நரேந்திர மோடி கலந்துகொண்ட பிஜேபி-யின் இளந்தாமரை மாநாட்டுக்காக திருச்சியில் திரண்ட கூட்டத்தைக்கண்டு, தமிழக அரசியல் கட்சிகள் சற்று மிரண்டுபோனது என்றுதான் சொல்ல வேண்டும்.

மாநாட்டுக்காக, காலை முதலே தமிழகம் முழுவதும் இருந்து இளைஞர்கள் கூட்டம் திருச் சியை நோக்கி படையெடுத்தது. நரேந்திரமோடியின் பெயரை 'நமோ' என்று மந்திரம் போல் உச்சரித்தது அந்தக் கூட்டம். பிஜேபி-யினர் மட்டுமல்லாது, தமிழகம் முழுவதும் இருந்து கட்சி சார்பற்றவர்களும் பல்லாயிரக்கணக்கானோர் 10 ரூபாய் கட்டணம் செலுத்தி மிகுந்த எதிர்பார்ப் போடு மாநாட்டுக்கு வந்திருந்தனர். திரும்பிய திசையெல்லாம் மோடி படங்கள் பளபளக்க… பி.ஜே.பி-யின் திருவிழாவைப்போல கடந்த 26-ம் தேதி காட்சியளித்தது மலைக்கோட்டை மாநகரம்.

வெடிகுண்டு மிரட்டல், மோடி உயிருக்கு ஆபத்து என உளவுத்துறை எச்சரிக்கை, முஸ்லிம் அமைப்புகள், திராவிடர் விடுதலைக்கழகம் உள்ளிட்ட அமைப்புகளின் எதிர்ப்புகள்… என பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், திருச்சியில் நடந்த மாநாட்டில் மோடி கலந்துகொண்டது அரசியலில் திருப்பு முனை என்றுதான் சொல்லவேண்டும்.

திருச்சிக்கு வந்த குஜராத்போலீஸ்!

பாதுகாப்பு கருதி, மாநாடு நடக்கும் பொன்மலை ஜிகார்னர் மைதானம், கடந்த 20-ம் தேதியில் இருந்தே காவல் துறையின் கட்டுப்பாட்டுக்கு வந்தது. மாநாட்டுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னரே குஜராத் உளவுப்பிரிவு ஐஜி. பிரவீன் சின்ஹா மற்றும் குஜராத் போலீஸ் ஐ.ஜி. கேஎன்எல்.ராவ் தலைமையிலான குஜராத் போலீஸார், திருச்சிக்கு வந்து விட்டனர். அதோடு, மைதானத்தை சுற்றியுள்ள பகுதிகளில் தமிழக ஏடிஜிபி. ராஜேந்திரன் தலைமையில், மத்தியமண்டல ஐ.ஜி. ராமசுப்ரமணி, மாநகர கமிஷனர் சைலேஷ்குமார் யாதவ், நுண் ணறிவுப் பிரிவு ஐ.ஜி. கண்ணப்பன், ஐந்து டி.ஐ.ஜி-க்கள், 12 எஸ்.பி-க்கள், ஏழு ஏ.எஸ்.பி-க்கள் என 5,000 போலீஸார் குவிக்கப் பட்டிருந்தனர். மேலும் திருச்சி எல்லையைச் சுற்றியுள்ள எட்டு இடங்களில் செக்போஸ்ட்கள் வழியாகச் செல்லும் அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

களத்தில் இறங்கிய ரஜினி ரசிகர்கள்!

'பி.ஜே.பி-க்கு ஆதரவாக ரஜினி களத்துக்கு வரவேண்டும்' என்று கட்சியின் மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் அழைப்பு விடுத்திருந்தார். ரஜினிமௌனம் சாதித்தாலும், திருச்சி நகரெங்கும் மோடியின் வருகைக்காக பல இடங்களில் ஃப்ளெக்ஸ்பேனர்கள், போஸ்டர்கள் என வைத்து அசத்தினர் ரஜினி ரசிகர்கள்.

ரஜினி தளத்தின் திருச்சி மாவட்டத் தலைவர் ராயல்ராஜன் நம்மிடம், ''தலைவர் ரஜினி உடல்நிலை பாதிக்கப்பட்டு அப்போலோ மருத்துவமனையில் உயிருக்கு போராடிய போது, தமிழகத்தை ஆண்ட அப்போதைய முதலமைச்சரும் சரி… இப்போதைய முதலமைச்சரும் சரி… தலைவரை பார்த்து ஆறுதல் சொல்லவில்லை. ஆனால், மாநிலம்கடந்து வந்து தமிழகத்தில் இருந்த ரஜினியை மோடி சந்தித்தார். அந்த நல்ல மனிதரை வரவேற்கிறோம். அவ்வளவுதான்!'' என்றார். மாநாட்டுக்கு வந்திருந்த வேறுசிலரோ, ''நாங்கள் பல்வேறு கட்சிகளில் இருந்தாலும், தலைவரை சந்தித்து உடல்நலம் விசாரித்த மோடியைப் பிரதமராக்கக் களத்தில் இறங்கி வேலைசெய்ய தயாராக இருக்கிறோம். தலைவர் தலையசைத்தால், இன்னும் தீவிரமாக களமிறங்குவோம்'' என்றனர் உற்சாகமாக.

தேசியமாற்று!

மாலை நான்கு மணிக்கு மாநாடு தொடங்கியது. இல.கணேசன் தனது உரையில், ''திருச்சியில் நடைபெறும் மாநாடுகள் அனைத்தும் திருப்பு முனை மாநாடாக அமையும். பி.ஜே.பி. முடிவெடுப்பதற்கு முன்னதாகவே, மோடி தான் பிரதமர் என்று மக்கள் முடிவெடுத்துவிட்டனர். தமிழகம் என்றும் தேசியத்தின் பக்கம். அந்த தேசிய சிந்தனை, அரசியல் களத்திலும் இருக்கவேண்டும். 1967-க்கு பிறகு மாறிமாறி திராவிடகட்சிகள் ஆட்சியில் இருப்பதை மாற்றி, 'தேசியமாற்று' உருவாகும் நல்ல அறிகுறி இப்போது இருக்கிறது'' என்று கூட்டத்தை உசுப்பேற்றினார்.

காங்கிரஸை விரட்டுவோம்!

மோடி பேச வந்தபோது ஏக ஆரவாரம். எல்லையில் நடந்த தாக்குதலில் பலியான ராணுவ வீரர்களுக்காகவும், நைரோபியில் தீவிரவாத தாக்குதலில் இறந்த மக்களுக்காகவும் மௌன அஞ்சலி செலுத்தச்சொன்ன மோடி, ''தமிழ் மண்ணேவணக்கம். பெரியோர்களே… தாய்மார்களே… வாலிப சிங்கங்களே… அனைவருக்கும் வணக்கம்'' என்று தமிழில்பேச ஆரம்பிக்க… கூட்டத்தில் ஏகஆரவாரம். மீண்டும் தமிழிலேயே தொடர்ந்தார். ''தமிழ்நாடு பெருமை உடையநாடு. கம்பன், வள்ளுவர் பிறந்தபூமி, தமிழ் என்று சொன்னால், காதில் தேன்வந்து பாயும் என்று பாடினான் பாரதியார். திருச்சி, தமிழ்நாட்டின் இதயம்போல் மத்தியில் அமைந்திருக்கும் மாவட்டம்'' என்று தமிழிலேயே பேசிக்கொண்டுபோக… கூட்டத்தில் ஆரவாரம் அடங்க வெகு நேரமானது.

''இங்கு மினி குஜராத், சௌகார்பேட்டை. குஜராத்தில் மினி தமிழ்நாடு, மணிநகர். அதுதான் எனது தொகுதி. மணிநகர் வாக்காளர்கள் என்னை அதிகவாக்கு வித்தியாசத்தில் ஜெயிக்க வைத்தனர். இரண்டு மாநிலங்களுமே கடலோர மாநிலங்கள். குஜராத் மீனவர்கள் பாகிஸ்தானால் கைது செய்யப்படுகிறார்கள். தமிழ்நாடுமீனவர்கள் இலங்கை அரசால் கைது செய்யப்படுகிறார்கள். இப்படி மீனவர்கள் அண்டைநாட்டால் கைது செய்யப்படுவதற்கு பலமற்ற மத்திய அரசேகாரணம். இப்படி ஓர் அரசு இருக்கிறது என்ற நினைப்பே இல்லாத காரணத்தால் தான் அந்த அரசுகள் இப்படிசெய்கிறது. மொழியாலும் இனத்தாலும் காங்கிரஸ் நாட்டை பிரிக்கிறது. ஆட்சியில் இருக்க வேண்டும் என்பதற்காக பல பிரிவினைகளை உண்டாக்குகிறது. நம்நாடு முன்னேறவேண்டும் எனில், காங்கிரஸிடம் இருந்து விடுதலை பெறவேண்டும். இந்தியா சுதந்திரம் பெற்றவுடன் காங்கிரஸ் கட்சியை கலைத்துவிட வேண்டும் என்று காந்திஜிவிரும்பினார்.

அதைச்செய்ய காங்கிரஸ் தவறிவிட்டது. அதை நிறைவேற்றும்பொறுப்பு நமக்கு இருக்கிறது. நான் இதற்கு முன்னும் தமிழகத்துக்கு வந்திருக்கிறேன். பொதுநிகழ்ச்சிகள் பலவற்றில் பங்கேற்று இருக்கிறேன். இவ்வளவு பிரமாண்ட கூட்டத்தைப் பார்த்ததே இல்லை. நான் பேசிக்கொண்டிருக்கும் இந்த மைதானம் சிறிது. எனது பேச்சை கேட்டுக்கொண்டிருக்கும் இளைஞர்கள் கூட்டமோ பெரிது. அந்த இளைஞர் சக்தி டெல்லியில் மாற்றத்தை ஏற்படுத்தும்'' என்று முடித்தார்.

நன்றி ; ஜூனியர் விகடன்

Leave a Reply