பா.ஜ.க.,வின் இளந்தாமரை மாநாட்டுக்குமுன்பாக திருச்சியில் கலவரத்தை தூண்டும்வகையில் சுவரொட்டிகளை ஒட்டிவரும் அமைப்புகள் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் கேட்டுக்கொண்டுள்ளார்.

திருச்சியில் செய்தியாளர்களிடம் மேலும் அவர் தெரிவித்ததாவது:

திருச்சி பொன்மலை ஜிகார்னரில் வரும் 26ம் தேதி நடைபெறவுள்ள பா.ஜ.க.,வின் இளந் தாமரை மாநாட்டுக்கு ரயில்வேதுறையின் அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது. எதிர்பார்த்ததை விடவும் அதிகளவில் இளைஞர்களும், மாணவர்களும் இந்தமாநாட்டில் பங்கேற்க உள்ளனர்.

முன்னதாக, வரும் 22ஆம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் இளைஞர்கள், மாணவர்கள் பங்கேற்கும்கூட்டங்கள் நடத்தப்படவுள்ளன. மாநாட்டுக்கு வருவோருக்கான நுழைவுச்சீட்டு மாநகருக்குள் நுழையும் அனைத்து எல்லைகளிலும் வழங்கத் திட்டமிடப் பட்டுள்ளது.

ஆன்லைனில் பதிவு செய்தவர்களுக்கும், மாநகரை சேர்ந்தவர்களுக்கும் மாநாட்டுத்திடலில் நுழைவுச்சீட்டு வழங்கப்படும். ஏற்கெனவே எங்களுடன் தோழமையுடன் இருக்கும் இந்திய ஜனநாயகக் கட்சியினர் மாநாட்டில் பங்கேற்பார்கள்.

இளந் தாமரை மாநாட்டுக்கான 6 பாடல்களைக்கொண்ட இசைத்தட்டு வெளியீடு சென்னையில் வெள்ளிக் கிழமை நடைபெற்றுள்ளது. திருச்சியில் 5 புதியபாடல்களைக் கொண்ட வேறொரு இசைத்தட்டு சனிக்கிழமைவெளியிடப்படும்.

பா.ஜ.க மாநாட்டை விமர்சித்தும், மோடியைவிமர்சித்தும் மாநகரில் மோசமான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. காவல் துறையினர் இதை எப்படி அனுமதிக்கிறார்கள் என தெரியவில்லை.

கலவரத்தைத்தூண்டும் வகையில் நடைபெறும் இந்தமுயற்சிகளை காவல்துறையினர் தடுக்கவேண்டும்.கலவரத்துக்கான அறிகுறிகள் தெரியும்போதே நடவடிக்கை எடுக்கவேண்டும். மாநகரக் காவல் ஆணையரை சனிக்கிழமை காலை கட்சி நிர்வாகிகள் சந்தித்து புகார்அளிப்பார்கள் என்றார் பொன். ராதாகிருஷ்ணன்.

Leave a Reply