விவசாயத் துறைக்கு எளிதில் கடன்கிடைக்காததே, விவசாயிகள் தற்கொலைகள் அதிகம் நிகழக்காரணம், 30 சதவீதத்திற்கும் குறைவான விவசாயிகளால் மட்டுமே, வங்கிக்கடன் பெறமுடிகிறது என்று குஜராத் முதல்வர் நரேந்திரமோடி கூறினார்.

குஜராத் மாநிலம், காந்திநகரில் நடைபெற்ற விவசாயத்துறை தொடர்பான மாநாட்டில், மோடி பேசியதாவது:விவசாயத் துறைக்கு, எளிதில் வங்கிக்கடன் கிடைப்பதில்லை. வங்கிகளின் ஏராளமான சட்ட நடைமுறைகளால், விவசாயிகள் கடன்பெற முடியாமல் அவதிப்படுகின்றனர். அதனால், கடன்சுமையால் தவிக்கும் விவசாயிகள், தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

கடந்த, 20 ஆண்டுகளில், 2.70 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.நபார்டு போன்ற வங்கித்துறை பற்றி, மத்திய அரசு எளிதாக சொல்லிவிடுகிறது. ஆனால், இன்றும்கூட, 30 சதவீதத்திற்கும் குறைவான விவசாயிகளால் மட்டுமே, வங்கிக்கடன் பெறமுடிகிறது. மற்றவர்கள் எல்லாம், அதிகவட்டி வசூலிக்கும் தனி நபர்களிடம் இருந்தே, கடன்வாங்கும் நிலைமைக்கு தள்ளப்படுகின்றனர்.

ஒவ்வொரு நாளும், 2,500 விவசாயிகள், விவசாயத்தைவிட்டு வெளியேறுகின்றனர். தங்களுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளதாக, அவர்கள் உணர்வதால், இவ்வாறு செய்கின்றனர். அதனால், மற்றநாடுகளை ஒப்பிடும்போது, நம் நாட்டில், விவசாய விளைபொருட்கள் உற்பத்தி குறைந்துவருகிறது.பெப்சி, கோககோலா, பேண்டா போன்ற குளிர்பானங்களில், 5 சதவீதம், இயற்கையான பழரசம் இருப்பது உறுதிசெய்யப்பட வேண்டும் என, இரண்டு ஆண்டுகளுக்கு முன், பிரதமர் மன்மோகன்சிங்கிடம் நான் தெரிவித்தேன். இதனால், விவசாயிகள் பலன் அடைவர் என்றும் கூறினேன். ஆனால், பன்னாட்டு நிறுவனங்களின் நிர்பந்தத்தால், அந்தயோசனையை, மத்திய அரசு நிராகரித்து விட்டது.இவ்வாறு முதல்வர் மோடி கூறினார்.

Leave a Reply