்வி, "சர்தார் படேல், நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்டவர். நாட்டுமக்களின் நலனுக்காக சிறைசென்றவர். மோடியை, படேலுடன் ஒப்பிடுவது, படேலை களங்கப்படுத்தும்செயல்' என்று, எகிறிஎகிறி குதித்திருக்கிறார்.

படேல், வெள்ளையர்களிடமிருந்து நாடு சுதந்திரம்பெற போராடினார் என்றால், மோடி கொள்ளையர்களிடமிருந்து, நாட்டைமீட்க, தற்போது, போராட்டத்தை துவங்கி இருக்கிறார். ரஷீத் ஆல்வி உட்பட, நாட்டுமக்கள் அனைவருக்குமே தெரிந்த உண்மை இது. சரி இருக்கட்டும். மோடியை, சர்தார்படேலுடன் ஒப்பிட்டதற்கு, இந்தகுதி குதிக்கின்றனரே, நாட்டில், காந்தி என்று சொன்னாலே, அது, புன்னகையோடு, கையில் ஒரு தடியோடு, முழங்கால் வரை தெரியும் பஞ்சகச்சம்கட்டிய, தேசத் தந்தை காந்தியை மட்டுமே குறிக்கும்.

ஆனால், அந்த காந்தி என்றபெயரை, காங்கிரசார்  எப்படியெல்லாம் பயன் படுத்துகின்றனர்! இந்திராபிரியதர்ஷினி என்ற பெயர்கொண்ட நேருவின் மகள், பெரோஸ் காந்தியை மணம் முடித்துக்கொண்டதால், இந்திராகாந்தி ஆனார். அவர்களுக்கு பிறந்த பிள்ளைகளுக்கு, ராஜிவ், சஞ்சய் என்று பெயர் சூட்டப் பட்டிருந்தாலும், ராஜிவ்காந்தி, சஞ்சய்காந்தி என்றே அழைத்து புளகாங்கித மடைந்தனர். ராஜிவை கரம்பிடித்த காரணத்தால், சோனியா, சோனியாகாந்தி ஆனார்.

நியாயமாக சோனியா ராஜிவ் என்றல்லவா அழைக்கவேண்டும். அதோடு விட்டனரா? ராஜிவ் – சோனியா தம்பதிக்கு பிறந்த பிள்ளைகளையும் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி என்றே அழைத்து, ஆனந்தக்கூத்தாடி கொண்டிருக்கின்றனர். யாரும் தட்டிக்கேட்க மாட்டார்கள் என்றால், ராபர்ட்வதேராவை கூட, வதேராகாந்தி என்றோ, ராபர்ட்காந்தி என்றோ அழைத்தாலும், ஆச்சரியப்படுவதற்கில்லை. காந்திபெயரை, இப்படி இந்திரா பிரியதர்ஷினியின் வழித்தோன்றல்கள், "காபிரைட்' எடுத்து, சொந்தம்கொண்டாடிக் கொண்டிருக்க, மோடியை, படேலுடன் ஒப்பிட்டால் மட்டும், காங்கிரஸ்காரர்களுக்குப் பொத்துக் கொண்டு வருகிறதோ…!

நன்றி ; வி.சோமநாதன், நெல்லை

Leave a Reply