ஊழலற்ற, லஞ்சமற்ற இந்தியாவை உருவாக்க விநாயகர்சதுர்த்தி நாளன்று பொது மக்கள் சபதமேற்க வேண்டும் என்று பாஜக தமிழகத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஆம்பூருக்கு திங்கள்கிழமை காலைவந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது : சுதந்திரப் போராட்டத்துக்கான கருவியாக விநாயகர்சதுர்த்தி விழாவை பாலகங்காதர திலகர் பயன்படுத்தினார்.

தற்போது அதேநாளில் ஊழலற்ற, லஞ்சமற்ற இந்தியாவை உருவாக்கவும், தொழில்துறை, விவசாயத் துறையில் நாடு வளம்பெறவும் பொதுமக்கள் சபதமேற்கவேண்டும்.

காங்கிரஸ் ஆட்சியில் நிலக்கரி, ரயில்வே ஊழல் என்று பலஊழல்கள் வெளிவந்து கொண்டேயிருக்கின்றன. அவர்களுடைய பதவிக்காலம் முடிய இன்னும் சிலமாதங்களே உள்ளன. அதுவரையில் பல ஊழல்கள் குறித்த தகவல் வெளிவந்து கொண்டேயிருக்கும்.

சேலம் ஆடிட்டர் ரமேஷ், வேலூர் இந்துமுன்னணி வெள்ளையப்பன் ஆகியோரின் படுகொலை சம்பந்தமாக இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப் படவில்லை.

வன்முறைக்கு எதிராக ஒருவாரம் போராட்டம் நடத்தினோம். தற்போது திருச்சியில் செப்டம்பர் 26ம் தேதி நடைபெறும் இளந் தாமரை மாநாடு தொடர்பானபணியில் ஈடுபட்டுள்ளோம். அந்த மாநாடும் வன்முறைக்கு எதிரானமாநாடாக வெற்றிகரமாக நடத்தப்படும்.

துணிவுமிக்க, துடிப்புமிக்கவர் வெற்றிபெற்று பிரதமராக பதவியேற்பார். அப்போது தமிழ்சமுதாயம் உலக அளவில் பேசப்படும் என்றார்.

Leave a Reply