குடியரசு தலைவரிடம் இருந்து மத்தியஅரசு பாடம் கற்றுக்கொள்ளவேண்டும் என பாஜக தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பாஜக மூத்த தலைவர் ரவிசங்கர்பிரசாத், தில்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் நிலவிய போதிலும் பேச்சுவார்த்தையில் அரசு ஈடுபட்டது சரியல்ல.

அனுபவத்தில் பாடம்கற்க இந்தியா தவறிவிட்டது. நாட்டு மக்களுக்காக பேசியுள்ள குடியரசுத் தலைவரிடம் இருந்து மத்திய அரசு பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.

பயங்கரவாதக் கட்டமைப்புகளை பாகிஸ்தான் தகர்க்கவேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
“”எல்லையில் என்ன நடந்தாலும் பேச்சுவார்த்தைதொடரும்” என்று இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் சல்மான்பஷீர் கூறியது குறித்துக் கேட்கிறீர்கள். பேச்சுவார்த்தையும் பயங்கரவாதவுமும் ஒரேபாதையில் செல்ல முடியாது. இந்தப் பாடத்தை மத்திய அரசு இன்னும் கற்கவில்லை என்பது வருத்தமளிக்கிறது.

ஜம்மு காஷ்மீரின் கேரன்பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தனது தாக்குதல் திட்டத்தை அமல்படுத்திக் கொண்டிருந்த போதுதான் இந்தியா-பாகிஸ்தான் பிரதமர்கள் நியூயார்க்கில் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அவசரச்சட்டம் வாபஸ்: தண்டனைபெறும் மக்கள் பிரதிநிதிகள் தொடர்பான அவசரச் சட்டத்தை அரசு திரும்பப்பெற்றதற்கு குடியரசுத் தலைவர் தான் காரணம். மத்திய அமைச்சர்கள் சிலரை அழைத்து இந்த அவசரச்சட்டம் குறித்து அவர் சிலகேள்விகளைக் கேட்டார் என்பது ஒட்டுமொத்த உலகிற்கும் தெரியும்.

இந்தவிவகாரத்தில் ராகுல்காந்தி தலையிட்டு கருத்து கூறியதால் அவசரச்சட்டம் வாபஸ் பெறப்பட்டதாகக் கூறப்படுவது தவறு. நாட்டின் மனநிலையே இச்சட்டம் வாபஸ்பெறப்பட காரணமாக இருந்துள்ளது என்றார் ரவிசங்கர் பிரசாத்.

Leave a Reply