நம் தேசத்தை கட்டி எழுப்பியவர்களை எண்ணி தலை வணங்குகிறேன் விஸ்வகர்மா ஜெயந்தியானது 17-செப்-2013 அன்று நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. அன்றைய தினத்தின் சிறப்பையும், அந்நாளில் யார் யாரையெல்லாம் நினைத்து பார்க்க வேண்டும் என்கிற பல அற்புத விசயங்களை நமது மோடி அவர்கள் நம்மிடமெல்லாம் பகிர்ந்து கொண்டுள்ளார். இதோ உங்களுக்காக.

எனதருமைத் நண்பர்களே,

விஸ்வகர்மா ஜெயந்தியான இந்த இனிய நாளில் எனது இதயங்கனிந்த வாழ்த்துக்களை உங்கள் அனைவருக்கும் உரித்தாக்குகிறேன். இந்நன்னாளில் நமது இன்றைய நிலைக்கு காரணமான தச்சர்கள்(Carpenters), கொல்லர்கள் (Masons), குழாய்ப் பணியாளர்கள் (Plumbers), கைவினைக் கலைஞர்கள் (Carftspersons), தொழில்நுட்பப் பணியாளர்கள் (Technicians), கடைசல்காரர்கள் (Turners) ஆகிய நமது சகோதர சகோதரிகளின் அயராத உழைப்பையும் அவர்களின் பங்களிப்பையும் எண்ணி தலைவணங்க வேண்டும்.

நீங்கள் எதிர்கொண்டு வெற்றிகொண்ட நேர்முகத் தேர்வை எண்ணிப் பார்த்தீர்களேயானால் அந்த வெற்றிக்கு முக்கியக் காரணமாக அல்லது அந்த தேர்வாளரை கவர்ந்ததற்கு ஏதோ ஒரு விதத்தில் நீங்கள் பளீச்சென்று அணிந்திருந்த தங்கள் உடை காரணமாக இருந்திருக்கலாம். அதற்குக் காரணமாக அமைந்த துணி துவைப்பாளரையோ அல்லது சலவைகாரரையோ எண்ணிப் பார்த்ததுண்டா?

நாம் சுவையான உணவை ரசித்து ருசிக்கும் போது அதைச் செய்த சமையல் செய்தவரை பாராட்டுகின்ற அதே வேளையில், இந்தியாவின் கடைக்கோடி கிராமங்களில் காட்டிலும் மேட்டிலும், வெயிலிலும் மழையிலும், வியர்வை சிந்தி உழைத்து அந்த உணவுக்கான மூலப் பொருட்களை உருவாக்கிய விவசாயிகளையும் நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். இந்த இனிய நாளில் சமூகத்திற்கான அவர்களின் பங்களிப்பை எண்ணிப் பார்ப்பதோடு நில்லாமல் அவர்களுக்கு நமது நன்றியையும் தெரிவிக்க வேண்டும்.

நம்மை பொறுத்த வரை 'செய்யும் தொழிலே தெய்வம்'. செய்யும் தொழிலை பக்தியுடனும், நேர்மையாகவும், நேர்த்தியாகவும் , அனுபவித்தும் செய்வதையே நாம் அவ்வாறு கூறுகிறோம். அப்படி செய்யும் தொழிலை தெய்வமாக மதித்து அதன்படி யாரேனும் இப்பூவுலகில் வாழ்ந்தார்கள் அல்லாது வாழ்கிறார்களேயானால் அது இந்த விஸ்வகர்மாக்களை அன்றி வேறொருவர் இல்லை.

வரலாற்று காலம் தொட்டு இன்றுவரை விஸ்வகர்மாவை வழிபடுகிற சமூகத்தாரே , நமது சமூகத்திற்கான அடித் தளத்தை அமைத்தார்கள் என்பது தெளிவாகப் புலப்படும். கடந்த காலங்களில் அவர்களின் அயராத உழைப்பு மற்றும் முயற்சியின் காரணமாகவே கடைக்கோடி கிராமங்களும் தன்னிறைவு பெற்று திகழ்ந்தன. அதைப் போலவே இன்றைய கால கட்டத்தில் நாட்டின் பொருளாதாரத்தை நடுத்தர மற்று சிறிய வகைத் தொழில் செய்யும் நிறுவனங்களும் அதன் தூண்களாக இருக்கின்ற பல லட்சத் தொழிலாளர்களும் தான் பலப்படுத்துகின்றனர்.

இவகையான சிறிய மற்றும் நடுத்தர வகை நிறுவனங்களின் வெற்றிக்குக் இரவு பகல் பாராது உழைக்கின்ற எண்ணிலடங்கா உழைக்கும் வர்க்கத்தினர் தான் காரணம் என்று சொன்னால் அது மிகையல்ல.

ஒரு தேசமாக முன்னேற்றப் பாதையை நோக்கி நகர வேண்டும் என்று நாம் எண்ணினால், திறமை மற்றும் நுணுக்கங்களின் முக்கியத்துவத்தை நாம் உணர்ந்தே ஆக வேண்டும். அது மட்டுமின்றி நமது இளங்குடிமக்கள் நுட்பங்களை கற்றுக்கொள்வதற்கு வழி செய்வதோடு அவர்களை ஊக்குவிக்கும் முயற்சியில் உடனே ஈடு பட்டாக வேண்டும்

திறன் மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் கொடுப்பதில் இருந்து இதற்கான வேலையை நாம் தொடங்க வேண்டும். தொழில் மற்றும் பொறியியல் கல்லூரிகளுக்கான உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் தொடங்கி , பாடக் கோப்புகளை நவீனப் படுத்துவது மட்டுமில்லாமல் தொழிற் பட்டயப் படிப்புகளுக்கு முக்கியத்துவம் மற்றும் அதற்கான அங்கீகாரம் கொடுத்து நமது இளைய சமூகத்தின் வாழ்வை மாற்றி அமைக்க முடியும்.

அதே நேரத்தில் திறன் சார்ந்த வேலையானது (Skill Based) அலுவலகம் சார்ந்த (White-Collar Job) பணிகளில் இருந்து எவ்விதத்திலும் குறைந்தது இல்லை என்பதை உறுதி செய்வதோடு, திறன் சார்ந்த வேலைகளுக்கு முக்கியத் குறையாது பேணிப் பாதுகாக்க வேண்டும்.

கடந்த சில ஆண்டுகளாக எமது குஜராத் அரசு, திறன் மேம்பாட்டிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருவதை இந்த தருணத்திலே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இதற்காக மத்திய அரசிடம் இருந்து பல விருதுகளையும் எமது அரசு பெற்றிருக்கிறது.

நம் மொத்த மக்கள் தொகையில் 65% பேர் 35 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் என்பது நமக்குத் தெரிந்ததே. இதை வெறும் புள்ளிக்கணக்காகவே வைத்திருக்கப் போகிறோமா, இல்லை இந்த நல்லதொரு வாய்ப்பைப் பயன்படுத்தி நமது இள இரத்தங்களுக்கு தேவையான திறன் மேம்பாட்டில் கவனம் செலுத்தி அவர்களை தங்கள் சொந்தக் காலில் நிற்பதற்கு வழிவகை செய்யப் போகிறோமா? இவையனைத்தும் நம் கையில் தான் இருக்கிறது.

இதன் காரணமாகவே, செப்-25 அன்று திறன் மேம்பாடு சம்பந்தமான பல விசயங்களை விவாதிக்கும் பொருட்டு தேசிய அளவிலான மாநாடு ஒன்றை குஜராத்தில் ஏற்பாடு செய்திருக்கிறோம். இந்த மாநாடானது, பிறருக்கு முன்னுதாரணமாக வாழ்ந்து காட்டிய பண்டிட் தீன் தயாள் உபாத்யாய் அவர்களின் பிறந்த நாளை சிறப்பிக்கும் பொருட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 'நமது குடிமக்களுக்கு அர்த்தமுள்ள வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும் வரை நாம் நம் வாழ்வில் ஓயக்கூடாது' (Till we have not created meaningful opportunities for our citizens we cannot rest) என்கிற சித்தாந்தத்தின்படி தனது இறுதி வரை வாழ்ந்து காட்டியவர் அவர்.

விஸ்வகர்மா! வடிவமைப்பு, கைவினை மற்றும் கட்டிடக்கலைகளின் கடவுள் அவர். படைப்பிற்காக மட்டும் அவரை வணங்குவது இல்லை, அழகியலுக்காகவும், எந்திரவியலுக்காகவும் கூட. சொர்க்கம் மட்டுமின்றி, புராதான நகரங்களான துவாரகை மற்றும் அஸ்தினாபூரும் கூட இறைவன் விஸ்வகர்மாவின் கைவண்ணத்தால் உருவாக்கப்பட்ட அதிசயங்கள் என்று சொன்னால் அது மிகையல்ல.

இந்த இனிய நாளில் புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் வடிவமைப்புக்கான முக்கியத்துவத்தை நாம் யோசித்தாக வேண்டும்.இது ஒரு 'இந்தியத் தயாரிப்பு' என்று உலகமே போற்றுகிற அளவில் நம் நாட்டுத் தயாரிப்புகளை நம்மால் மாற்ற முடியாதா என்ன? முடியும். எப்படி? புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் வடிவமைப்பை நமது கல்வியிலும், தொழில் நிறுவனங்களிலும் உட்புகுத்தி அதற்கான முக்கியத்துவத்தை அளித்தோமேயானால் எதுவும் சாத்தியமே.

அனைவரும் எல்லா வகையிலும் தழைத்தோங்க, பாதுகாப்பான மற்றும் தரமான

வாழ்க்கைத்தரம் அமைவதற்கும் எங்களால் முடிந்த அனைத்து வகையான முயற்சிகளையும் எடுப்போம் என்று விஸ்வகர்மா குடும்பங்களுக்கு இந்த இனிய தருணத்திலே உறுதியளிக்கிறேன்.

 

நன்றி ; நரேந்திர மோடி
தமிழில்; தர்மராஜ் முரளிகிருஷ்ணன்

Leave a Reply