திருச்சி பாஜக சார்பில் இளம்தாமரை மாநாடு நடைபெறுகிறது. மாநில தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெறும் இந்தமாநாட்டில் கட்சியின் அகில இந்திய தலைவர் ராஜநாத்சிங், பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொள்கிறார்கள்.

பிரதமர்வேட்பாளராக நரேந்திரமோடி அறிவிக்கப்பட்டிருப்பதை தொடர்ந்து இந்தமாநாடு மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘இசட்பிளஸ்’ அந்தஸ்தில் பாதுகாப்பு வளையத்திற்குள் இருக்கும் நரேந்திரமோடி பங்கேற்கும் இந்தமாநாட்டிற்கு திருச்சியில் வரலாறுகாணாத பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்தியபோலீசார் ரோந்துபணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதுதவிர காமிராக்கள் பொருத்தப்பட்ட ஆள்இல்லா விமானம் மூலம் ஏற்கனவே மாநாட்டு நிகழ்வுகளை கண்காணிக்க காவல்துறை முடிவுசெய்துள்ளது. தற்போது கூடுதலாக காமிரா பொருத்தப்பட்டுள்ள பலூன்களை பறக்கவிட்டு தீவிரமாக கண்காணிக்கவும் போலீசார் ஏற்பாடுசெய்துள்ளனர்.

மாநாட்டுபாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வுசெய்வதற்காக சிறப்பு புலனாய்வுபிரிவு ஐ.ஜி. கண்ணப்பன், மாநில உளவுப் பிரிவு ஐ.ஜி. அம்ரேஷ்பூஜாரி, போலீஸ் தொழில்நுட்பபிரிவு ஐஜி. சாரங்கன் ஆகியோர் திருச்சிக்கு வர உள்ளனர். அதேபோன்று நரேந்திரமோடிக்கு பாதுகாப்பு அளிக்கும் குஜராத் மாநில போலீஸ் துறையின் முதல்வர் பாதுகாப்புபிரிவு அதிகாரிகள் திருச்சிக்கு வந்து முகாமிட்டுள்ளனர்.

இந்தகுழுவினர் இன்று காலை விமான நிலையம், மற்றும் மோடி செல்லும் பயணபாதை, மாநாட்டு மைதானம், மேடை ஆகியவற்றை பார்வையிட்டு பாதுகாப்பு முன்னேற்பாடுகளை ஆய்வுசெய்தனர். விமான நிலையத்திலிருந்து மாநாடுமைதானம் வரை வழிநெடுகிலும் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அவற்றின் மீது துப்பாக்கி ஏந்தியபோலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.

Leave a Reply