அரபு நாடுகள், ஆப்ரிக்க நாடுகளைப் போன்று இந்தியாவில் உள்ள பிரச்னைகளுக்கு தீர்வு தேவைப்படுவது மல்லிகை மறுமலர்ச்சி அல்ல. தாமரை மறுமலர்ச்சி தான் தேவை. நாட்டில் புதியதொரு மறுமலர்ச்சி ஏற்படுவதே அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு என நியூடைமன்ட்சன் என்ற இணயைதள பத்திரிகையில் அரசியல் விமர்சகர் திப்வா சுந்தர் எழுதியுள்ள விமர்சனத்தில் கூறப்பட்டுள்ளது.

துனீசியா, எகிப்து, லிபியா, பஹ்ரைன், ஏமன் உள்ளிட்ட நாடுகளை முறையாக செயல்படாத அரசை எதிர்த்து மக்கள், தெருக்களில் இறங்கி போராட்டம் நடத்தி உள்ளனர். அரசுக்கு எதிராக மக்கள் நடத்தும் இந்த போராட்டத்திற்கு மல்லிகை மறுமலர்ச்சி எனப் பெயரிடப்பட்டது. இதனால் பெரிய அளவில் அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. ஆனால் இந்தியாவில் ஊழல்கள், அந்நிய சக்திகளின் ஊடுருவல், விலைவாசி உயர்வு, எல்லை தாண்டிய பயங்கரவாத தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் இருந்தும் மறுமலர்ச்சி தேவைப்படாதது ஏன் என்ற கேள்வியை எழுப்பி உள்ளது.

அரசை எதிர்த்து ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டம் நடத்தி, முழக்கமிடுவது வெளிநாடுகளில் சாதாரணமாக காணப்படுகிறது. ஆனால் இந்தியாவிலோ தனியார் நிறுவனங்கள் அரசை இயக்கி வருவது ஒருபக்கம், அரசின் செயல்பாடுகளுக்கு நீதித்துறை கண்டனம் ஒருபக்கம், எதிர்க்கட்சிகளின் முழக்கங்கள் ஒரு பக்கம், மீடியாக்கள் மூலம் மக்களின் நெருக்கடிகள் ஒரு பக்கம் இருந்த போதிலும் குற்றங்களுக்கு எதிராக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுத்தபாடில்லை.

அரசின் முக்கிய அதிகாரத்தில் இருப்பவர்களே ஊழல்களில் ஈடுபடுவது தெரிந்தும் பிரதமரோ அல்லது ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியாவோ எந்த குற்றத்திற்கும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மிகப் பெரிய பொருளாதார நிபுணரான பிரதமரோ, குற்றங்களை தடுக்க நடவடிக்கையோ அதற்கு எதிராக குரல் கொடுக்கவோ இல்லை. சோனியாவோ, நாட்டின் பிரதமரின் முடிவு முட்டாள் தனமானது எனக் கூறும் தன் பிள்ளையைக் கூட கட்டுப்படுத்த முடியாத நிலையில் உள்ளார்.

ஊழல் உள்ளிட்ட விவகாரங்களில் தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் சரியாக தலையிட்டு, அதற்கு உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் விலைவாசி உயர்வு, அந்நிய ஊடுருவல் உள்ளிட்ட விவகாரங்கள் தலைதூக்காமல் இந்தியாவின் வளர்ச்சி உரிய பாதையில் சென்றிருக்கும். பிரதமர், திட்டக்குழு துணைத் தலைவர் மான்டேக்சிங் அலுவாலியா உள்ளிட்ட பொருளாதார நிபுணர்களை நிதித்துறை பெற்றிருந்தும் பணவீக்கமும், விலைவாசியும் உச்சத்திலேயே உள்ளது. இத்தகைய பிரச்னைகளை தீர்க்க ஒரே வழி அரசுக்கு எதிராக மக்கள் வாக்களித்து புதியதொரு மறுமலர்ச்சியை ஏற்படுத்த வேண்டும்.

காங்கிரசிற்கு சரியானதொரு மாற்றாக பா.ஜ., திகழும் என பெரும்பாலான மக்கள் கருதுகின்றனர். முந்தைய பா.ஜ., ஆட்சியின் நாட்டின் பல பிரச்னைகளுக்கு அதிரடி முடிவு எடுக்கப்பட்டு, தீர்வு காணப்பட்டுள்ளது. 2004 மற்றம் 2009ம் ஆண்டு தேர்தல்களில் பா.ஜ., தோல்வி அடைந்ததற்கு முக்கிய காரணம், இந்தியா ஒளிர்கிறது என்ற வாசகமும், பிரதமர் மன்மோகன் சிங்கை தனிப்பட்ட ரீதியாக மிக அதிகளவில் விமர்சித்ததுமே என பல ஆய்வுகளும், பா.ஜ., தலைவர்களும் தெரிவித்துள்ளனர்.

ஆனால் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்னையான சூழ்நிலை காரணமாக காங்கிரஸ் மட்டுமின்றி மத்திய அரசின் மீதும் மக்கள் அதிக அளவில் அதிருப்தி அடைந்துள்ளனர். இதனால் பா.ஜ.,விற்கு ஆதரவாக ஓட்டளித்து தாமரை மறுமலர்ச்சியை ஏற்படுத்த நினைத்துள்ளனர். காங்கிரசிற்கு மாற்றான ஒரு கட்சியை மக்கள் ஆட்சியில் அமர்த்த விரும்புவதால், அதற்கு பா.ஜ.,வே பலமானதொரு மாற்றாக திகழும் என்பதே பெரும்பாலானவர்களின் கருத்தாகும்.

நன்றி; தினமலர்

Leave a Reply