தேர்தல் பிரசாரப்பொதுக் கூட்டங்களை தவிர்த்து, பிரம்மாண்ட மாநாடுகளாக தமிழக பா.ஜ.க நடத்தும் 2வது நிகழ்ச்சியாக, “இளந்தாமரை மாநாடு’ திருச்சியில் வியாழக் கிழமை (செப். 26) நடைபெறவுள்ளது.

விரைவில் எதிர்பார்க்கப்படும் நாடாளுமன்ற தேர்தலையொட்டி, தேசியளவில் பிரதான எதிர்க் கட்சியான பா.ஜ.க, தனது பிரதமர்வேட்பாளராக குஜராத் முதல்வர் நரேந்திரமோடியை அறிவித்த பிறகு அவர் தமிழ்நாட்டுக்கு வரும் முதல் நிகழ்ச்சி இது.

பொன். ராதாகிருஷ்ணன், மாநிலத் தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு மதுரையில் “தாமரை சங்கமம்” என்ற பெயரில் ஒருமாநாட்டை நடத்தினார். அதில் பாஜக மூத்த தலைவர் அத்வானி பங்கேற்றார்.

அதன் தொடர்ச்சியாகவே இளைஞர்களை மையபடுத்தி நடத்தப்படும் இம் மாநாட்டுக்கு “இளந்தாமரை மாநாடு’ என பெயரிடப்பட்டுள்ளது. வியாழக்கிழமை பிற்பகலில் பொன்மலை ஜிகார்னர் ரயில்வே திடலில் நடைபெறும் இந்த மாநாட்டில் மோடியுடன், பா.ஜ.க.,வின் தேசியத்தலைவர் ராஜ்நாத்சிங்கும் பங்கேற்கிறார்.

இந்த மாநாட்டை பற்றி அண்மையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக.வின் மக்கள் சந்திப்பு பிரிவின் தலைவர் வெங்கய்யநாயுடு, தனக்கேயுரிய எதுகைமோனை பாணியில் “மலைக்கோட்டையில் இருந்து தில்லி செங்கோட்டைக்கு’ என முழக்கத்தை முன்வைத்து சென்றார்.

அதற்கேற்ப மாநாட்டு திடலில் மரப் பலகைகளால் தில்லிசெங்கோட்டை வடிவில் பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டிருக்கிறது.

இளைஞர்கள் – மாணவர்களை பெருமளவில் பங்கேற்க செய்வதே இதன் நோக்கம். இதற்காக திருச்சியிலேயே ஒருவீட்டை வாடகைக்கு எடுத்து, கடந்த ஒருமாதத்துக்கும் மேலாக முகாம் அலுவலகம் அமைக்கப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன.

இணைய தளம் மூலமும், நேரிலும் மாநாட்டுக்கான பங்கேற்பாளர்கள் பதிவு தொடங்கப்பட்டு இதுவரை இரண்டரை லட்சம்பேர் பதிவு செய்திருப்பதாக செய்தியாளர்களைச் சந்தித்த மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

மாநாட்டுத்திடலில் 80 ஆயிரம் நாற்காலிகள் போடப்படுவதாகவும், ஒரு கிமீ சுற்றளவில் 20,000 வாகனங்களை நிறுத்தும்வகையில் 7 இடங்களில் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

திராவிட இயக்கங்களுக்கு பலவகைகளிலும் திருப்பு முனையை ஏற்படுத்திய திருச்சி, முதன்முதலாக பாஜகவின் மாநில அளவிலான மாநாட்டை சந்திக்கிறது.

மோடிவருகைக்கு எதிரான முழக்கங்களும் பொதுமக்கள் மத்தியில் இந்தமாநாடு குறித்த செய்தியை பரவலாக சென்றுசேர்த்திருக்கிறது. தவிர, பரவலானவிளம்பர ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருக்கின்றன.

5 ஐ.ஜி.,க்கள் தலைமையில் ஏறத்தாழ 4,000 போலீஸார் பாதுகாப்புப்பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

Leave a Reply