பா.ஜ.க பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடியின் பீகார் பயணத்திற்கு வழிவிடும்வகையில் குடியரசுத் தலைவர் பிரணாப்முகர்ஜி தனது பீகார்பயண தேதியை மாற்ற ஒப்புக்கொண்டுள்ளார்.

குடியரசுத் தலைவர் பிரணாப்முகர்ஜி வரும் 26ம் தேதி பீகார்தலைநகர் பாட்னாவில் உள்ள ஐஐடி பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்கிறார். மேலும் வரும் 27ம் தேதி அவர் பாட்னாவில் அமைக்கப்பட்டுள்ள ஜக் ஜீவன் ராமின் சிலையை திறந்து வைக்கிறார். இந்நிலையில் பா.ஜ.க.,வின் பிரதமர் வேட்பாளரான நரேந்திரமோடி வரும் 27ம் தேதி பாட்னாவில் நடக்கும் பேரணியில் கலந்துகொண்டு அங்குள்ள காந்தி மைதானத்தில் நடக்கும் கூட்டத்தில் பேசவிருக்கிறார்.

மோடி பீகாருக்கு வரும்நேரத்தில் குடியரசுத் தலைவரின் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுசெய்து தடைகள் ஏற்படுத்த நிதிஷ்குமார் அரசு முயற்சி செய்வதாக பா.ஜ.க குற்றம்சாட்டியது. இந்நிலையில் பாஜக செய்தித்தொடர்பாளர் ஷாநவாஸ் ஹுசைன் மற்றும் துணை தலைவர் ராஜிவ் பிரதாப்ரூடி ஆகியோர் பிரணாப் முகர்ஜியை இன்று சந்தித்து அவரின் பீகார் பயணதேதியில் மாற்றம் செய்யுமாறு கேட்டுக்கொண்டனர். இதையடுத்து பிரணாப் தனது பயணதேதியில் மாற்றம் செய்துள்ளார். அவர் மோடியின் பேரணிநடக்கும் முந்தைய நாள் அதாவது வரும் 26ம் தேதியே பீகாரில் இருந்து டெல்லி திரும்புகிறார்.

Leave a Reply