அயோத்தியில், விஎச்பி., தலைவர்கள் கைது அயோத்தியில், தடையைமீறி, யாத்திரை செல்ல முயன்ற, விஸ்வ இந்துபரிஷத் அமைப்பான, விஎச்பி., தலைவர்கள், பிரவீண் தொகாடியா, அசோக்சிங்கால் ஆகியோர், உ.பி., போலீசாரால், நேற்று கைதுசெய்யப்பட்டனர். இவர்களுடன், 1,000க்கும் மேற்பட்ட தொண்டர்களும் கைதுசெய்யப்பட்டனர். இதனால், உ.பி.,யில் பதற்றம் நிலவி வருகிறது .

உ.பி., மாநிலம், அயோத்தியில், சர்ச்சைக் குரிய இடத்தில், ராமர்கோவில் கட்ட வலியுறுத்தி, “கோசிபரிக்கிரமா’ என்ற பெயரில், ஆறு மாவட்டங்களில் யாத்திரை நடத்த, விஎச்பி., அமைப்பு, திட்டமிட்டிருந்தது.இந்த யாத்திரை, நேற்று துவங்குவதாக இருந்தது. யாத்திரையால் கலவரம் ஏற்படலாம் என்பதால், முதல்வர் அகிலேஷ்யாதவ் தலைமையிலான, சமாஜ்வாதி அரசு, இதற்கு தடைவிதித்தது. “தடையைமீறி, திட்டமிட்ட படி யாத்திரை நடத்தப்படும்’ என்று விஎச்பி., அமைப்பு கூறியிருந்தது. இதையடுத்து, உ.பி., அரசு, முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டது.அயோத்தி உட்பட, ஆறு மாவட்டங்களில், தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது. போலீசார் குவிக்கப்பட்டனர். பக்கத்து மாநிலங்களிலிருந்தும், போலீசார் வரவழைக்கப் பட்டனர். முன் எச்சரிக்கை நடவடிக்கையாக, நேற்றுமுன்தினம் இரவே, வி.எச்.பி., தொண்டர்கள் கைதுசெய்யப்பட்டனர். சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு, வாகனங்கள் சோதனையிடப்பட்டன.

திட்டமிட்டபடி, யாத்திரையை தொடங்குவதற்கான நடவடிக்கையை, நேற்று, விஎச்பி., அமைப்பினர் மேற்கொண்டனர். விஎச்பி., அமைப்பின் மூத்த தலைவர்களில் ஒருவரான, நித்ய கோபால்தாஸ், அயோத்தியில்,யாத்திரையை துவக்குவதற்காக வந்தபோது, தொண்டர்களுடன் கைது செய்யப்பட்டார். இவரைத்தொடர்ந்து, வி.எச்.பி., அமைப்பின் மூத்த தலைவர், பிரவீண்தொகாடியாவும், அயோத்தியில் கைதுசெய்யப்பட்டார். அவர் கூறுகையில், “”இது, அரசியல்யாத்திரை அல்ல; மதரீதியிலான யாத்திரை. உபி., அரசு, இதை எதற்கு தடுத்துநிறுத்துகிறது? யாத்திரைக்கு தடைவிதிக்கப்பட்டதை கண்டித்து, நாளை (இன்று), நாடுமுழுவதும் போராட்டம் நடத்தப்படும்,” என்றார்.

விஎச்பி., அமைப்பின் தலைவர், அசோக்சிங்கால், யாத்திரையில் பங்கேற்பதற்காக, லக்னோ விமான நிலையத்தில் வந்திறங்கியபோது, அங்கேயே தடுத்து நிறுத்தப்பட்டு, கைதுசெய்யப்பட்டார்.

அவர் கூறியதாவது:எதற்காக, என்னை கைதுசெய்கின்றனர்; என்ன குற்றம் செய்தேன்? என் கேள்விக்கு, உ.பி., மாநில அரசு, பதில் அளிக்கவேண்டும். உ.பி.,யில், முகலாயர் ஆட்சியா நடக்கிறது? வழிபாட்டுக்காகவரும், துறவிகளை எதற்காக கைதுசெய்கிறீர்கள்? அயோத்தி செல்வதற்காகவே, இங்குவந்துள்ளேன். டில்லிக்கு திரும்பபோக முடியாது.இவ்வாறு, அசோக் சிங்கால் கூறினார்.

அசோக் சிங்கால் கைதுசெய்யப்பட்ட தகவல் அறிந்து, விமான நிலையத்துக்கு வெளியில், ஏராளமான விஎச்பி., தொண்டர்கள் குவிந்தனர். அவர்கள் அனைவரும் கைதுசெய்யப்பட்டனர்.

Leave a Reply