தெலங்கானா தனி மாநிலம் அமைவதற்கான மசோதாவை மேலும் கால தாமதம் செய்யாமல் நடப்புக் கூட்டத்தொடரிலேயே கொண்டுவர வேண்டும் என ஐ.மு.,கூட்டணி அரசை மக்களவை எதிர்க் கட்சித் தலைவர் சுஷ்மாஸ்வராஜ் வலியுறுத்தியுள்ளார்.

தெலங்கானா அமைவதற்கான அறிவிப்பின் மூலம் தெலங்கானா ஆதரவுதலைவர்களை சமாதானப்படுத்த காங்கிரஸ்கட்சி முயல்கிறது. மாறாக காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, தனது செயலற்றதன்மை மூலம் ஒருங்கிணைந்த ஆந்திர ஆதரவு தலைவர்களின் ஆதரவை தக்கவைத்து கொள்ள முயல்கிறது.

காங்கிரஸ் மற்றும் மத்திய அரசின் வெவ்வேறானசெயல்பாடு மக்களை ஏமாற்றும் நாடகம். இந்த இரட்டைநிலைப்பாடு தெலங்கானா ஆதரவாளர்களிடம் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம் அமைவதை பாஜக ஆதரிக்கிறது. இந்த நிலைப்பாட்டில் எந்த சூழ் நிலையிலும் மாற்றம் இல்லை. நாடாளுமன்றத்தில் இதுதொடர்பான மசோதா கொண்டுவரப்பட்டால் அதனை முழுமனதுடன் ஆதரிப்போம்.

நடப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரை செப்டம்பர் 5-ம் தேதி வரை நீட்டிக்க அரசுவிரும்புகிறது. முன்னதாக பட்டியலில் இடம்பெறாத மசோதாக்களையும் கொண்டுவரும் திட்டமும் அரசுக்கு உள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் நடப்புக் கூட்டத்தொடரிலேயே தெலங்கானா மாநிலம் அமைவதற்கான மசோதாவை அரசு கொண்டு வரவேண்டும் என்பதே எங்களது கருத்து.

தெலங்கானாமாநிலம் அமைவது வேண்டுமென்றே கால தாமதம் செய்யப் படுகிறதோ என்ற சந்தேகமும் உள்ளது. இதற்கு காங்கிரஸ்கட்சியும், காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசும் துணை போகக்கூடாது என்பதே பா.ஜ.க.,வின் கோரிக்கை.

தெலங்கானா அமைந்துவிட்டால் ஆந்திரத்தில் படிப்படியாக அமைதி திரும்பிவிடும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார் சுஷ்மா ஸ்வராஜ்.

Leave a Reply