திண்டுக்கல்லில் பாஜ பிரமுகர் வீட்டில் நள்ளிரவில் பெட்ரோல்குண்டு வீசப்பட்டது. இதில் அவரது மனைவி காயமடைந்தார். இதுதொடர்பாக போலீசார் 2 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

தமிழகத்தில் பாஜ மற்றும் இந்து அமைப்புகளின் நிர்வாகிகள்மீது அடிக்கடி தாக்குதல் நடத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், திண்டுக்கல்லில் பாஜ பிரமுகர் வீடுமீது நேற்று நள்ளிரவில் பெட்ரோல்குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திண்டுக்கல் செல்லி அம்மன் கோயில் 3வது தெருவை சேர்ந்தவர் பிரவீன் குமார் (28). இவர் 10வது வார்டு பாஜக கிளைத் தலைவராக உள்ளார். இப்பகுதியில் உள்ள மாடி வீட்டில் வசித்து வருகிறார். நேற்றிரவு 11.30 மணியளவில் பிரவீன் குமாரின் மனைவி சத்தியமீனாட்சி (24) வீட்டின் முன்புறம் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்குவந்த மர்ம நபர்கள் 2 பேர், பீடி பற்ற வைப்பதுபோல் தீக்குச்சியை கொளுத்தினர். திடீரென பெட்ரோல்குண்டை எடுத்து பற்றவைத்து வீடுமீது வீசினர். அது சுவரில் பட்டு வெடித்துசிதறியது. அப்போது சத்திய மீனாட்சியின் தலையில் தீ பட்டதில் முடி கருகியது. நிறை மாத கர்ப்பிணியான அவர், அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டார். சத்தம்கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

திண்டுக்கல் போலீஸ் டி.எஸ்.பி சுருளி ராஜா, மேற்குசரக இன்ஸ்பெக்டர் புகழேந்தி ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணைநடத்தினர். தடய அறிவியல் நிபுணர் மணி தலைமையில் குழுவினர் வெடிகுண்டு வெடித்த இடத்தில் கிடைத்தபொருட்களை சேகரித்தனர். இந்தசம்பவம் தொடர்பாக 2 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

விநாயகர் சதுர்த்தி பண்டிகை நெருங்கிவரும் நேரத்தில் பாஜ பிரமுகர் வீட்டின்மீது வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குற்றவாளிகள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என பாரதீய ஜனதா கட்சியினர் வலியுறுத்தி உள்ளனர்.

Leave a Reply