பாஜக. பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி நாடெங்கும் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். பீகார்மாநிலம் பாட்னாவில் கடந்தமாதம் அவர் கலந்துகொண்ட கூட்டத்தில் இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 6பேர் பலியானார்கள். இதை தொடர்ந்து நரேந்திரமோடிக்கு பிரதமருக்கு இணையான பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நரேந்திரமோடி உயிருக்கு பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ. குறிவைத்து இருப்பதை மத்திய உளவுத்துறை கண்டு பிடித்துள்ளது. காலிஸ்தான் தீவிரவாதிகள்மூலம் தங்கள் சதி திட்டத்தை நிறைவேற்ற ஐஎஸ்ஐ. திட்டமிட்டுள்ளதையும் உளவுத் துறை மோப்பம் பிடித்துள்ளது.

மோடியை தற்கொலைதாக்குதல் மூலம் படுகொலைசெய்யும் திட்டத்துடன் ஒருகுழுவை பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ. அனுப்பி இருப்பதும் தெரியவந்துள்ளது. இந்த சதி திட்டம்பற்றி மத்திய உள்துறைக்கு உளவுத் துறையினர் தெரிவித்து உஷார் படுத்தியுள்ளனர்.

இதன் தொடர்ச்சியாகத்தான் நரேந்திரமோடிக்கு 3 அடுக்கு பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது.
மோடிக்கு பாகிஸ்தான் உளவுஅமைப்பும், தீவிரவாதிகளும் குறிவைத்திருப்பது உறுதியாகி இருப்பதால் இனி அவர் பங்கேற்கும் பொதுக்கூட்டங்களில் மத்திய மாநில அரசுகளின் பாதுகாப்புபடையினர் ஒருங்கிணைந்து செயல்பட திட்டமிடப்பட்டுள்ளது. அவர்களுடன் குஜராத்மாநில போலீசாரும் பாதுகாப்புபணியில் ஈடுபடுவார்கள்.

நரேந்திரமோடி வரும் 17–ந்தேதி கர்நாடகமாநில தலைநகர் பெங்களூரில் நடைபெற உள்ள பிரமாண்ட பிரசாரகூட்டத்தில் கலந்துகொள்ள உள்ளார். பெங்களூர் அரண்மனை மைதானத்தில் நடைபெறும் இந்தகூட்டத்தில் சுமார் 6 லட்சம் பேர் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையொட்டி பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுவருகிறது. 6 லட்சம் தொண்டர்களுக்கு உணவுவழங்க 8 இடங்களில் பெரிய சமையல்கூடங்கள் திறக்கப்பட்டுள்ளன.

கூட்டம்நடக்கும் அந்த மைதானம் இப்போதே மாநிலபோலீஸ் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. குஜராத் மாநில போலீசார் இந்தவாரம் அந்த மைதானத்துக்குசென்று பார்வையிட்டு மோடிக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய திட்டமிட்டுள்ளனர்.

Leave a Reply