ஏழை -எளிய இந்து மாணவர்கள் அனைவருக்கும் கல்வி உதவித் தொகை வழங்க வலியுறுத்தி விருதுநகரில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய பா.ஜ.க. வின் மாநில பொதுச் செயலாளர் எஸ். மோகன்ராஜூலு மக்களவைத் தேர்தலில் மோடியை முன்னிறுத்துவோம் என தெரிவித்தார்.

விருதுநகர் மாவட்ட பா.ஜ.க. சார்பில் ஏழை இந்து மாணவர்களுக்கும் கல்வி உதவித் தொகை வழங்க வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டமும், பொதுக் கூட்டமும் தேசபந்து மைதானத்தில் புதன்கிழமை இரவு நடைபெற்றது.  இதில், மாநில அமைப்புச் செயலாளர் எஸ். மோகன்ராஜூலு கலந்து கொண்டு பேசும் போது, கடந்த 2007-ல் பள்ளிகளில் படித்து வரும் ஏழை முஸ்லிம் மற்றும் கிறிஸ்துவ மாணவ, மாணவிகளுக்கு மட்டும் பராமரிப்பு மற்றும் கல்வி உதவித் தொகையை மத்திய காங்கிரஸ் அரசு வழங்க உத்தரவிட்டது. இதில், ஏழை இந்து மாணவ, மாணவிகள் மட்டும் புறக்கணிக்கப்பட்டனர். எனவே, கடந்த 2009-ம் ஆண்டு முதல் இந்த ஆண்டு வரையில் இந்து மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்க வலியுறுத்தி நாங்கள் போராடி வருகிறோம். மத்தியில் பா.ஜ.க அரசு அமையும் 2014ம் ஆண்டு வரையில் போராடுவோம்.

குஜராத் முதல்வர் நரேந்திரமோடி, மத்தியில் சிறந்த ஆட்சியை வழங்குவதற்காக பா.ஜ.க. சார்பில் முன்னிறுத்தப்பட இருக்கிறார். அவருக்கு உங்கள் ஆதரவை மக்களவை தேர்தலில் வழங்க வேண்டும். மேலும், இதையே வலியுறுத்தி திருச்சியில் வருகிற செப். 26ஆம் தேதி இளைய தாமரை மாநாட்டில் நரேந்திரமோடி கலந்து கொள்ள இருக்கிறார். அதையடுத்து, மீனவர் நலன் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி குறிப்பிட்ட நாளில் மாநாடு நடத்தப்பட இருக்கிறது என்று அவர் தெரிவித்தார்.

பின்னர் ஏழை இந்து மாணவர்கள் அனைவருக்கும் கல்வி உதவித் தொகை உடனே வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags:

Leave a Reply