மக்களவைத் தேர்தலை சந்திப்பதற்கான ஒருங்கிணைப்பு உத்திகுறித்து விவாதிப்பதற்காக பா.ஜ.க, ஆர்எஸ்எஸ்., விஎச்பி. மற்றும் ஹிந்து அமைப்புகளின் ஆலோசனைக்கூட்டம் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அடுத்த மக்களவைத்தேர்தலில் பிரதமர் வேட்பாளராக யாரை முன்னிறுத்தலாம் என்பது குறித்த 2 நாள் ஆலோசனைக்கூட்டம் தொடங்கியுள்ளது.

தில்லியில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் மூத்த தலைவர்களான அத்வானி, அருண்ஜேட்லி, சுஷ்மாஸ்வராஜ், முரளிமனோகர் ஜோஷி, ராஜ்நாத்சிங் உள்ளிட்ட கட்சியின் ஆட்சிமன்றக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். வி.எச்.பி. சார்பில் பிரவீண் தொகாடியாவும், ஆர்.எஸ்.எஸ். சார்பில் அதன் பொதுச் செயலாளர் சுரேஷ் பையாஜி ஜோஷி, கூடுதல் பொதுச் செயலாளர்கள் சுரேஷ் சோனி, தத்தாத்ரேயா ஹோஸ்போலே ஆகியோரும் கலந்து கொண்டனர். மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சௌஹானும், கோவா முதல்வர் மனோகர் பாரிக்கரும் திங்கள்கிழமை கலந்துகொள்ள உள்ளனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில், மக்களவைதேர்தலுக்காக வட்டார நிலையில் இருந்து எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. சங்பரிவார் அமைப்புகளுடன் சிறப்பான ஒருங்கிணைப்புக்கான உத்தியை வகுப்பது குறித்தும் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது.

Leave a Reply