சுரங்க முறைகேடுதொடர்பாக கர்நாடக செய்தித்துறை அமைச்சர் சந்தோஷ் லாட்டை அமைச்சரவையில் இருந்து நீக்கக்கோரி, அம்மாநில முதல்வர் சித்தராமையாவின் வீட்டை முற்றுகையிட முயன்ற ஆயிரக் கணக்கான பாஜகவினரை காவல் துறையினர் கைது செய்தனர்.

பெங்களூரு சுதந்திரப் பூங்காவிலிருந்து கர்நாடக பா.ஜ.க தலைவர் பிரஹலாத் ஜோஷி, முன்னாள் துணைமுதல்வர் ஆர்.அசோக், முன்னாள் அமைச்சர்கள் அரவிந்த் லிம்பாவளி, சிடி.ரவி ஆகியோர் தலைமையில் புறப்பட்ட பாஜக.,வினர் முதல்வர் சித்தராமையாவின் வீட்டை நோக்கி செல்ல முற்பட்டனர். அவர்களை போலீஸார் தடுத்துநிறுத்தினர். இதனால், பாஜகவினருக்கும், போலீஸாருக்கும் இடையே கடும்வாக்குவாதம் ஏற்பட்டது.

பின்னர், முதல்வர் வீட்டை பா.ஜ.க.,வினர் முற்றுகையிட முயன்றதால் பிரஹலாத் ஜோஷி உள்ளிட்ட ஆயிரக்கணக் கானோரைக் கைதுசெய்த போலீஸார், பின்னர் அவர்களை விடுதலைசெய்தனர்.

முன்னதாக, சுதந்திரப்பூங்காவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் பிரஹலாத் ஜோஷி பேசியதாவது.

மாநில செய்தித்துறை அமைச்சர் சந்தோஷ் லாட்டுக்குச் சொந்தமான தனியார்நிறுவனம் சட்டவிரோத சுரங்கத்தொழிலில் ஈடுபட்டதற்கான ஆதாரங்களை சமூக மாற்றத்துக்கான அமைப்புத் தலைவர் எஸ்.ஆர்.ஹிரேமத் வெளியிட்டார்.

லோக் ஆயுக்தா அறிக்கையிலும் சந்தோஷ்லாட் மீது குற்றச்சாட்டு உள்ளது. ஆனாலும், அவரை அமைச்சரவையிலிருந்து நீக்க முதல்வர் சித்தராமையா தயங்குவது ஏன் என்பது தெரியவில்லை.

சுரங்க முறைகேடுக்கு எதிராக போராட்டம் நடத்திய சித்தராமையா, தற்போது குற்றவாளிகளை காப்பாற்றமுயற்சிக்கிறார். சந்தோஷ்லாட்டை அமைச்சரவையிலிருந்து நீக்கும்வரை எங்களது போராட்டம் ஓயாது என்றார் அவர்.

Leave a Reply