மதத்தின் அடிப்படையில் உதவித்தொகை பிரிவினையை உண்டாக்கும் திருச்சிமாவட்ட பாஜக.,வின் இளைஞர் அணிசார்பில் ஏழை இந்து மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்ககோரி திருச்சி அண்ணாசிலை அருகே பொதுக்கூட்டம் நடந்தது.

கூட்டத்தில் மாநிலதலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கிபேசியதாவது:–

அனைத்து ஏழை இந்து மாணவர்களுக்கும் கல்வி உதவித் தொகை வழங்ககோரி பாஜக. போராடிவருகிறது. மதத்தின் அடிப்படையில் கல்வி உதவித்தொகை வழங்ககூடாது என சட்டமேதை அம்பேத்கார் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

அதனையும் மீறி மத்திய அரசு மதத்தின் அடிப்படையில் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கிவருகிறது. மதத்தின் அடிப்படையில் உதவித்தொகை வழங்கினால் பிரிவினையை உண்டாக்கும்.

அடுத்த ஆண்டு அனைத்து ஏழை இந்துமாணவர்களுக்கும் உதவித்தொகை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையுள்ளது. அதற்குகாரணம், வருகிற பாராளுமன்றதேர்தலில் பாஜக. அமோக வெற்றிபெற்று இந்த திட்டத்தை நிறைவேற்றும் என்று அவர் பேசினார்.

பொதுக்கூட்டத்தில் தேசிய பொதுசெயலாளர் முரளிதர் ராவ் சிறப்புரையாற்றினார். முன்னதாக தேசிய பொதுச்செயலாளர் முரளிதர்ராவ் திருச்சியில் நிருபர்களிடம் கூறியதாவது:–

மதசார்பற்ற நாடு, மதச்சார்பற்ற அரசு என கூறும் மத்தியில் உள்ள காங்கிரஸ் அரசு வாக்குவங்கி அரசியல் நடத்துகிறது. சிறுபான்மையினருக்கான கல்விசலுகைகள் மற்றும் உதவிதொகையை பெரும்பான்மை மாணவர்களுக்கும் வழங்கவேண்டும் என கோரி பாஜக. போராடிவருகிறது.

உள்நாட்டு பாதுகாப்பிலும், நாட்டின் எல்லைப்பாதுகாப்பிலும் காங்கிரஸ் அரசு தோல்வி கண்டுள்ளது. விலைவாசி உயர்வுக்கும், பொருளாதார சீர்குலைவுக்கும் மன்மோகன் சிங் அரசுதான் காரணம் ஆகும். காங்கிரசை எதிர்க்கும் கட்சிகளுடன்சேர்ந்து பாஜக செயல்படும்.

சேலத்தில் பாஜக மாநில நிர்வாகி ஆடிட்டர் ரமேஷ் கொலை செய்யப்பட்டுள்ளார். இதில் தீவிரவாதிகளுக்கு தொடர்பிருப்பதாக கூறப்படுகிறது. இந்தவழக்கில் தமிழக அரசு விரைவில் குற்றவாளிகளை கைதுசெய்து நீதிமன்றத்தில் நிறுத்தும் என்று நம்புகிறோம்.

கோவையில் வருகிற செப்டம்பர்மாதம் இறுதியில் புதியபாரதத்தின் இளைஞர் முழக்கம் என்ற மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கலந்துகொள்கிறார். தென்மாநிலங்களில் பாஜக. எந்த கட்சிகளுடன் கூட்டணிவைக்கும் என இப்போது சொல்லமுடியாது. தேர்தல்தேதி அறிவிக்கப்பட்ட பின்னர்தான் இதுபற்றி சிந்திக்கப்படும்.என்று அவர் கூறினார்.

Leave a Reply