பா.ஜ,க பிரதமர்வேட்பாளர் நரேந்திரமோடி பீகார் தலைநகர் பாட்னாவில் கடந்த மாதம் 27-ந் தேதி நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார்.

அப்போது பொதுக்கூட்டம் நடைபெற்ற காந்தி மைதானத்தில் பயங்கரகுண்டுகள் வெடித்தன. இதில் 6 பேர் பலியானார்கள். 83பேர் காயமடைந்தார்கள். பலியானோரின் குடும்பத்தினரை நேரில்சந்திக்க நரேந்திரமோடி திட்டமிட்டார்.

இதற்காக நேற்று இரவு 11.15 மணிக்கு பீகார்மாநிலம் பாட்னா விமானநிலையம் சென்றடைந்தார். அங்கு அவரை பீகார்மாநில முன்னாள் துணை முதல்வர் சுஷில்குமார் மோடி, எதிர் கட்சி தலைவர் நந்த்கிஷோர் ஜாதவ், ரவிசங்கர்பிரசாத், தர்மேந்திரா பிரதான் உள்ளிட்ட தலைவர்கள் வரவேற்றனர்.

காலை பாட்னா அருகே உள்ள கவுரிசவுக் கிராமத்திற்கு நரேந்திரமோடி சென்றார். பொதுக்கூட்டத்தின்போது குண்டுவெடிப்பில் பலியான அந்தகிராமத்தை சேர்ந்த ராஜ் நாராயண்சிங் குடும்பத்தினரை நேரில் சந்தித்து தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார். அப்போது நாராயண் சிங்கின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பலியான நாராயண் சிங்கின் 2மகன்கள் ராணுவத்தில் பணிபுறிந்து வருகிறார்கள். மற்றொருமகன் வேலை இல்லாமல் இருக்கிறார். எனவே அவருக்கு வேலை வாய்ப்பு அளித்து உதவுமாறு நரேந்திரமோடியிடம் பா.ஜ.க எம்எல்ஏ. அருண் சின்ஹா வலியுறுத்தினார். இதைகேட்ட நரேந்திர மோடி, நாராயண் சிங்கின் குடும்பத்தினருக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் பா.ஜ.க செய்யும் என்று உறுதி அளித்தார்.

பின்னர் நாலந்தா மாவட்டம் சர்மீராபகுதியில் உள்ள பலியான ராஜேஷ்குமாரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்தார். ராஜேஷ் குமாரின் நோயுற்ற தாயாரிடம் ஆறுதல் தெரிவித்தார். இதேபோல கைமுர் மாவட்டத்தைசேர்ந்த பலியான 35 வயது வாலிபர் விகாஷ் குமாரின் மனைவி, குழந்தைகளை நேரில்சந்தித்தார். நீங்கள் எனது குடும்ப உறுப்பினர்கள் என்று கூறிய நரேந்திரமோடி அவர்களின் மன கவலைகளை உன்னிப்புடன் கேட்டறிந்தார். உங்களது குடும்பத்தினருக்கு பாஜக அனைத்து உதவிகளையும்செய்யும் என்று உறுதியளித்தார்.

இதே போல பேகுசராய் பகுதியைசேர்ந்த பலியான பிந்தேஸ்வரி சவுத்திரியின் உறவினர்களை நேரில்சந்தித்து ஆறுதல் கூறினார். இந்த சந்திப்பின் போது நரேந்திரமோடி மேற்கண்ட 4 பேரின் குடும்பத்தினருக்கும் பாஜக சார்பில் உதவிதொகையாக தலா ரூ.5 லட்சத்துக்கான காசோலைகளை வழங்கினார்.

பலியோனர் குடும்பத்தினரை நரேந்திர மோடி சந்தித்த போது, பீகார் மாநில முன்னாள் துணை முதல்வர் சுஷில் குமார் மோடி, சட்டசபை எதிர்கட்சி தலைவர் நந்த்கிஷோர் ஜாதவ் ஆகியோர் உடன் இருந்தனர்.

சூபவுல் மாவட்டத்தை சேர்ந்த பாரத்ராஜக், கோபால்கஞ்ச் மாவட்டத்தை சேர்ந்த முன்னா ஸ்ரீவத்சவ் ஆகியோரும் குண்டுவெடிப்பில் பலியானார்கள். வானிலை மோசமாக இருந்ததால் அங்கு நேரில்செல்லும் பயணத்தை நரேந்திரமோடி ரத்துசெய்தார்.

மாறாக பலியானவர்களின் அந்த குடும்பத்தினரை தொலை பேசியில் தொடர்புகொண்டு ஆறுதல் கூறினார். அடுத்த தடவை நேரில் வருவதாகவும், கட்சி சார்பில் தலா ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்றும் அவர்களிடம் தெரிவித்தார்.

பீகாரில் சுற்றுப்பயணம் செய்த நரேந்திரமோடிக்கு பிரதமருக்கு நிகரான பாதுகாப்பு வழங்கப்பட்டது. 35 கறுப்புபூனை படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதுதவிர குஜராத் மாநில போலீசார், வெடி குண்டு நிபுணர்களும் சென்றிருந்தனர்.

பீகார் சுற்றுப்பயணத்தை முடித்துகொண்டு நரேந்திர மோடி குஜராத் திரும்பினார். முன்னதாக பாட்னா விமானநிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

பாட்னாவில் நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில் குண்டுகள் வெடித்தபோது, பீகார்மக்கள் தைரியமாக நின்றார்கள். குண்டுகளை கண்டு அவர்கள் பயப்படவில்லை. அவர்கள் மிகவும் அமைதிகாத்தார்கள். இதுபோன்ற காட்சியை சினிமாவில் மட்டுமே பார்க்கமுடியும்.

இது மத்தியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசையும், பீகாரில் நிதிஷ்குமார் அரசையும் தூக்கி எறிய மக்கள் உறுதிப் பூண்டு இருப்பதை காட்டுகிறது. இருட்டுக்குபிறகு நிச்சயம் வெளிச்சம் ஏற்படும். இவ்வாறு நரேந்திர மோடி கூறினார்.

Leave a Reply