மக்கள் கூட்டத்தை சகிக்கமுடியாத கோழைகள்  குண்டுவெடிப்பை நிகழ்த்தியுள்ளனர் பிகார் மாநிலம் பாட்னாவில் நரேந்திரமோடி பேசிய பொதுக்கூட்டத்தில் நிகழ்த்தப்பட்ட தொடர் குண்டு வெடிப்பைக் கண்டித்து தமிழகம் முழுவதும் பா.ஜ.க.,வினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை வள்ளுவர்கோட்டம் அருகே திங்கள் கிழமை காலை 10 மணிக்கு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநிலத்தலைவர் பொன். ராதாகிருஷ்ணன், மூத்த தலைவர் இல.கணேசன், தேசியச்செயலர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன், மாநில துணைத் தலைவர் எச். ராஜா, மாநிலச்செயலாளர் வானதிசீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பிகார் மாநில முதல்வர் நிதீஷ்குமார் மற்றும் மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டனர். அப்போது பொன். ராதாகிருஷ்ணன் பேசியதாவது.

காங்கிரஸ் ஆட்சியில் நாடுமுழுவதும் பயங்கரவாதம் வேரூன்றியுள்ளது. நரேந்திரமோடிக்கு திரளும் மக்கள் கூட்டத்தை சகிக்கமுடியாத கோழைகள் இதுபோன்ற குண்டுவெடிப்பை நிகழ்த்தியுள்ளனர்.

நரேந்திரமோடி மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட பிரதமர்வேட்பாளர். அவரது பேச்சு நாடு முழுவதும் மக்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்துவதன் மூலம் மோடியின்பிரசாரத்தை தடுக்க நினைக்கின்றனர். இதற்கெல்லாம் நாங்கள் அஞ்சமாட்டோம். தொடர்ந்து மக்கள்பணியைச் செய்வோம்.

பாட்னாவில் நடைபெற்ற குண்டு வெடிப்புக்கு மத்தியில் உள்ள காங்கிரஸ் அரசும், பிகார்மாநில அரசும் தான் பொறுப்பேற்க வேண்டும்.

மக்களுக்கு உரியபாதுகாப்பு அளிக்க நிதீஷ்குமார் அரசு தவறிவிட்டது. பயங்கரவாதத்தை வேரறுக்க பா,ஜ,க தொடர்ந்து போராடும் என்றார்.

Leave a Reply