மாட்டுதீவன ஊழல் லல்லு பிரசாத் யாதவ் குற்றவாளி என தீர்ப்பு  ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லல்லுபிரசாத் யாதவ் 1990ம் ஆண்டு பீகார் முதல்மந்திரியாக இருந்த போது அவர் மீது மாட்டுத் தீவன ஊழல் குற்றச்சாட்டு கூறப்பட்டது. அப்போது பீகாரின் ஒருபகுதியாக இருந்த தற்போது ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள சாய் பாசா மாவட்ட கருவூலத்தில் மாட்டுத் தீவனம் தொடர்பான போலிரசீதுகளை அளித்து ரூ.37.7 கோடி ஊழலில் ஈடுபட்டதாக அவர்மீது புகார் கூறப்பட்டது.

லல்லுபிரசாத் யாதவுடன், பீகார் முன்னாள் முதல்வர் ஜெகன்னாத் மிஸ்ரா, ஐக்கிய ஜனதாதள எம்.பி. ஜெகதீஷ்சர்மா உள்பட மொத்தம் 45 பேர்மீது குற்றம்சுமத்தப்பட்டது.

இதுதொடர்பாக 1996–ல் சிபிஐ. தனது விசாரணையை தொடங்கியது. இதையடுத்து 1997ல் லல்லு தனது முதல்– மந்திரிபதவியை ராஜினாமாசெய்தார். லல்லு மீதான மாட்டுத்தீவன ஊழல் வழக்கு ராஞ்சியில் உள்ள சிபிஐ. சிறப்பு நீதிமன்ற நீதிபதி பிரவாஸ் குமார் விசாரித்தார். இந்தவழக்கை விசாரிக்கும் நீதிபதியை மாற்றக்கோரி ஜார்க்கண்ட் ஐகோர்ட்டிலும், பின்னர் சுப்ரீம்கோர்ட்டிலும் லல்லுபிரசாத் கோரிக்கை விடுத்தார்.

இதுதொடர்பான மனுக்களை இரண்டு கோர்ட்டுகளும் தள்ளுபடிசெய்தது. இதையடுத்து சிபிஐ. தனிக்கோர்ட்டில் லல்லு தரப்பு வக்கீல் தனது வாதத்தை கடந்த 17–ந்தேதி முடித்துக் கொண்டார்.

இந்தவழக்கில் இன்று தீர்ப்பு கூறப்பட்டது. அப்போது லல்லுபிரசாத் யாதவ் மற்றும் 44 பேர் கோர்ட்டில் ஆஜரானார்கள். மாட்டு தீவன ஊழல் வழக்கில் லல்லு பிரசாத் யாதவ் மற்றும் 44 பேரும் குற்றவாளிகள் என நீதிபதி பிரவாஸ் குமார் தீர்ப்பு கூறினார். லல்லுபிரசாத் யாதவ், ஜெகநாத்மிஸ்ரா உள்பட 45 பேர் மீதான தண்டனைவிவரம் வருகிற 3–ந்தேதி (வியாழக்கிழமை) காலை 11 மணிக்கு அறிவிக்கப்படுகிறது.

லல்லு பிரசாத்யாதவுக்கு 7 ஆண்டுவரை சிறை தண்டனை விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply