இந்தியா கலாசார ரீதியாக ஒரு இந்துநாடு என்றும், கோவாவில் இருக்கும் கத்தோலிக்க கிறிஸ்தவர்களும் கலாசார ரீதியாக இந்துக்களே என்றும் அம்மாநில முதல்வர் மனோகர்பாரிகர் தெரிவித்துள்ளார்.

தனியார் செய்திநிறுவனம் ஒன்றிற்கு மனோகர்பாரிகர் அளித்த பேட்டியில் கூறுகையில், கலாசார ரீதியாக இந்தியா ஒரு இந்துநாடு. கோவா மாநிலத்தில் வசிக்கும் கத்தோலிக்க கிறிஸ்தவர் ஒருவரின் செயல் பாடுகளுக்கும், பிரேசில் நாட்டிலுள்ள கத்தோலிக்கர் ஒருவரின் செயல்பாட்டிற்கும், மதம் தவிர வேறுஎவ்வித ஒற்றுமையும் கிடையாது. அதேவேளையில் அவரது செயல்பாட்டிற்கும், இங்குள்ள இந்து ஒருவரின் செயல்பாட்டிற்கும் நிறைய ஒற்றுமைகள் இருக்கின்றன.

நான் ஒரு முழுமையான இந்து. அதேவேளையில் அது என்னுடைய தனிப்பட்ட நம்பிக்கை அவ்வளவே. அது எந்தவகையிலும் எனது அரசாங்கத்தில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை. சில மீடியாக்கள் புரிந்து கொள்வதைப் போன்ற இந்துதேசியவாதி நான் அல்ல. இந்து தேசியவாதி என்றால் கையில் வாளை எடுத்துக் கொண்டு அடுத்த மதத்தினரை கொல்வது என்று அர்த்தமல்ல. அவ்வாறுதான் சில மீடியாக்கள் இந்த வார்த்தையை புரிந்துகொள்கின்றன. என்னை பொறுத்தவரையில், அவ்வாறு மற்றவரைத் தாக்குவது இந்துக்களின் தன்மையல்ல. இந்துக்கள் யாரையும் தாக்குவதுகிடையாது. முடிந்தவரை தங்களை தற்காத்துக் கொள்ளவே இந்துக்கள் முயல்வார்கள். இதுவே நமதுவரலாறு. என்று மனோகர் பாரிகர் தெரிவித்தார்.

Leave a Reply