இலங்கை காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் கூட்டத்தில் இந்தியா பங்கேற்கக்கூடாது என்று மத்திய அரசிடம் வலியுறுத்தவேண்டும் என தில்லியில் உள்ள பாஜக அகில இந்திய தலைவர்களிடம் தமிழக பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தலைமையிலான குழு நேரில்வலியுறுத்தியது.

சென்னையில் புதன் கிழமை நடைபெற்ற தமிழக பா.ஜ.க மையக்குழு கூட்டத்தில், இலங்கையில் நடைபெறும் கூட்டத்தை இந்தியா புறக்கணிக்கவேண்டும் என்பதுதான் பா.ஜ.க.,வின் நிலைப்பாடு என்று தெரிவிக்கப்பட்டது.

இதை மத்தியில் உள்ள அகில இந்திய பா.ஜ.க தலைவர்களிடம் விளக்குவதற்காக தமிழக பா.ஜ.க தலைவர் பொன். ராதாகிருஷ்ணன், மூத்த தலைவர்கள் இல கணேசன், லட்சுமணன் ஆகியோர் புதன்கிழமை மாலையில் தில்லிவந்தனர். அதைத் தொடர்ந்து, புதன், வியாழன் ஆகிய நாள்களில் அவர்கள் அகிலஇந்திய தலைவர் ராஜ்நாத்சிங், மக்களவை எதிர்க் கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ், மூத்த தலைவர் எல்கே. அத்வானி ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

இதுகுறித்து பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பொன். ராதாகிருஷ்ணன், "பா.ஜ.க மேலிட தலைவர்களை சந்தித்து தமிழகமக்களின் உணர்வுகளை தெரிவித்தோம். இலங்கை விவகாரத்தில் தமிழர்களின் உணர்வுகளை மேலிடத்தலைவர்கள் மிகவும் நன்றாக உணர்ந்துள்ளனர். ஆகவே, தமிழர்களின் உணர்வுகள் அடிப்படையில் தான் எங்கள் கட்சியின் நிலைப்பாடு இருக்கும்.

மக்களவை தலைவர் சுஷ்மாஸ்வராஜை சந்தித்தபோது, காமன்வெல்த் கூட்டத்தில் இந்தியா பங்கேற்பது தொடர்பாக பாஜகவின் கருத்தை மத்திய அரசு இதுவரைகேட்கவில்லை. பா.ஜ.க தரப்பில் இருந்தும் இந்த விவகாரத்தில் அதிகாரப்பூர்வகருத்து வெளியிடவில்லை என்று தெளிவாகக் கூறினார்.

எனவே, இலங்கை தமிழர்களின் நலன்களை உறுதிப்படுத்தும் வகையிலும் தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையிலும் அந்நாட்டில் நடைபெறவுள்ள காமன்வெல்த்நாடுகள் கூட்டத்தில் இந்தியா கலந்துகொள்ளக் கூடாது என்று மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும் என மேலிட தலைவர்களிடம் வலியுறுத்தினோம்' என்றார் பொன். ராதாகிருஷ்ணன்.

பாஜக மூத்த தலைவர் இல. கணேசன் கூறியது:

"அகில இந்தியதலைவர்களில் ஒருசிலர் தனிப்பட்ட முறையில் காமன்வெல்த்மாநாடு தொடர்பாக கருத்து வெளியிட்டிருக்கலாம். அது கட்சியின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடகாது. இந்தவிஷயத்தில் தமிழர்களின் உணர்வுகளை மிகத்தெளிவாக மேலிடத் தலைவர்களிடம் விளக்கியுள்ளோம்.

இலங்கை இனப்படுகொலை விவகாரத்தில் மத்தியில் ஆளும் காங்கிரஸ்கூட்டணி அரசுக்கும் சமபங்கு உண்டு. இந் நிலையில், இலங்கை கூட்டத்தில் இந்தியா கலந்துகொண்டு அந்நாட்டை எவ்வாறு கண்டிக்கவோ அழுத்தம்கொடுக்கவோ முடியும்?

மத்தியில் நரேந்திரமோடி தலைமையிலான ஆட்சி 2014-ஆம் ஆண்டில் மலரும் என நம்புகிறோம். அப்போது, நீடித்துவரும் இலங்கை தமிழர், தமிழக மீனவர்களின் பிரச்னைகளுக்கு நிரந்தரத்தீர்வு காணப்படும்' என்றார் இல. கணேசன்.

Leave a Reply